Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, December 31, 2010

"புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"

               ந்த வார துவக்கத்தில் திருச்சிக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.அங்கு அடியேன் சென்று இறங்கிய நாள் தொட்டு ,மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறும் வரையில் மூன்று நாட்களும் நசநசவென்று தூறலும், மழையும் ! நல்லவனாகவே இருக்கப்படாதப்பா...என்று என்னை நானே சபித்தேன்.. ஏனெனில், போன காரியத்தை கவனிக்க முடியாமல் இப்படி மழையால்  தொந்தரவு வரும் என்றால் எதற்காக இத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்? ( ஹி..ஹி கொஞ்சம் ஓவராயிடிச்சோ?)

               மழைக்காக ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது சின்னையா  பிள்ளை சத்திரத்தில் தற்போது அமைத்திருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தென்பட்டது. அங்கிருந்த ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் வலையை மேய்ந்துவிட்டு வலைப்பூவை முகர்ந்து கொண்டிருந்தபோது என் பக்கத்து சிஸ்டத்தில் ஏதோ டைப் அடித்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தன் வேலையை விட்டு விட்டு என் வலைப்பூவை நோட்டமிடத் தொடங்கினார்.
"என்ன ப்ளாகா?" என்றார்.
"அமாம்" என்றேன், கித்தாப்பாக.
"என்ன பேர்ல எழுதறீங்க?"
"எல்லென் என்ற பெயரில்"- இது நான்.
விஷயம் தெரிந்த ஆசாமி போல இருக்கிறதே என்று நான் யோசிக்கும் முன்பே , அவர் எழுந்து என் கையைக் குலுக்கினார். " சமீபத்தில்தான் ப்ளாக்கில் உங்கள் படைப்புகளை பதிவு பண்ணத்தொடங்கி இருக்கிறீர்கள் அல்லவா? வெரி குட்... நன்றாக இருக்கிறது... கதைகளும் சரி... உங்கள் ஓவியங்களும் ரசனைக்குரியதாய் உள்ளன...தொடர்ந்து எழுதுங்கள் ", என்று என்னை உற்சாகப்படுத்தினார் .
எனக்குள் ஒரு நடுக்கம் பரவியது... " ஐயா ...தாங்கள்......?" என்று இழுத்தேன்.
"ஹாஹ்ஹா.... நானா ? " என்று சிரித்தவர், தனது ஜோல்னாப் பைக்குள்  கைவிட்டு  தன் விசிட்டிங் கார்டை நீட்ட , எனக்கு வியப்பும் சந்தோஷமும்... அந்த மனிதர்  வேறு யாருமில்லை... உயர்திரு ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள்தான் !! அடியேன்  ஒரு ப்ளாக்கைத் தொடங்குவதற்கு இவருடைய ப்ளாக்கே காரணம். எமது ஒவ்வொரு படைப்பையும் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்த்து விமரிசனம் செய்து உற்சாகம் ஊட்டிய பெருமகனார்... என் கண் முன்னே... ஆஹா ,என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் ... அவர் கைகளை கால்களாய் எண்ணி ஒற்றிக் கொண்டேன்... பொது இடமானதால் அவ்வளவு மரியாதைதான் செய்ய முடிந்தது...
அவருடைய சிறிய வேலை அந்த சென்டரில்  முடிந்ததும் வெளியில் வந்து வெகு நேரம் பேசினோம். மிகுந்த எதார்த்த சிந்தனைகளுடனும் அதீத நகைச்சுவை உணர்வுகளுடனும் அவர் பேசியவை அனைத்தும் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 
மூன்று ப்ளாக்குகள் எழுதுகிறார்.... .எனினும் சற்றும் கர்வமே இன்றி முதல் அறிமுகத்திலேயே  என்னுடன் அத்தனை நட்பு பாராட்டினார்... அவருடைய  பாசாங்கற்ற 
எழுத்துகளைப் போலவே அவரும் இருந்தார்... அவருடைய கீர்த்தனைகளைப் பற்றி சிலாகித்து நான் பேசிய போது அடக்கத்துடன் "எல்லாம் அவன் அருள்..." என்றார்.
"வீடு, தி.கோயிலில்தான் ... வாருங்களேன்.." என்றார்...
முகவரி வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டேன்... "அடுத்த முறை வரும்போது அவசியம் வருகிறேன்" என்றேன்."வரும்போது மறக்காமல் ஒரு கோணிப்பை எடுத்து வருகிறேன்... உங்கள் இல்லத்தில் விளைந்திருக்கும் மா, கொய்யா, மாதுளை,சப்போட்டா பழங்களை அள்ளிச் செல்வேன்" என்று அடியேன்  சொன்னேன். 
"மிகவும் சந்தோஷம்.... நான் எழுதியதை இன்னமும் நினைவு வைத்துள்ளீர்களே' என்றவர் "புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"என்று கூறி விடை பெற்றார்.
             அன்று பெய்த மழையை மிகவும் வாழ்த்தினேன் !
 

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு நண்பரே. எதிர்பாராமல் நடந்த நல் சந்திப்பு. எனக்கும் அவருடன் சிறிது நேரம் அளவளாவ நேரம் கிடைத்தது சென்ற என் திருச்சி பயணத்தின் போது. முதல் முறை பார்க்கின்றோம் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை.

பகிர்வுக்கு நன்றி.

ரிஷபன் said...

’அண்ணன்’ அய்யா ஆர்.ஆர்.ஆர். நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷன். அவர் சக்திக்கு எத்தனை பிளாக் வேணா வச்சுக்கலாம். அவ்வளவு திறமை அவரிடம். கூடவே அடக்கமும். புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவர் சக்திக்கு எத்தனை பிளாக் வேணா வச்சுக்கலாம்//
ரிஷபன் அவர்களின் வரிகளைப் படித்ததும், எனக்கு சிரித்துப் புரையேறிப் போனது. நகைச்சுவைக் குறும்புகளில் இராமமூர்த்திக்கு சற்றும் சளைத்தவர் இல்லை ரிஷபன் என்பதை நிரூபித்து விட்டார்.

தங்களின் எதிர்பாராத சந்திப்புப் பற்றிய பதிவு, உண்மையில் என் கண் எதிரே நடந்தது போலவே வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.