Pages

நேசம் நம் சுவாசம் !

Tuesday, April 24, 2012

நல்லாசிரியருக்கு ஒரு பாராட்டு கவிதை !

       மிக நீண்ண்...ட இடைவெளிக்குப் பின் கவிதை ஒன்றுடன் களமிறங்குகிறேன். இந்த கவிதை என் நண்பரும் , ஆத்மார்த்த ஆலோசகருமான திரு. சிவசுப்ரமணியன் அவர்கள் தமிழக அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றபோது அவரைப் பாராட்டி வரையப் பெற்றது.
(2010 - ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று வள்ளுவர் கோட்டத்தில் விழா நடைபெற்றது)




கடந்து சென்ற
ஐம்பத்தொரு ஆசிரியர் தினங்களில்
இரண்டு ஆசிரியர் தினங்கள்
மனப்பாறையில் உறைகின்றன.

எட்டாம் வகுப்பை 
எட்டிப் பிடித்தபோது வந்த ஆசிரியர் தினம் 
முதன்மையானது....
”இவரா....? சிறியர்” என ஏளனமாய் 
எம்மை எட்டித் தள்ளாமல்
“இவரே...இன்று நம் ஆசிரியர்”
என்று ஐவரை மேடையேற்றி
பயிற்றுவிக்க அன்பாய் ஆணையிட்டார் எம் தமிழய்யா...
அவ்வைவரில் அடியேனும் (அடக்கத்துடன்) அடக்கம்.
நண்பன் அப்துல் கஃபூர் ,செய்யுள் ஒன்றை 
எம் மூளைக்குள் செலுத்த முயற்சிக்க
‘தட..தட’வென அவனுக்கு கைதட்டல்கள்!!
‘கிடு..கிடு’வென கால்கள் நடுங்க 
மேடையேறினேன் அடுத்ததாக...
பகுபத உறுப்பிலக்கணத்தை அஸ்திரமாகக் கையிலெடுத்தேன்...
தேமாவையும், புளிமாவையும் 
அடித்துத் துவைத்து அம்பலத்தில் உலர்த்தினேன்
திருவரங்கக் கலம்பகத்திலிருந்து
‘கொற்றவன் தன் திருமுகத்தை’
உணர்ச்சி பொங்க ஒப்புவித்தேன்...
தமிழய்யா என்னைக் கட்டிப் பிடித்து ‘உன்னதம்’
என்று உச்சி மோந்தார்...

அடுத்த ஆசிரியர் தினம்....
இரண்டாயிரத்துப் பத்தின் இனிய தினம்....
எமதருமை நண்பர் திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு
’நல்லாசிரியர்’ அங்கீகாரம் கிடைத்த அற்புத தினம்...

ஆசிரியப் பணி அறப்பணி....
அதை அற்புதப் பணியாக சிறப்பு செய்யும்
சிங்கார நண்பரே....சிவசுப்ரமணியனாரே....


எண்பத்தைந்தாம் வருடம்
 நாம்
சந்தித்த நாள் முதலாய் 
சற்றும் குறையாது இருப்பது அதே உற்சாகம்...
முன்நெற்றியில் வீழும் முடியை
லாவகமாய் புறம் தள்ளியதைப் போலவே
எந்தன் 
கலவையான கவலைகளையும்
புறம் தள்ள கற்றுத் தந்தீர்கள் !  
என் இதயம் துவண்ட போதெல்லாம்
உங்களின் வெண்கலக் குரலால் 
வேதனையை வெட்டி விட்டீர்கள்....

ஒரு முறை,
பள்ளிக் கட்டிடம் சரியாகவில்லை
என்பதற்காக
போராடிப் போராடி,
மாணவர்க்காக
வாதாடி வாதாடி,
புதுக் கட்டிட அனுமதி பெற்ற
கதையை ஆயாசமாய்க் கூறினீர்கள்...
கட்டிடத்திற்கான செங்கல்லை மட்டும் நீங்கள்
அடுக்கவில்லை...
அடுத்த தலைமுறைக்கான
உங்கள் அக்கறையையும் சேர்த்து அடுக்கினீர்கள்...!!

கனிவையும், கண்டிப்பையும்
மாணவர்க்கு சரிவிகிதமாகக் கலந்து
இனிப்பாய் கசப்பு மாத்திரைகளை
உவகையுடன் ஊட்டினீர்கள்...
உங்கள் மாணவர்கள் 
உயரும் உயரம் கண்டு
உண்மையாய்ப் பூரித்தீர்கள்...

பொதுத்தேர்வை  
எதிர்கொள்வோரை 
புது விதமாய் பயிற்றினீர்கள்...
ஆம்.... வயிற்றிற்கு ஈய வைத்து
செவிக்குண(ர்)வும் தந்தீர்கள்...

ஒவ்வொரு மாணவனையும்
தன் மகன் போல் பாவித்தீர்கள்.....
அதே போல்,
தன் மகனையும் ஒரு மாணவனாகவே
எண்ணி வளர்த்தீர்கள்...

’வருத்தமில்லா வயோதிகர்’
சங்கத்தலைவனான எனக்கும் கூட
இரு வருத்தங்கள் உண்டு...
ஒன்று...
உங்களின் மாணவனாக முடியவில்லையே என்பது ,
மற்றது,
இந்’நல்லாசிரியர்’ விருது
சற்றே தாமத அங்கீகாரம் என்பது...

கரும்பலகை
என்றைக்கும் உங்களிடத்தில் 
வெறும்பலகையாய் இருந்ததில்லை...
தினம் ஒரு திருக்குறள் 
அலங்கரிக்கும் பெரும்பலகை அது...

நன்றி மறப்பது நன்றன்று
என்றுரைத்த வள்ளுவப் பெருந்தகை
தம்மை மறவாதிருந்த
உம்மை சிறப்பு செய்து
விருது கொடுத்து
அழகுப் பார்க்க அழைத்துள்ளான்
தம் வள்ளுவக் கோட்டத்திற்கு!!

வாழிய உங்கள் கல்வித்தொண்டு!!!



7 comments:

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்ற நல்லாசிரியருக்குப் பாராட்டுகள்.

மீண்டும் உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு பார்த்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

ரிஷபன் said...

அருமையான கவிதையில் அருமையான ஆசிரியருக்கு வாழ்த்துகள் சொன்ன விதம் நெஞ்சைத் தொட்டது. பதிவுகளில் இடைவெளி இனி வேண்டாமே..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கரும்பலகை
என்றைக்கும் உங்களிடத்தில்
வெறும்பலகையாய் இருந்ததில்லை...
தினம் ஒரு திருக்குறள்
அலங்கரிக்கும் பெரும்பலகை அது...


REALLY SUPERB!

குறையொன்றுமில்லை. said...

விருது பெற்ற நல்லாசிரியருக்குப் பாராட்டுகள்

Dhanasekaran said...

wonderfull.Enbathainthin veham ,nayam,rasam ellam mihuntha kavithai.


Paaraattuhal ellen.

மனோ சாமிநாதன் said...

விருது பெற்ற நல்லாசிரியருக்கும் அவருக்கு கவிதாபரணம் சூட்டி மகிழ்ந்த உங்களுக்கும் இனிய பாராட்டுக்கள்!!

சிவகுமாரன் said...

அருமை