Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, August 3, 2014


(சமீபத்தில் பணி நிமித்தமாக சென்னையை விட்டு பெங்களூர் வந்த சமயம். சென்னை வீட்டு பரணில் இருந்து கிடைத்த பல பொக்கிஷங்களில் ’வெளியிடலாம்’ என்று கருதி வெளியிடப்படும் கவிதையிது)
ஸ்நேகிதிக்கு……


ஸ்நேகிதி…
என்னிடமிருந்து இது உனக்கு முதல் கடிதம்
உன்னைப் பொறுத்த வரையில் புது கடிதம்….
ஆனால்,
எனக்கு இதுதான் ஆசுவாசம் தருகிற ஆலமரம்
அடிக்கடி, அமைதி தேடி நான் அமர்கிற ஞானமரம்.
எனவேதான்
மனம் கனமாகியிருக்கிற இந்த சந்தர்ப்பத்தில்
நான்,
இதன் நிழலில் ஒதுங்கிவந்து எழுத்துகளை
உயிர்ப்பிக்கிறேன்….
இக்கடிதத்தின் நோக்கம் 
உன் அனுதாபம் கருதியதல்ல,
அங்கீகாரம் கருதியது.


ஸ்நேகிதி…
நான் ஒரு ப்ரம்மன்
நாளைய இலக்கியங்களை படைப்பதால் இல்லை..
எனது மற்ற மூன்று முகங்களை மறைத்து ஒரே ஒரு
முகத்துடன் உலவி வருவதால்.
உனக்கும்கூட
என் அந்த ஒரு முகம்தான் பரிச்சயம்.
சதா
சோகத்திலும்,எதிர்பார்ப்பிலும்,அவலத்திலும்
அமிழ்ந்து போயிருக்கின்ற மற்ற முகங்கள்
எனக்குள் உள்ள
இன்னொரு ‘நானை’ சித்திகரித்துக் காட்டும்.
முற்றிலும் மாறுபட்ட அந்த ‘நான்’ வெகுவாய்
மறைக்கப்பட்டிருப்பது நிதர்சனம்.
அடங்கிக்கிடக்கும் ‘நான்’
புது குணங்களுடன்
வெளிப்படபோவது பூதாகாரமாகத்தான்…
ஆனால், அது வரை
அமைதி, அமைதி… அமைதிதான்.

ஸ்நேகிதி…
நான் ஒரு சுமைதாங்கி..
என்னைச் சுற்றியுள்ளவர்களின் கவலைகளையும், பிரச்னைகளையும்
சுமந்து நிற்கும் சுமைதாங்கி !!
என்னிதயம்
அவர்களின் சுமையைத் தாங்க மாத்திரமா?
என் இமை வீங்கும் விவகாரத்தை எவரிடம்
 எடுத்துரைப்பேன் தோழி?
என் சுமையை நான் எங்கே இறக்கி வைப்பேன்?

ஸ்நேகிதி…
இந்த சந்தர்ப்பத்தில்
இறந்த காலத்தின் சில நிமிஷங்களை
எழுப்பிப் பார்க்கிறேன்….
நீயான தென்றல்காற்று
என் தெருவோரம் வீசியதால்
இதயக் குடிசையின் நைந்த ஜன்னல் ஒன்றை
திறந்து வைத்தேன்….
உன் வரவில்
எனது குடிசை குளிர்ந்ததென்பது சத்தியமான நிஜம் !
ஜன்னலைத் திறந்ததிலேயே
என் புழுக்கம் குறைந்தது…
மனம் உற்சாக ஜதியிட்டது’’’’
’எனக்கும்கூட
சந்தோஷத்தின் சாயல் விழும் பாக்கியம் உண்டு’
என்ற நினைப்பில் மிதக்கத் தொடங்கினேன்…
ஒரு
சிறு
ஜன்னல் திறப்பிலேயெ என் சுவாசத்திற்கு
கெளரவம் கிடைத்தது கண்டு
கதவையும் திறந்து வைக்க பிரயத்தனப்பட்டேன்.
கதவைத்திறக்கும் முன்பாய்
ஒரு நிமிஷம்……

ஸ்நேகிதி…..
இந்த நேரத்தில், நீ
என்னுள் புதைந்து கிடக்கும்
ஒரு முகத்தை அறிந்தாகவேண்டியது, அவசியம்.
பிறகுதான், உனக்கு
புரியும் என் தயக்கம்..
-ஒரு கால கட்டத்தில்
முதன்முறையாய் என் இதயம் எடுத்துக் கொடுத்தேன்…
ஒரு
மூன்றெழுத்து அதன் முடிவானதால்
சில காலம் மெளனம் தாண்டி
மறுமுறையும் –
எத்தி விளையாடுவதற்கு என்னீர இதயமென்ன
கால்பந்தா?
விளையாடினார்கள். அவர்கள் போயான பிறகு
மைதான ஓரத்தில்
நசுங்கிக் கிடந்த அந்த
என் இதய சாம்ராஜ்யத்தை
கைகளில் ஏந்தி
மறு ஒரு கும்பாபிஷேகம் நடத்தி,
அதனிடத்தில் ஆரோகணித்திருக்கிறேன்..
அதனால்தான், ஸ்நேகிதி..
நீயும் உன் பங்கிற்கு ஒரு முறை எத்தி விளையாட
நான் வலிய சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தர
த..ய..ங்..கு..கிறேன்.

ஸ்நேகிதி….
உன் செளந்த்ர்யம் எனக்கு லட்சியமில்லை
உனக்குள் குடியிருக்கும்
உன் ஆத்மாவுடன் கைகுலுக்கும் ஆர்வம்.
உன் மெளனம்….
என் சாந்தி நிகேதனம்.
உன் அறிவு…
நான் பெருமைப்படும் கோஹினூர்..
இவை போதும் எனக்கு.

ஸ்நேகிதி…
இனியெல்லாம் உன் கையில்
நீ நினைத்தால்
என் குடிசைக் கதவைத் திறந்து
உள்வரலாம்
அன்றில்,
நான் திறந்து வைத்திருக்கும்
சிறு ஜன்னலையும் மூடிவிட்டுப் போகலாம்.
கூரையைப் பிய்த்துமெறியலாம்.
மெளனம் தேடி நகரும் இந்த
இந்திர ஊர்வலத்தை
சிதறடிக்கவும் செய்யலாம்.
எல்லாம் உன் கையில்.

ஸ்நேகிதி…
எதிர்காலம் எனக்கு பிரச்னையில்லை…
எதிர்காலம் எனக்கு கவலையில்லை…
அடுத்த நொடிதான்
என்னை எழுந்திருக்க முடியாமல் கூட
ஆயாசப்படுத்துகிறது.
காலம் என்னை அழிக்கும் முன்
கவலை உருத்தெரியாமல்
அழித்துவிடுமோ
என்றஞ்சுகிறேன்.
அழிவிற்கு முன்
என் விஸ்வரூப வெளிப்பாடு
அவசியம்.
அதை நடைமுறைப்படுத்த உன் வருகை
மிகமிக அவசியம்.
என்னுடன்….,
பசியுடன்….,
சோகத்துடன்….
ஓடிவருவது உனக்கு சாத்தியமானால்,
நீ
கதவைத் திறக்கப்போகும்
அந்த நிமிடத்திற்கு
என்னை
தயார்ப்படுத்திக் கொள்கிறேன்.

ஸ்நேகிதி….
கடைசியாக ஒன்று.
சமகாலக் கவிஞன் ஒருவனின்
வரியொன்றை
இரவல் கேட்டேன்….
‘நீயே என்னை புரிந்து கொள்ளவில்லையென்றால்
யார்தான்
என்னை புரிந்து கொள்வார்கள்?
நீயே என்னை புரிந்து கொள்ளவில்லையென்றால்
யார்
புரிந்துகொண்டுதான் என்ன?’

****************


3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ரிஷபன் said...

Superb !

alamelu chandrasekaran said...

அருமை..