Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, October 29, 2010

ரசமான ரசம் !
(இந்த கதையைப் போல்  எல்லோருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்திருக்கும்.... 'நமக்கு  முன் கூட்டியே இப்படி நடக்கும் என்று தெரியாமல் போனதே' என்று எத்தனையோ முறை புலம்பியிருப்போம்... அப்படித்தெரியாமல் போவதுதான்  வாழ்க்கையின் சுவாரஸ்யமே! )

"என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா ,ரசமில்லையா  ?"-என்றான் ரூபன், சலிப்புடன்.(அப்படி கேட்டிருக்க வேண்டாம்.)

"ஒங்க அருமை புள்ளையை   கடைக்கு அனுப்பி தக்காளி,கொத்துமல்லி,பூண்டு வாங்கிட்டு வரச் சொல்லுங்க ...வேணா ரசம் வைக்கிறேன்" -இது சுமதி.

"குயந்தை புஸ்தகத்தே எடுத்து வெச்சிண்டு  படிக்கறதே அபூர்வம்...படிக்கட்டும். நானே போயி வாங்கிட்டு வந்துடறேன்" என்றபடி  செய்தித்தாளை  கடாசி விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். (கிளம்பியிருக்கவேண்டாம்.)

செருப்பை மாட்டிக்கொண்டிருக்கையில் "இந்தாங்க ஸ்கூட்டர் சாவி" என்றாள் சுமதி.

"ஆமா இங்க இருக்கற மார்கெட்டுக்கு ஸ்கூட்டர்ல போகணுமா?..நடந்தே போயிட்டு வந்துடறேன்" என்று தெருவில் இறங்கினான்.  (ஸ்கூட்டர்லியே போயிருக்கலாம்)

நடந்து மெயின் ரோடை அடைந்ததும், ட்ராபிக் சிக்னலுக்காக அவனை ஒட்டி வந்து நின்றது ஒரு பேருந்து. 'அவ்வளவு தூரம் நடக்கணுமா? ரெண்டு ரூபா கொடுத்து மார்க்கெட்டுக்கு போயிடலாமே..' என்று (தோன்றாமலிருந்திருக்கலாம்) தோன்றியது.

பஸ்சிலும் கூட்டமில்லை. பின்பக்க நுழைவு வழியாக ஏறி சீட்டில் அமர்ந்தான், ரூபன். கண்டக்டர் , டிரைவருக்கருகில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.'இங்க வரட்டும்.. டிக்கட் வாங்கிக் கொள்ளலாம்' என்று இரண்டு ரூபாய் நாணயத்தை கையில் வைத்துகொண்டு வெளியில்  வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.(அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்திருக்கலாம்)

ஏதேச்சையாக  ரூபன் பஸ்சிற்குள் பார்க்க, அவனுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜிப்பாவை ஒரு ரௌடி 'ப்ளேடு' போடவும் ரூபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது! "ஐயோ..திருடன்" என்று கத்தியபடி 'ஆக்ஷன் கிங் அர்ஜுனாக' தன்னை பாவித்துக் கொண்டு ,ரூபன் அந்த ரௌடியின் முதுகுப் புற சட்டையைக் கோர்த்துப் பிடித்து ஓங்கி ஒரு குத்து விட்டான். 'சர்ட்'டென்று  திரும்பிய ரௌடி , பின்பக்க நுழைவு வழியாக இறங்கி ஓட முயல, ரூபனும் அவனைத் துரத்திக் கொண்டு ரன்னிங்கிலேயே இறங்கி துரத்த, அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ரௌடி, ரூபனுடைய  இடது  கையில்  'சரக்'கென்று கத்தியை செருகி வெளியே எடுத்ததில் 'குபுக்'கென்று ரத்தம் கொட்டியது. கொட்டிய 'ஏ' பாசிடிவைப்  பார்த்த  ரூபன், மயங்கி சரிய  ரௌடி'எஸ்'ஆனான்.

'சடன்'  ப்ரேக் போட்டு நின்ற பஸ்சில்லிருந்து கண்டக்டரும், பர்சைப் பறி கொடுத்த  பெரியவர் உட்பட அனைவரும் இறங்கி ஓடி வந்தனர்.

"பிக்பாக்கெட்டுங்க  நிறைய பேர் சுத்தறுதுனால நான் பைசாவே பர்சுல வைக்காமே பைக்குளையே வெச்சுக்குவேன்...இது  தெரியாம இப்படி  குத்துப்படணும்னு ஒன் தலையெழுத்து  " என்று பெரியவர் சொன்னதும்,  "யோவ்.. டிக்கெட் வாங்கிட்டியா இல்லியா" என்று கண்டக்டர் கேட்டதும் மயக்க நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த ரூபனுக்கு அமானுஷ்யமாகக் கேட்டது.

***** 
ஹாஸ்பிடல்.

கையில்  கட்டுப் போட்டபடிக் கட்டிலில் கிடக்கும் ரூபனுக்கருகில் மூக்கை முந்தானையில் சிந்தியபடியிருந்தாள், சுமதி."என்னங்க... பசிக்குதா... சாப்பிடறீங்களா?" என்றாள்.

"ம்ம்ம் ...ம்ம்"   என்று முனகியபடி உட்கார்ந்தான் , ரூபன்.

தட்டில் ,சோறிட்டு சாம்பாரை ஊற்றியவளிடம் "என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா,ரசமில்லையா  ?"என்று இத்தனைக்கும் காரணமான முதல் வரி கேள்வியைக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான், ரூபன்.

Wednesday, October 27, 2010

அனிதா

நான்தான் டெலிபோனில் அழைத்தேன்."ஹலோ அனிதா, நான் ஜெகன் சென்னையிலிர்ந்து பேசறேன்.எப்படி இருக்கீங்க?
"ஓ ! ஜெகன் , நான் நல்லா இருக்கேன் "-குரலில் சின்னதாய் ஒரு தயக்கம்.
"ஒங்க ட்ரான்ஸ்பர் ஆர்டர் பார்த்தேன்.வெல்கம்  டு அவர் நுங்கம்பாக்கம் பிராஞ்ச். எப்ப ஜாயின் பண்ணப் போறீங்க?"
"வர்ற புதன்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன் " 
என் உற்சாகத்தின்  பத்து சதவீதம் கூட அனிதாவின் குரலில் இல்லை.ஏன்... என்னாயிற்று? 
"புதன்கிழமை நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுங்க....டிபன் முடிச்சிட்டு ஆபிஸ் போகலாம் " என்றேன்.
"எதுக்கு ஜெகன்.. சிரமம்.. எங்க அண்ணன் வீடு நுங்கம்பாக்கம் பிராஞ்ச்க்கு பக்கத்திலேதான். அங்கிருந்து வந்துடுவேன்." என்றவள் அவசர அவசரமாக "பிராஞ்ச்ல மீட் பண்ணுவோம்" என்று சொல்லி போனை துண்டித்தாள்.
ம்ம்ம்.ம்ம்  கிட்டத்தட்ட 15 வருட பழக்கம். நான் திருச்சியில் கிளார்க்காக வேலை  பார்த்த போது, அனிதா  எனக்கு ஜூனியராக ஜாயின்  செய்தாள். நாகர்கோயில் பெண்.மிதமான அழகு. மிகவும் திருத்தமாக  உடை அணிந்திருந்தாள் .ஆனாலும்  பார்வையில் ஒரு மிரட்சி.கூடவே வந்த அவள் அப்பாதான் எங்கள் எல்லோரிடமும் "கொஞ்சம்  பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டுப் போனார்.
நான் உள்பட சில நண்பர்கள் அவளுக்கு நட்பாக இருந்து பேங்க்கின் அன்றாட அலுவல் விஷயங்களை சொல்லிக் கொடுத்தோம். கற்பூர புத்தி. ஒரே வாரத்தில் பிடித்துக் கொண்டாள் . அப்போது , திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏயில் தங்கியிருந்து ஆபீசுக்கு வந்தாள். அவள் ஊர் அளவுக்கு சாப்பாடு நன்றாக இல்லை என அடிக்கடி புலம்புவாள். நாங்கள் வீட்டிலிருந்து  எடுத்து வரும்போது அவளுக்கும் சேர்த்தே எடுத்து வருவோம்.ஒன்றாக லஞ்ச சாப்பிடுவோம்.
அந்த வருட  தீபாவளியின்போதுதான் அவள் எங்கள் எல்லோருக்கும் மிக நெருக்கமானாள். தீபாவளியை  ஒட்டி அவள் ஹாஸ்டல் ஒட்டுமொத்தமாக    
காலியாகிவிட அவள் நாகர் கோயிலுக்கு போகாததால் எங்கள்  வீடுகளுக்கு விசிட் அடிப்பதாக ப்ளான். ஒரு லேடி கிளார்க் தீபாவளிக்கு முதல் நாளிரவு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டார்கள். அங்கே தங்கி தீபாவளி கொண்டாடி விட்டு மறு நாள் என் வீட்டிற்கு வந்தாள். 
என் அம்மா அனிதாவிற்கு ஒரு சாரி வைத்துக் கொடுத்து அதை அணிந்து கொள்ளச் சொன்னாள். அம்மாவின் அந்த அன்பிலும், எங்களின் கூட்டுக் குடும்ப அட்டகாசங்களிலும் நனைந்து நெகிழ்ந்து போனாள். "ஜெகன்,ஒங்க அம்மாவுக்கு நான் க்ரிச்டியன்னு தெரியுமா?"ன்னு கேட்டாள். மதியான சாப்பாட்டுக்கு முன்பு எங்க சித்தப்பா "அனிதாவோட ஜீசசும் நம்பளோட கிருஷ்ணரும் ஒண்ணுதான்னு" ஒரு பெரிய உரை நிகழ்த்தினார். 
எங்கள் வீட்டு 18 உருப்படிகளுடனும் அனிதாவிற்கு நன்றாக டயம் பாஸ் ஆனது.
 
"ரொம்ப்ப்ப பிடிச்சிருந்தது" என்றாள், மறு நாள் ஆபீசில்.
அதற்க்கப்புறம் என் வீட்டு சாப்பாடு முதலில் அவள் கைக்குப் போய் விட்டுத் தான் எனக்கு வரும்.என் நண்பர்கள்தான் ,"ஏண்டா ஜக்கு, அம்மாகிட்ட சொல்லி மேலாக உப்பு போட்டு அனுப்ப சொல்லுடா" என்பார்கள். அவளுடைய பிரத்யேக ஷாப்பிங்களுக்கு நளினி,ஜெயந்தி  ஆகியோரும் , புத்தகம் மற்றும் இதர ஷாப்பிங்களுக்கு நான் , சுந்தர், பாலா மூவரும் கம்பெனி கொடுப்போம்.
இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான்.....
ஒரு முறை அனிதா நாகர்கோயிலுக்கு லீவில் போனாள். நானும், சுந்தரும்  பஸ்சில்லேற்றிவிடப் போனோம். நடு வழியில் பசித்தால் இருக்கட்டும்  என்று கொஞ்சம் பிஸ்கட்டும்,பழங்களும் வாங்கிக் கொடுத்தேன்."தேங்க்ஸ்"என்றாள்.

நான்கு நாள் லீவு முடிந்து வந்த அனிதா, எதையோ பறிகொடுத்தவள் போல இருக்கவும், நண்பர்கள் "என்னாயிற்று" என்று விசாரித்தோம்.ஒன்றும் பதில் இல்லை. கலகலப்பு இல்லாமல் அவள் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது.  நாங்கள் எங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டதுதான் மிச்சம்.அனிதாவிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்! 

லஞ்சின் போது கூட அனிதா  தனியாக சாப்பிடத் தொடங்கினாள். "என்னன்னும் சொல்ல மாட்டேங்கிறா...ஊரில் ஏதாவது ப்ராப்லமோ  என்னமோ...கொஞ்ச நாள் அவ போக்கிலேயே விட்டு விடுவோம்" என்றாள், ஜெயந்தி.

விட்டு விட்டோம்.

ஒரு நாள் நான் கேஷில் இருந்தேன். மாதக் கடைசியானதால் வங்கியில் கூட்டமும்  அதிகம் இல்லை. பணத்தை கட்டி வைத்துக் கொண்டிருந்தேன். அனிதா என் காபினுக்குள்  வந்தாள். "ஜெகன்,ஒரு வாரமாகவே என் மனசு சரியாகவே இல்லை. நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ...." என்றாள்.
"என்ன?" 
"ஐ லைக் யு" என்றாள்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது ! இன்ஸ்டண்டாக வியர்த்தது!! 
எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டேன். "என்ன சொல்றே,அனிதா?" என்றேன் 
"எஸ்... வாழ்ந்தா உன்னோடத் தான் வாழணும்னு நினைக்கிறேன். உன்னை,உன்னோட அன்பை, உன்னோட குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...அதிகப்பிரசங்கித்தனமா பேசறேன்னு நினைக்காதே...லைப் பூரா உன் கூட வாழணும்னு நினைக்கிறேன். மறுக்க மாட்டியே?" என்று கண்கள் கலங்கக் கேட்டாள்.
"சாயங்காலம் பேசலாம்"  என்று சமாதானமாய்க்  கூறினேன்.

அன்று மாலை அவளைச் சந்தித்து இந்த ஒரு தலைக் காதல் எப்படி திருமணமாய் பரிணமிக்க முடியாது என்பதை மிகுந்த கவனமான வார்த்தைகளைக் கொண்டு அவள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினேன். அனிதா  தன மனதை மிக மிக அந்தரங்கமாக என்னிடம் பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றியையும்  , அவள் காதலை நான் ஏற்றுக் கொள்ள இயலாத நிலைக்கான காரணத்தையும் மிகவும் பக்குவமாக சொன்னேன் .

அழுகையினூடே ,புரிந்து கொள்ள முயற்சிப்பதாக  சொன்னாள்."என்னை நிராகரித்து விட்டாலும் உன் மேல் எனக்கு கோபம் இல்லை .....உன்னிடம் எனக்கு இன்னும் காதல்தான் அதிகமாகிறது" என்றாள், கண்களைத் துடைத்தபடி.

                   ******************
இப்படியே 15 வருடங்கள் ஓடி விட்டன. இப்போது, மீண்டும் அனிதா....ஆனால், திருமணமாகி, தாயாகி விட்ட அனிதா ! 

புதன்கிழமை ஜாயின் செய்தாள் . மேனேஜர் , சக அதிகாரிகள் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். மதியம் , அவள் அண்ணி கட்டி கொடுத்த லஞ்ச்சை சாப்பிட்டாள். என் பாமிலியைப் பற்றி விசாரித்தாள். அவள் கணவரைப் பற்றியும், மகனைப் பற்றியும் பேசியபோது பெருமிதப்பட்டுக்கொண்டாள்.

ஒரு வாரம் சென்ற பின்பு, கொஞ்சமாய் பேசத் தொடங்கினாள் . வீட்டிற்கு வர அழைப்பு விடுத்தேன். மெல்லிய புன்னகையே அவளின் பதிலானது.

சனியன்று சீக்கிரமே வேலைகள் முடிந்து விட்டன. கிளம்பினோம். "அனிதா, ஹவ் அபௌட் எ காபி? " என்றேன்.
"ஷ்யூர் " என்றாள்.
'எல்லென் கார்டன் காபி'க்கு சென்றோம்.இரண்டு காபி ஆர்டர் செய்தேன்.
"இப்ப தெளிவாயிட்டீங்களா,மேடம்" என்றேன். புரிந்துகொண்டிருப்பாள்.
"எப்பவுமே தெளிவுதான்" என்றாள்.
"நாம எப்பவும் போல நல்ல நண்பர்களாகவே இருப்போம்" என்றேன்.
"ம்ம்ம்ம் ..ம்ம் .. ஜெகன், நீங்க என்னை எப்பவும் நல்ல பிரெண்டாகவே நினைக்கறீங்க.. அப்படியே இப்பவும் நினைச்சுக்குங்க ..அதுதான் உங்களோட உயரிய  குணம்."
ஒரு கெட்டிலில் பால், சிறிய கிண்ணத்தில் டிகாக்ஷன் , மற்றொரு கிண்ணத்தில் சர்க்கரையும் டேபிளுக்கு  மேல் வைத்தார் ,பேரர்.
லேசாக செருமிக் கொண்டாள், அனிதா."நட்பு எப்போதும் பரிசுத்தமானது,ஜெகன்.அது பௌதீக மாற்றம் மட்டுமே ஏற்படுத்தக்  கூடியது .நட்பை மீறி சுயநலமோ ,துளியேனும் காமமோ தலை தூக்கி அந்த நட்பினால் கிடைக்கும் உறவு தனக்கு எப்போதுமே வேண்டும், தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்குகையில், அது காதலாக உருமாறுகிறது. நட்பு எப்படி பரிசுத்தமானதோ அதைப்  போலவே, காதலும் தூய்மையானதே! ஆனால் வெவேறு என்டைடி. மேலும் நட்பு ,காதலாக மாறும் சாத்தியம் உள்ளது. ஆனால் காதலாக பரிணமித்தபின் அது சாகா வரம் பெற்ற காதலாகவே இயங்குகிறது. மீண்டும் எக்காலத்திலும் அது நட்பாக பரிமளிக்க முடியாது"
"ஓக்கே..ஓக்கே.... காபி எடுத்துக்குங்க, அனிதா" என்றேன்,சூழ்நிலையை கலகலப்பாக்கும்  வகையில்.
பாலை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டாள். "இந்த பாலில் டிகாக்ஷன் ஊற்றப் படுகிற வரையில் இது தூய்மையான பால். டிகாக்ஷன் ஊற்றப்பட்டு விட்டால் , அது காபியாகி விடும். அதன் பின்பு அது பால் இல்லை. மீண்டும் பாலாக மாறவே  முடியாது,
ஜெகன்" என்றாள். இதை விட நாசுக்காக எவராலும் பேச முடியாது என்று எனக்குத் தோன்றியது.
நானும் காபி கலந்து கொண்டேன். எனக்கு சர்க்கரை போட்டுக் கொண்டேன். அனிதாவின் கோப்பைக்கும் சர்க்கரையை இடும் வகையில், கப்பை நகர்த்தி "சர்க்கரை  " என்றேன்.
"எனக்கு வேண்டாம்" என்றாள்.
"ஏன்  ....டியாபெடிக் பயம் ?' என்றேன்.
"அப்படியெல்லாம் இல்லை... கசப்புக்கு பழகிகிட்டேன்" என்றாள், அனிதா.

வெளியில் வந்தோம்.....அதிகம் பேசவில்லை. நெருடல் இல்லாத வேறு வேறு பாதைகளில் பயணப்பட்டோம். 
*  *  *  *  *


Tuesday, October 19, 2010

என் அருமை கீதா!!!

ன்று காலை வாக்கிங் போனபோது ,ஹெட்போனை எடுத்துப் போகவில்லை. இது சமீப காலங்களில் என் வயதின் காரணமாக ஏற்படும் மறதியின் விளைவு.

வழக்கம் போல் வேடிக்கை பார்த்தபடி 'பிப்லி'யுடன் நடந்து  கொண்டிருந்தபோது,யார் வீட்டிலோ யாரையோ "ஏய்,சொரணை கெட்ட எருமை மாடே மணி ஏழாகப் போகுது.. எந்திரிச்சு தொலை" என்ற செம்மொழி தமிழோசை காதில் வந்து விழுந்தது.அது ஒரு பெண்மணியின் கனமான குரல்.விடியும்போதே திட்டு வாங்கிக் கொண்டு எழுந்திருக்கும் அந்த பெருமகனார் யாரோ? அடியேன் அறியேன்!

ஒரு வேளை அந்த அம்மணியின் மகனாக இருக்கலாம்... மகளாக இருக்கலாம்.... அல்லது கணவனாகக் கூட இருக்கலாம். யாராக இருந்தால் நமக்கென்ன? நம் சிந்தனை அதை பற்றியது அல்ல.  அந்த அம்மாளின் விளிப் பொருளாக இருந்த எருமையைப் பற்றியது

எருமையென்ன இப்படியெல்லாம் திட்டப்படலாமா  ? அது என்ன சொரணையில்லாத மிருகமா? என் கால்கள் முன்னோக்கி நடந்தாலும் மனம் பின்னோக்கி எனது இளமைக் கால கிராமத்து வாழ்க்கையை நோக்கி  நகர்ந்தது.

அப்பாவின் சொற்ப சம்பளத்தில் காலம் ஓட்டுவது கடினம் என்பதைப் புரிந்து கொண்ட அம்மா ,ஒரு எருமை மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்ய ஆசைப் பட்டார்கள். அந்த காலத்தில் அம்மாவின் பிறந்த வீட்டில் இஷ்டம் போல மாடு இருந்ததாம். பால் பண்ணையே நடந்ததாக அம்மா சொல்வார்கள். அதே போல் 'ஒரு எருமை மாட்டுடன் நாமும் ஆரம்பிக்கலாமே' என்பது அம்மாவின் ஆசை. அப்பாவும் சரி சொல்ல அம்மாவின் ரெட்டை வட சங்கிலி 'உள்ளே' போக வீட்டிற்குள்  வந்தது,எருமை மாடு.

அன்று மாலை, பள்ளிக் கூடம் விட்டவுடன் விளையாடக் கூடப் போகாமல், நானும் என் அண்ணனும் ஒரே ஓட்டமாக ஓடி வீடு அடைந்தோம். புறக்கடையில் சமர்த்தாக எருமை மாடு நின்று கொண்டிருந்தது. அதைச் சுற்றி சாணம். 'ஞொய்' என்று ஒரு வாசம் வீசியதையும் பொருட்படுத்தாமல் அண்ணனுடன் களமிறங்கினேன். மாட்டைச சுற்றி சுற்றி வந்தோம். பெருமை பிடிபடவில்லை எங்கள் இருவருக்கும். 'நம்ம வீட்டு மாடு...நம்ம மாடு' என்றெல்லாம் பாடிபாடி சுற்றி வந்தோம். எங்களின் சப்தத்தையோ , பாட்டையோ மாடு , ரசிக்க வேண்டாம்... அட்லீஸ்ட்.. சட்டை செய்ய வேண்டாமோ...? ம்ஹும்..ஒரு உணர்வையும் வெளிக் காட்டாமல் வாலை 'சொர்ட்..சொர்ட்'டென்று தன வயிறறுப் பகுதியில் அடித்துக் கொண்டிருந்தது. அம்மா வந்து எங்களிருவரையும் வீட்டிற்குள் இழுத்துச் சென்றார்கள்.

அந்த மாட்டுக்கு 'கீதா' என்று பெயர் வைத்தோம். 'ஏன் அப்படி ஒரு பெயர் தேர்ந்தெடுத்தோம்' என்றெல்லாம் நினைவில்லை. நாங்கள் 'கீதா' என்று அழைத்த போதெல்லாம் அது திரும்பிப் பார்க்கும்.. மூக்கின் த்வாரங்களுக்கு இடைப்பட்ட பகுதியை  சிணுங்கிக் கொள்ளும். அதன் வளைந்த கொம்புகளை ஆட்டும்.  தன பங்கிற்கு 'ங்கொய்..'யென்று ரீங்காரமாய் குரலெழுப்பும்.

அதற்கு சாப்பிட வைக்கோல், கட்டு கட்டாக வந்திறங்கியது. வீடு, அது வரை பார்த்தேயிராத பருத்திக் கொட்டையும், கடலைப் புண்ணாக்கும், மாட்டுத் தவிடும் மாட்டுக் கொட்டடிக்கு வந்தன. தினசரி இரவில் ஊற வைத்த பருத்திக் கொட்டையை விடியற்காலையில் அம்மாதான் அரைப்பார்கள்.  அதனுடன் தவிட்டைக்  கலந்து கொடுக்கும் போது கீதா உறிஞ்சிக் குடிக்கும் அழகே அழகு. அப்படிக் குடித்து குடித்து மாடு நன்றாகவே பால் கறந்தது. சிவன் கோயிலில் மணியடிக்கும் மூக்கையன் அண்ட்ராயர்  தெரிய வேஷ்டி கட்டியபடி வந்து பால் கறந்து கொடுத்துப் போவான்.

கிட்டத்தட்ட 2 வருஷங்கள் கீதா, எங்கள் வீட்டின்  செல்லப் பிராணியாக இருந்து ஒழுங்காக பால் கொடுத்து எங்களின் பொருளாதார நிலையை  கணிசமாக உயர்த்தியது.
அப்பாவிற்கு ஒரு ப்ரோமோஷன் வந்த காரணத்தினாலும் அதை விட அம்மாவின் இயலாமையினாலும் கீதாவை விற்று விட முடிவு செய்தார்கள்.

இரண்டு மூன்று ஆட்கள் வந்து பார்த்தார்கள்.அவர்களில் ஒருவர் மட்டும் நல்ல விலைக்கு  பேசியதால் அவரிடமே கொடுத்துவிடலாம் என்று பேசப்பட்டது. 15 கி.மீ
தள்ளியிருந்த அந்த  கிராமத்து மனிதர் ஓட்டிக்கொண்டு போவதற்காக வந்தார்.  அன்று இரவு எங்கள் வீட்டில் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுக்கப்போவதற்கு முன் பைசா பட்டுவாடாவை சரி செய்தார்.

அதிகாலை மூன்று மணிக்கு அப்பா,அம்மா,அந்த மனிதர் மூவரும் எழுந்து கொண்டனர். எனக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. எழுந்து கொண்டு அவர்களுடன் கொட்டடிக்குப் போனேன். கீதாவை புது மூக்கனாங்கயறு கொண்டு கட்டினார். அவர் அதை இழுத்தபோது பயங்கரமாக முரண்டு பிடித்தது. 'வர மாட்டேன்' என்பதாகப்  பட்டது எனக்கு. "சாமி.. ஊரெல்லை வரைக்கும் நீங்க வாங்க ... அப்பத்தான் இதை ஓட்டிகிட்டுப் போக முடியும்...
இல்லைனா சண்டித் தனம் பண்ணும்" என்றார், அந்த மனிதர். அப்பா, அம்மா இரண்டு பேருமே மாட்டை ஓட்டிக் கொண்டு போனார்கள். கீதா, திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே போனது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

அது 'ங்கொய்..'யென்று அடி வயிற்றிலிருந்து கத்திகொண்டே போனதாம். அதன் கண்களிலிருந்து 'பொல..பொல'வென்று கண்ணீர். அம்மாவிற்கு மனசே கேட்கவில்லையாம். என்ன செய்வது? ஊர் எல்லை வரை அப்பாவும் அம்மாவும் பொய் விட்டு வந்தார்கள்.

இந்த நிகழ்விற்குப் பிறகு  'எருமை மாடு' என்று யார், யாரைத் திட்டினாலும் எனக்கு 'சுறு சுறு..' என கோபம் வரும். 'எருமைக்கும் உணர்வுகள் உண்டு' என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என நினைப்பேன்.

மீண்டும் என்னை ஒரு முறை 'கீதா'வைப் பற்றி நினைக்க வைத்த என் ஞாபக மறதிக்கு நன்றி !! நாளை முதல் மறக்காமல் ஹெட் போனை மாட்டிக்கொண்டு 'வாக்கிங்கிற்கு இறங்க வேணும் !!! யார் யாரை வேண்டுமானாலும் எப்படியேனும் திட்டிக் கொள்ளட்டும்.

Friday, October 15, 2010

எதற்காக 'ப்ளாக்' என்று நினைத்தபோது, மனதுக்குள் ஓர் உதைப்பு. என்ன எழுதப்போகிறாய் என்று கேட்டது? நிகழ்வுகளை,ஒரு காலத்தில் எழுதப்பட்டு பிரசுரமான என் கதைகளை,எழுதப்பட்டும் பிரசுரிக்கபடாத பல படைப்புகளை - இதில் ஏற்றலாமே என்ற எண்ணம் என்றேன். 'சரி' என்றது.
அது மட்டுமில்லை... என் இனிய நண்பர்களும்,புலம் பெயர்ந்த தமிழ் நல்லோர் பலரும் தொடர்ந்து என் படைப்புகளை காண வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த முயற்சியை தொடங்குகிறேன். இது காலத்தின் கட்டாயமாகி விட்டது.... நேரத்தின் நிர்ப்பந்தமாகி விட்டது.
இந்த மாதிரியான 'ப்ளாக்' விஷயத்தில் எனது முன்னோடியாக திகழும் ஆ.நிவாஸ் ராமமூர்த்தியின் அன்பு கட்டளையை நிறைவேற்றும் எண்ணமே இந்த முயற்சி.
நிகழ்வுகளை பதிவு செய்கையில் மிகுந்த கவனம் தேவை ...எவர் மனதும் புண்படலாகாது என்று எனக்கு கோரிக்கை விடுத்த நார்வே நண்பர் இளங்கோவிற்கு எனது பதில் நேர்மறையானதே! கவலைப்பட வேண்டாம் நண்பரே...
சரி  விஷயத்திற்கு வருவோம்..உங்களையெல்லாம் அதிகம் காக்க வைக்காமல் எனது படைப்பு மிக விரைவில் பதியப்பட இருக்கிறது... உங்களின் அன்பான ஆலோசனைகளையும்  , விமரிசனங்களையும் வேண்டி எழுத தொடங்குகிறேன்.

அன்பன்,
எல்லென்

Monday, October 11, 2010

pirindhom! sandhippom!!

அன்புள்ள தமிழ் இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் ,
இன்று புதியதாய் பிறந்திருக்கும் என்னை வாழ்த்தி வரவேற்கும் உங்களுக்கு தலை வணங்குகிறேன் .
பிறக்கும்போதே  பெயர் தாங்கும் பெருமையை என்னென்பது...அதுவும், என் விருப்ப பெயருடன் ஜனனம் தந்த கணினி தொழில் நுட்பத்திற்கு நன்றிகள் ஆயிரமாயிரம் !!
இனி தொடரும் எமது படைப்புகள் .உங்கள் ஆசிகளுடன்.

அன்பன்
எல்லென்