Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, October 2, 2011

மஹாத்மா.....நீவிர் வாழ்க!

       ன்று மஹாத்மா காந்திஜியின் ஜன்ம தினம்.....அவருடைய எத்தனையோ கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றினையாவது விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு உய்வோமாக.

               இந்த ஓவியம், காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும் எமது பணி நிறைவுபெற்ற அதிகாரி திரு.மோஹன் தாஸ் அவர்களுக்கு நினவுப் பரிசாக வரைந்து வழங்கப்பட்டது.  Tuesday, September 13, 2011

ஸ்ரீராம் ஆதித்யா

என் அருமைப் புத்திரன் ஸ்ரீராம் ஆதித்யாவை சமீபத்தில் வரைந்தேன்...பென்சில் ஸ்கெட்ச்தான்....

Saturday, July 2, 2011
மாமா......சாமா.......பாமா.....
                          

   (முன் எச்சரிக்கை: படிச்சே ஆகணும்...ஆமா)

    

                     யாராவது ஒருத்தரைப் பாராட்டணும்னா எங்க காலத்தில எல்லாம் ஜோரா கைதட்டுவோம்...இல்லேன்னா ‘சபாஷ்’னு முதுகுல ஒரு ஷொட்டு கொடுப்போம்..கான்வென்ட்ல படிச்சிருந்த ஆக புத்திசாலிகளா இருந்தா ‘ஹிப்ஹிப்ஹுர்ரே’னு கத்துவோம்.

                     ஆனா, இந்த காலத்திலே... ஆம்பள,பொம்பள வித்தியாசம் இல்லாம எல்லாம் சேர்ந்துண்டு விசில் அடிக்குதுகள்.’தையா..தக்கா’ன்னு ஆடறதுகள்.இல்லேன்னா ‘ஓ’போடு’ ங்கிறதுகள்.. போதாகுறைக்கு ‘ஓ..போடு....ஓ .போடு”ன்னு ஒரு கண்றாவிப் பாட்டு வேற....

காலேஜ் லீவ் விட்டாச்சா?   ‘ஓ’போடு’.....

லெக்சரர் சூடிதார்ல வந்தாளா... ‘ஓ’போடு’....

கேண்டீன் சாம்பார்ல கரப்பான்பூச்சி  மிதந்ததா ... ‘ஓ’போடு’.

                        என்னமோப்பா...எனக்கு இந்த காலத்து பசங்களோட, கிஞ்சித்தும் ஒத்துப்போகவே முடியலே.. ஹ்ம்ம்ம்...சாம்பார்ல கரப்பான்பூச்சின்னதும் எனக்கு நம்ப சாமா - பாமா பத்தின நினைப்புதான் வர்றது.
                    
                        சாமா என்கிற சாமினாதன்.....கல்யாணத்துக்கு முன்னாடி சர்யான அசட்டு அம்மாஞ்சியா இருந்தவன், பாமா என்கிற சத்யபாமாவை கைபுடிச்சதுக்கபுறம் கெட்டிச்சமத்தா ஆயிட்டான்.....தானும் இந்த மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டமேன்னு சாமாவுக்கு மனசு கொள்ளாத சந்தோஷம்.அதனாலேயே அவனுக்கு ஆம்படையாகிட்ட கொள்ளை ப்ரியம். ’பாமா..பாமா’ன்னு அவ முந்தானையப் புடிச்சுண்டே சதா சுத்துவன். அந்த பதிவிரதாசிரோன்மணியும் அவனை இடுப்பில தூக்கி வச்சிக்காத குறைதான்...ஒரு கொழந்தையைப் பாத்துக்கறா மாதிரி அப்படி பாத்துப்போ. இவா ரெண்டு பேரோட அன்னியோன்யத்தைப் பாத்து பாத்து புளகாங்கிதப்படற நாலைந்து ஜனங்கள்ல நானும் ஒருத்தன்.


                        இப்ப , ஆரம்பிச்ச கதைக்கு வாங்கோ... ‘ஓ’போடுங்கிறதைப் பத்தி விசாலமாப் பேசினோமே...இவா ரெண்டு பேருக்கும் முன்னாடி ’ஓ’ போட்டுப் பாருமேன்...’ஓ’சாமா.....’ஓ’பாமா..ன்னு சொன்னா அபத்தமாக அல்லவா ஆகிடும்.... ஒசாமாவும்,ஒபாமாவும் ஒருத்தொருக்கொருத்தர் எலியும் பூனையுமா இருந்து, யார், யாரை முதல்ல காலி பண்றதுன்னு காத்திண்டு இருந்தா. ஆனா, நம்ப பாமாவும் சாமாவும் அன்புக்கு அடையாளம்...... ப்ரேமைக்கு அடையாளம்....நல்ல தாம்பத்யத்துக்கு அடையாளம்.. அதுக்காக  வேணும்னா அவாளுக்கு நாம ‘ஓ’போடலாம்.

                        நானும்,என் மனைவிசுப்புலக்‌ஷ்மியும் ஆண்டார்தெருவுக்கு ஜாகை மாத்திண்டு வந்ததுக்கப்புறம்தான் சாமா பரிச்சயம் ஆனான். சாமாவோடு வம்பு பேசறதுதான், ரிடையர்டான எனக்கு நல்ல பொழுதுபோக்கு. தெருவுல யார்யார் இருக்கா,என்ன பேரு,என்ன உத்தியோகம்கிற விபரங்கள் மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களை நான் சாமாவிடமிருந்துதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
                        அவ்வப்போது என் மனைவி எங்கள் நாட்டுப்பெண்களின் பிரசவம் பார்க்க யு.எஸ். போகும்போதெல்லாம் சாமாதான் எனக்கு எடுபிடியாக எல்லா உதவியும் முகம் சுளிக்காமல் செய்வான்.ஒரு விஷயம் சொல்லட்டுமா...? அவனுக்கு சத்யபாமாவைப் பார்த்துவைத்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தவனே நான்தான்.

                        சத்யபாமா நன்றாக சமைப்பள். விதம்,விதமாக சாதம் கலப்பதில் கெட்டிக்காரி. சாமாவுக்கு நிரந்தரமாக வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் அவனிடம் ஒரு யோஜனை சொன்னேன்.”நோக்கோ சைக்கிள் ஓட்டத் தெரியும்... பாமாட்ட சொல்லி 5 பாக்கெட் புளிசாதம், 5 பாக்கெட் லெமன் சாதம், 5 பாக்கெட் கல்கண்டு சாதம், அதே மாதிரி தயிர் சாதம்னு கட்டிண்டு போயி பாக்கெட் பத்து ரூபாய்னு நம்ப கோர்ட் வாசல்ல வித்துப் பாரு...ஒரே வாரத்திலெ 5 பாக்கெட் பத்து பாக்கெட்டாகும்....பிசினெஸ் பிச்சிக்கும்” என்றேன். அப்படி நான் சொன்னபடியே நடந்ததும் ரெண்டு பேருக்கும் என் மேல அசாத்திய மரியாதை வந்துடுத்து. ‘கணேச மாமா எங்கள வாழ வைக்கிற தெய்வம்’னு ஊர் பூரா சொல்லிண்டிருக்குகள்.

                            அவா சின்னதா ஒரு மெஸ் ஆரமிச்சதுக்கும் அடியேன்தான் காரணி. ரெண்டு ஆளுக்கு சம்பளம் கொடுத்து மெஸ்ஸை நடத்தினாங்கன்னா அதுக்கு சாமா, பாமாவோட அற்புதமான உழைப்பும், பாமாவோட சமர்த்தும், சாமர்த்தியமும்தான் காரணம். மெஸ் வெச்சதுல அவாளோடல  வாழ்க்கைத்தரம் லேசாதான் உசந்தது. வசதியா வாழறதுக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது. என்ற  போதிலும் ரெண்டு பேர்கிட்டயும் கிஞ்சித்தும் அந்த அன்னியோன்னியம் குறையவேயில்லை.

                          ரு நாள் எனக்கு கிடச்ச ஒரு தகவலை சாமாகிட்ட சொல்லலாம்னு மெஸ்ஸுக்குப் போறேன். நல்ல மத்தியான வேளை. சாமா குஷி மூடில இருந்திருக்கவேணும்...குஷி மூடிலதான், அவன் தன்னோட கீச்சுக் குரல்ல பாடுவான்... அன்னிக்கு நான் அவன் மெஸ் வாசல்ல நிக்கறேன்...” அந்த சீரங்கத்தில் பல்லி கொல்கின்றவன்’ன்னுட்டு ’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாட்டை துவம்சம் செய்து உச்சஸ்தாயில, கீச்சுக் குரல்ல சாமா பாடிண்டிருக்கான். பாமா அவன் பக்கத்தில உக்காந்திண்டு அவன் தலையில குட்டிண்டே “ள்”னு - சொல்லுங்கோ....நாக்கை மடிச்சு ‘ள்’ சொல்லுங்கோ”ன்னு பாடம் நடத்தறா... எனக்கா சிரிப்பை அடக்க முடியல... என்னப் பாத்ததும் ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரியா ஆயிடுத்து... “தோ பாருங்கோ மாமா... பல்லி கொல்கின்றவன்’ன்னு பெருமாள அபச்சாரம் பண்ணி பல்லியையும் கொல்றார்...பாட்டையும் கொல்றார் இவர்” என்றாள், பாமா.

                          நான் போன விஷயத்தை இருவரிடமும் சொன்னேன்.                           “அப்படியா ?”  என்று வாய் பிளந்து கேட்டனர் இருவரும். வேறொன்றுமில்லை.
’தில்லைநகர் பக்கம் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்க உள்ளது. சுமார் அறுபது பேர் வேலை பார்க்கப்போகிறார்கள். அவர்களுக்கு காலை டிஃபன், காஃபி, மதியம் லஞ்ச், சாயங்காலம் டிஃபன், காஃபி, டீ இதெல்லாம் அவாளோட கேண்டீன்ல தயார் பண்ணிக் கொடுக்க ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் ஆளா தேடிண்டிருக்கா. நல்ல தரமாகவும், டேஸ்டாகவும் இருக்கணும்கிறதுதான் ஒரே கண்டீஷன்..மாசத்துக்கு 2 லட்சம் புரளும்’ன்னேன். ’அவா நாலஞ்சு சமையல் காண்ட்ராக்டர பாத்திருக்காளாம். உன் பேரையும் சொல்லியிருக்கேன்....இங்கேயும் அவா வரலாம்....உன் மெஸ்ஸுலயும் வந்து சாப்பிட்டுப் பாக்கலாம்’ன்னு சொன்னேன்.

                      “மாமா, எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கோ....எங்களுக்கே அந்த ஆர்டர் கிடைக்கணும்னு வாழ்த்துங்கோ”ன்னுட்டு சாமாவையும் இழுத்துப் போட்டுண்டு என் கால்ல விழறா, பாமா.     முன்னேறணும்கிற ஆர்வம் அசாத்தியமா உள்ள பொண்ணு.....ம்ம்..ம்ம்  ... எழுந்து நின்ன ரெண்டு பேர் கண்ணிலேர்ந்தும் தாரைதாரையா ஜலம் கொட்டறது.


                         ம்பெனியிலிருந்து பரமேஸ்வரப்பா என்ற கன்னடியர் வந்தார். இன்னொவாவில் வந்து இறங்கியவரை நான் அழைத்துக்கொண்டு மெஸ்ஸிற்குப் போனேன்.

                        சாமாவுக்கும்,பாமாவுக்கும் கையும் காலும் ஓடவில்லை. பரபரக்கிறார்கள். இருவர்க்கும் வேர்த்துக் கொட்டுகிறது. எனக்கு கன்னடா நன்றாக பேச வருமாதலால் பரமேஸ்வரப்பாவை  கவனித்துக் கொண்டேன்.

                        பாமா சமைத்துவைத்திருந்த ஐட்டங்களை அமரிக்கையாக டேஸ்ட் பார்த்த  பரமேஸ்வரப்பா “ஊட்டா ரெடியந்த்ரே தின்னு நோடானா”(சாப்பாடு ரெடின்னா சாப்பிட்டுப் பார்க்கிறேனே) என்றார்.

                       கடப்பைக் கல் பதித்த டேபிளை நல்லாத் துடைச்சு, பெரிய தலைவாழை இலை போட்டு பாயசம்,பச்சிடி,அப்பளாம், பொறியல், கூட்டுன்னு பரிமாறி ஜமாய்ச்சுட்டாள், பாமா. அது வரைக்கும் ஒரு ஓரமா நின்னுண்டிருந்த சாமா, சாம்பார் வாளியைத் தூக்கிண்டு வந்து மூக்கைத் துளைக்கற வாசனை வீசின முருங்கக்காய் + வெங்காய சாம்பார, சாதத்தில ஒரு கரண்டி எடுத்து ஊத்தறான்.

                       ”பிரமாதம்” என்று ரசித்து சாப்பிடத் தொடங்கிய பரமேஸ்வரப்பா, “சொல்ப சாம்பார்....” என்று கேட்கவும் சாமா,மறுபடியும் பரிமாறினான்.

                        அப்படி ரெண்டாம்  முறையாக பரிமாறப்பட்ட சாம்பாரில் வந்து விழுந்த வஸ்துவைப் பார்த்து, பரமேஸ்வரப்பா,”ஹேய்....காக்ரோச்” என்று காச்,மூச்சென்று கத்தவும், சகல நாடியும் ஒடுங்கிப்போனான், சாமா.
                       
                       ஒரு மின்னல் போல வந்தாள், பாமா. “ இது கரப்பான் பூச்சி இல்லை...சின்ன வெங்காயத்தை தோலுரிச்சுட்டு, அலம்பி, சல்லிவேரோடப் போட்டா சாம்பாரோட டேஸ்டே தனி” என்று சொன்னவள், சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் - தருணத்தில் ‘அதை’ எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு சவைத்தபடி”மாமா....வெங்காயம்தான்” என்றாள் என்னைப் பார்த்து.   

                        ஆரம்பத்தில் கொஞ்சம் கலவரம் காட்டிய பரமேஸ்வரப்பா, பாமாவின் பிரகடனத்தை நம்பவேண்டியவராகி சமாதானமானார். பிறகு, இலையில் பரிமாறப்பட்ட அத்தனை பதார்த்தங்களையும் திருப்தியாக ஒரு கை பார்த்துவிட்டே எழுந்தார்.”ஒரு நிமிஷம் அது கரப்பான்பூச்சியோன்னு நினைச்சு உங்களையும், உங்க சமையலையும் கேவலப்படுத்திட்டேன்......ரொம்ப,ரொம்ப ஸாரி..”ன்னு பாமாகிட்ட மன்னிப்பு கேட்டுண்டார்.

                         அப்புறம்...

                         அப்புறமென்ன .... அந்த காண்ட்ராக்ட் சாமாவுக்கே கிடைத்தது. சாஃப்ட்வேர் கம்பெனி கேண்டீனில் ’சாமா + பாமா’வின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.

                        நேற்று கடை வீதியில் இருவரையும் பார்க்க நேர்ந்தது. “மாமா, காசிக்குப் போகணும்னு ஒரு ப்ரார்த்தனை....நீங்களும் எங்களோட வந்தே ஆகணும்” என்று என் கையைப் பிடித்துக் கொண்டு சாமா சொல்ல, பாமா அதை ஆமோதிக்கும் விதமாக என்னைக் கெஞ்சும் முகத்துடன் பார்த்தாள்.
   
                        “நான் எதுக்கு...நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்கோ” - என்றேன்.

                         “காண்டீன் காண்ட்ராக்ட் கிடைக்கணும்ன்னு வெறியோட இருந்ததால என்ன பண்றோம்கிறதுகூட தெரியாம சடார்னு அந்த கரப்பான்பூச்சியை வாயில போட்டு தின்ன பாவத்தைத் தொலைக்க நாங்க காசிக்குப் போறதா வேண்டிண்டோம்...அதுக்கு சாட்சியா நின்ன உங்க பாவமும் தொலைய வேண்டாமா, மாமா... அதனாலதான் உங்களையும் கூப்பிடறோம்” என்றாள்,பாமா.

*************                         
                   

Sunday, June 19, 2011

பி(ஸ்)ஸி பேளா பாத்

நவீன பி(ஸ்)ஸி பேளா பாத் சாப்பிடலாம் வாங்க....

                      ந்த ‘கம்ப்யூட்டர்’, எல்லா துறைகளிலும்  புகுந்து கொலைவெறி தாண்டவம் ஆடும் இய்யுகத்தில் தமிழனின் பெருமைத்தளமான சமையல்துறையையும் விட்டுவைக்க வேண்டாம் என்கிற பேருள்ளம் கொண்டு ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ செய்து சாப்பிடும் முறை இவ்வாரம் வெளியிடப்படுகிறது.

                        சமையல் ‘ரெசிபி’ புத்தகங்கள் பெரும்பாலும் ‘சமைத்துப் பார்’ என்கிற ஒரு மாதிரியான கட்டளைத் தலைப்புடன்தான் வெளிவருகின்றன. விஷயம் தெரிவதாகக் காட்டிக் கொள்(ல்)கிற நண்பர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது,”ஆமாம்...அப்படித்தான் தலைப்பிடுகிறார்கள். ‘ரெசிபி’ பிரகாரம் செய்து பார்த்தோமே....டேஸ்டாக இல்லையே என்று எசகுபிசகாக யாராவது கேள்வி கேட்டுத் தொலைத்தால் ”நாங்கள் சமைத்துப் பார் என்றுதானே போட்டிருக்கிறோம்...உங்களை யார் சாப்பிடவெல்லாம் சொன்னது?’’என்று மடக்குக் கேள்வி கேட்டு அமுக்கிவிடலாம் என்ற தப்பித்தல் மனோபாவத்துடன் அவை அப்படி வெளியிடப்படுகிறன” என்றார்.

                     ஆனால், இந்த ‘ரெசிபி’ அந்த ரகம் இல்லை. தாராளமாக, மடிக்கணினியை அடுக்களைக்கு எடுத்துப் போய், ‘கேஸ்’அடுப்பின் ஜ்வாலைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் வைத்துக் கொண்டு வரிவரியாகப் படித்தபடி ஜூடான, ஜுவையான ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ தயாரிக்கலாம். தயாரிக்கப்பட்ட ‘மேற்படியை’ டைனிங் டேபிளுக்கு எடுத்துப் போய் தானும் சாப்பிட்டு மகிழலாம்....அகப்பட்டவர்க்கும் அளித்து மகிழலாம்.

                     முதலில் இந்த அய்ட்டங்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.

                  கெட்டி அவல் ....... 250 கிராம்
                   பாசிப்பருப்பு ..........100 கிராம்
                  பெரிய வெங்காயம் ........ 2
                   பெங்களூர் தக்காளி ........ 2
                    உருளைக்கிழங்கு ..............2
                     கேரட் ........................................1
                    ஊறிய பச்சைப் பட்டாணி.......50 கிராம்
                     சாம்பார் பொடி ..................... 2 ஸ்பூன்
                     கரம் மசாலா பொடி ..............1 ஸ்பூன்
                      புளி ..........................        நெல்லிக்காய் அளவு
                      கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                                      (தம்மாத்துண்டு)தேங்காய்துருவல்
                      பச்சை கொத்துமல்லி 
                      முந்திரிப் பருப்பு+நெய்
                      ரீஃபைண்ட் ஆயில்
                       பட்டை,லவங்கம்,ஏலக்காய்

                       ஓக்கே....ரெடியா?

                       அடுப்பை பற்றவைத்து, ப்ரஷர் பேனில் கொஞ்சம்  ரீஃபைண்ட் ஆயிலையும் நெய்யையும் ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலக்காய் ஆகியவற்றை ஃப்ரை செய்து,  பொடிபொடியாக நறுக்கின பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அப்புறம் நறுக்கின மற்ற காய்கறிகளையும் போட்டு வதக்கி லேசாக ஒரு பெருமூச்சை உதிர்க்கவும்.
                        
                 பிறகு, சாம்பார் பொடியையும்  கரம் மசாலா பொடியையும் போட்டு வதக்கி, புளிக்கரைசலை அதில் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொதிக்க வைக்கவும்.
‘தள..புள’வென்று கொதிக்கத் தொடங்கும்போது தண்ணீரில் நனைத்த அவலையும், பாசிப்பருப்பையும் அதில் இடவும். ஒரு பங்கிற்கு சுமார் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, பிறகு தேவையான அளவு உப்பு இடவும்.
  
                  கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                               (தம்மாத்துண்டு) தேங்காய்துருவல் ஆகியவற்றை தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு  அந்த பொடியையும்  ப்ரஷர் பேனில் கொதித்துக் கொண்டிருக்கும்  சமாச்சாரத்தில் போடவும்.

                 ப்ரஷர் பேனை மூடி வைத்து வெயிட்டைப் போடவும். மூன்று விசில் வரும் வரை அவரவர்க்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம். மூன்றாம் விசில் அடித்த முப்பதாவது வினாடியில் அடுப்பை அணைக்கவும். 

                  சிறிது நேரம் தேவுடு காத்துவிட்டு மூடியைத் திறந்து நறுக்கின கொத்மல்லியையும் நெய்யில் பொறித்த முந்திரிப்பருப்பையும் அதில் போட்டு, நன்றாக கிளறி டைனிங் டேபிளுக்கு எடுத்து செல்லவும். 

                   பிரியமானவர்களுடன் அமர்ந்து பரிமாறி சூடாக,ஸ்பூன் உதவியுடன்  சாப்பிட்டு மகிழலாம். விருப்பத்திற்கு ஏற்றார்போல் காராபூந்தியோ, சிப்ஸோ சேர்த்துக்கொள்ளலாம்.
        
                   உங்களுடைய   குடும்பத்து உறுப்பினர் எவர்க்கேனும் ‘ஷுகர்’ இருந்தால் அவர்களுக்கு அவலுக்கு பதிலாக சம்பாகோதுமை ரவா உபயோகித்து செய்து தரலாம்.

 ****************

                 (பி.கு.:  திருமதி இந்த பதார்த்தத்தை செய்த போது “ஆஹ்ஹா.... ஓஹ்ஹோ”என்று பாராட்டியதன் விளைவு.....’இதை 'blog'ல் எழுதுங்களேன்’ என்ற அன்புக் கட்டளை. நீங்களும் செய்து பார்த்து, சாப்பிட்டுப் பார்த்து, பாராட்டித்தான் பாருங்களேன்!)

                 
     Sunday, June 12, 2011

திண்ணை                டில்லி  ‘ஃப்ளைட்’  சுமார் நாற்பது நிமிடம் தாமதமாகவே சென்னையில் தரையிறங்கியது.  சூட்கேசை இழுத்துக் கொண்டு நான் காரிடாரை அடைந்த போது, எப்போதும் போல் தூரத்தில்  ‘ரேம்ப்’புக்கு அருகில் முரளி எனக்காக சிறு புன்னகையுடன் காத்திருந்தான். 
                மீனம்பாக்கம் புதுப் பொலிவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ராட்சச க்ரேன்கள் கொத்துக்கொத்தாய் பைப்புகளை உயர்த்திக் கொண்டிருந்தன. இன்னும் எப்படியும் இரண்டு வருடங்களில் இந்த விமான நிலையம் கம்பீர அடையாளம் பெற்றுவிடும்.
                  ”வாக்கா.... “ என்று வறட்சியான குரலில் முரளி என்னை வரவேற்று, என் கையிலிருந்து சூட்கேசை வாங்கிக் கொண்டான்.”அரை மணி நேரத்திற்கு மேல லேட்டாயிடிச்சில்லே” - என்றான்.
                   துப்பட்டாவை சரி செய்தபடி“ம்” என்றேன், “அம்மா இப்போ எப்படி இருக்கா?”
                  “இந்த தரம் பொழைக்கறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்க்கா” என்றவனின் குரல் உடைந்தது. அவன் முதுகை ஆதுரமாக தட்டியபடி, ”ரிலாக்ஸ், முரளி” என்றேன். வெளியில் வந்தோம்.
                   அவனுடைய காரில் பின் சீட்டில் நான் அமர, அவனும் என்னருகில் வந்தமர்ந்தான். என் கண் எழுப்பிய கேள்வியை உணர்ந்தவனாக,”ஒரு மாதிரி டென்ஷனா இருக்கிறதனால வண்டி எடுக்க வேண்டாம்னுட்டு டிரைவரை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்க்கா” - என்றான்.
                   ”என்ன டென்ஷன் இதுலே... நான் வேணா ஓட்டட்டா...” என்று நான் சொல்வதற்கும் டிரைவர்  வண்டியருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.
                    மீனம்பாக்கத்தை விட்டு நீங்கி, கார் ஜீ.எஸ்.டி ரோடில் செங்கல்பட்டை நோக்கி விரைந்தது. 
                    முரளியை சமாதானப்படுத்தும் விதமாக, அவன் பக்கம் திரும்பி,”என்னைக்காவது ஒரு நாள் மரணம் நிகழவேண்டியதுதானே, முரளி அதை நினைச்சு வருத்தப்படறதோ... பயப்படவோ கூடாது ” என்றேன். 
                    “இந்த அப்பாவும் ரொம்பப் படுத்தறார் அக்கா..” என்றான்.
                     “ஏன்... என்ன பண்றார்?”
                     டிரைவருக்கு நம் வீட்டு விவகாரங்கள் தெரிய வேண்டாம் என்று நினைத்தானோ என்னமோ, வெறுமனே”ப்ச்” என்றான், முரளி. நானும் அதற்குப் பிறகு ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
                     ப்பா, அம்மா, குழந்தைகள் என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பம்தான் எங்களுடையதும். அதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால்..... என்றைக்கு அப்பா என்கிற  ஒரு நாகரீகமற்ற மனிதர் அம்மாவை விடுத்து வேறு ஒரு பெண்ணோடு  ஓடிப் போனாரோ.....அன்றோடு தொலைந்தது எங்கள் குடும்ப சந்தோஷம். அப்பா, எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது,  கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சார சப்ளை ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எக்ஸ்ட்ரா காசு பார்த்தவர். அம்மா பவிஷான குடும்பத்தில் இருந்து வந்தவள் . ஆதலால்,“வேண்டாம்  இந்த மாதிரியான கேவல பிழைப்பு “என்று மன்றாடிப் பார்த்தாள். “அஞ்சு குழந்தைகளை வள்ர்க்கணும்னா இந்த மாதிரி ஏதாவது குறுக்கு வழியில போனாத்தான் உண்டு” என்றார் அப்பா.
                     இரண்டு பேர்க்கும் ஒத்துப் போகவில்லை என்பதை  ஊர் உணர்வதற்கு முன்னால், வேறு ஜாதி பெண் ஒருத்தி உணர்ந்துகொண்டாள். தன் வீட்டிற்கு கொக்கி போட்டு மின்சாரம் கொடுத்தவரை, தான் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டாள்.
                      ‘நிலை குலைந்து போதல்’ என்கிற பதத்திற்கு அம்மாவின்  அழுகை   மூலம் அன்றுதான்அர்த்தம் அறிந்து கொண்டேன். ‘துரோகி...துரோகி’ என்று பித்துப் பிடித்தவளைப் போல் அரற்றிக் கொண்டேயிருந்த அம்மாவிற்கு ஆறுதலாக , அம்மாவின் தம்பி  கொஞ்ச காலம் எங்களைப் பார்த்துக் கொண்டார். ‘அந்த மஹா பாவி இருக்கிற ஊர்ல நான் இருக்க மாட்டேன்’ என்று சொல்லி, குஞ்சும்,குளுவான்களுமாக இருந்த எங்களை இழுத்துக் கொண்டு திருச்சியை விட்டு , முன்னே பின்னே தெரியாத செங்கல்பட்டுக்கு வந்தாள்.
                     எங்களையெல்லாம் ஆளாக்குவதற்கு அவள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா...மாமா அனுப்பின அரிசி,பருப்பு,சொல்ப பணம் இதெல்லாம் பத்து நாளுக்குத்தான் வரும். கடைத்தெரு ‘நடேசன் காபி க்ளப்’பில் இட்லி மாவரைத்துக் கொடுத்து, கல்யாண வீடுகளில் பட்சணம் செய்து தந்து, வடாம் இட்டு விற்று, அப்பளாம் இட்டு கடை,கடையாக ஏறி விற்று, படாத பாடு பட்டாள். என்னையும், அம்பியையும் எசெல்சி வரை படிக்க வைத்தாள். நாங்கள் தலையெடுத்து மீனாட்சி, அகல்யா, முரளி மூவரையும் டிகிரி வரையில் படிக்க வைத்தோம்.
             
                    ப்போது நடந்த சம்பவம் ஒன்று இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. ஸ்கூல் ஃபீஸ் கட்ட மறுநாள்தான் கடைசி. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவிடம் சொன்னேன். பரபரப்பாகிவிட்டாள். வளையல் ஜோடி ஒன்றை தலைப்பில் முடிந்து எடுத்துக்கொண்டு ,”நீ முன்னாடி போய் பெரிய சேட்டு கடையில இருந்தா கையை அசைச்சு எனக்கு சமிக்ஞை கொடு”ன்னு சொல்லிட்டு, என்னை போக சொல்றா. ஓட்டமும் நடையுமா போன நான், வேகமா வர்ற ஒரு சைக்கிள கவனிக்காம மோதி கீழ விழுந்து கால் முட்டியில சிராய்ச்சு, போட்டிருந்த ஒரே நல்ல பாசிபச்சை கலர் பாவாடையும் கிழிஞ்சு நின்னேன். ஆனாலும், அம்மா பார்க்கிறதுக்கு முன்னால, சுதாரிச்சுண்டு ஓடினால், சேட்டு கடையில பெரியவர் இல்ல. அவர் பையன்தான் இருந்தான்.
                    பெரியவர் மிக நல்ல மனிதர். ரொம்ப கறாராக பேச மாட்டார். தேவைக்கேற்ப பணம் கொடுத்து உதவுவார். அவர் கடையில் இல்லாத சமயங்களில் பெரும்பாலும் அம்மாவின் நகைகள் அங்கே போகாது.
                     அன்றைக்கு நான்காவது முறையில்தான் - இரவு எட்டரை மணிக்கு மேல்தான் - எங்களின் முயற்சிக்கு பலன் கிட்டியது.நகைக்கு எதிர்பார்த்த பணமும் கிடைத்தது.  பெரியவர், என்னை ”நல்லாப் படிக்கணும்..பாப்பா.... ஒங்க அம்மாவோட கஷ்டத்த உணர்ந்து படிம்மா” என்றார்.
                      இப்படியெல்லாம் கஷ்டங்களினூடே படித்து முன்னேறி ஒரு பிரைவேட் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து, இரண்டுமூன்று கம்பெனிகள் மாறி இன்று தில்லியில் ஒரு MNC- யில் நல்ல நிலையில் நான் இருப்பதற்கு அன்று அம்மா செய்த தியாகங்கள்தான் காரணம். ’ஆண்துணை இல்லாமல் போனால் என்ன , நான் பெற்றதுகளை கரையேற்றிக் காண்பிப்பேன்’ என்று அவள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் பெருமைப்படத்தக்கது.

                       முரளி வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கி வந்தான். குடித்தோம். சிறிது நேரம் காரை விட்டிறங்கி நடந்தேன். இன்னும் கால் மணி நேரத்தில் வீட்டை அடைந்து விடலாம். படுத்த படுக்கையாய் இருக்கும் அம்மாவைப் பார்க்கலாம்.

                      முரளி, அப்பாவும் படுத்துவதாக சொன்னானே.... ஏதோ வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று சாப்பிட்டுவிட்டு  ’சிவனே’ன்னு  இருக்க வேண்டியதுதானே...ஏன் தொந்தரவு செய்கிறார்?
                       அப்பா....
                       அப்படி ஒருத்தர் எங்களுக்கு இருக்கிறார் என்பதை நாங்கள் மறந்திருந்த சமயம் - அதாவது, நான் தில்லியில் செட்டில் ஆன பின்பு, அம்பி வேலைக்குப் போன பின்னால் , மீனாட்சிக்கும், அகல்யாவிற்கும் கல்யாணம் முடித்து வைத்ததற்கு பிறகு, முரளி P.O - வாக வேலையில் சேர சென்னை சென்றிருந்த நாளில் அப்பா, வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்.
                        ’ எந்த மஹாபாவியின் முகத்தில் முழிக்கவே கூடாது’என்று சபதம் எடுத்திருந்தாளோஅந்த ‘மஹா பாவி’ வீட்டு வாசலில் நின்று ”என்னை மன்னிச்சுடு, சுப்பு” என்று கதறியதும் அம்மா ஆடிப் போய் விட்டாள். ஆனாலும், வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை.
                          அம்பியை விட்டு எனக்கு ஃபோன் போட்டு பேசச் சொன்னாள். அம்பி , “ஷ்யாமிளி....அப்பாவுக்கு இப்பத்தான் நம்ப நினைப்பு வந்திருக்கு” என்றான். அம்மாவிற்கு நேர்ந்த அவமதிப்புகளும், அவளை துவளடித்த துயரங்களும்,  முள்மேல் நிறுத்தி வைத்த  ஒவ்வொரு  கணமும் என் மனசில் வந்து போயின.
                           ஃபோனை அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன்.”என்னையும், குழந்தைகளையும்  தவியா தவிக்க விட்டுட்டு எவ பின்னாடியோ ஓடிப்போன மனுஷனை இந்த வீட்டுக்குள்ள விடப்படாது, ஷ்யாமிளி” என்றாள், அம்மா. அவளின் உறுதியான குரலில் ஆவேசக் கலப்பில்லாத மனவலி புரிந்தது. நம்பிக்கை துரோகம் செய்தவனை ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத பெண்மனம் புலனானது.
                         ஃபோனை வாங்கி அந்த மனிதர் பேசினார். “நான் அப்படி செஞ்சது பெரிய தப்புதான்....கடவுளும் , காலமும் எனக்கு வேண்டிய அளவு தண்டனை கொடுத்திருக்கு....பெண்டாட்டியை வேண்டாம்னு உதறின கையும், ஓடிப் போன காலும் பாரிசம் தாக்கி, செயல் குறைஞ்சு போச்சு. புத்தி தெளிவாயிடுச்சி... நீங்க எல்லாரும் என்ன மேலும் தண்டிக்கறதா இருந்தாலும் அதயும் ஏத்துக்கறேன்... ஆனா,என்ன துரத்தி விட்டுடாதீங்க..... வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்னீங்கன்னா, இந்த திண்ணையில முடங்கி கிடக்கேன்...என்னை   போக மட்டும் சொல்லிடாதீங்க” என்று அழுதார் அப்பா.
                       அம்மாவின் பிடிவாதம் சற்று இளகியது. திண்ணையைத் தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்துடன் திண்ணையில் தங்கிக் கொள்ள சம்மதித்தாள்.
                         அதற்கு பிறகு செங்கல்பட்டு போயிருந்த சந்தர்ப்பங்களில் ஈனப்பிறவியாக தன்னை பாவித்துக்கொண்டு திண்ணையிலேயே  வசித்த அந்த மனிதரிடத்து எனக்கு  துளியும் பரிதாபம் தோன்றவில்லை. நாங்கள் யாராவது ஒருத்தர் தட்டில் சாப்பாடு  வைப்போம். எடுத்து சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைப்பார். அம்மா  கொண்டு வைத்தால் , ஒரு வித அசிரத்தையுடன்  தட்டை தள்ளி எறிவாள். 
                       தில்லியிலிருந்து ஒரு தரம் வந்திருந்த போது, அப்பாவிற்காக திண்ணையை ஒட்டியே ஒரு பாத்ரூம் கட்டிக் கொடுத்தேன்.

**********
                    ம்மா, கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தாள். குனிந்து அவள் காதருகில் ,”அம்மா, நாந்தாம்மா உன்னோட ஷ்யாமிளி வந்திருக்கேன்” என்றேன். கண்ணைத்திறக்கவில்லை. உதடுகளில் மட்டும் ம்லேசாய் அசைவு தெரிந்தது.
                    மகன்களும்,மருமள்களும், மாப்பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் நன்றாகவே அம்மாவை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரும் வாழ்க்கையை இழப்பாகவே வாழ்ந்த மனுஷி,கடைசி மூச்சையும்  இழக்க தயாராகிக் கொண்டிருந்தாள். 
                    அம்மாவின் சுருங்கிப் போன கையைப் பிடித்தபடி அம்பி, “அம்மா உன்னை நினைச்சுத்தான் உருகிப் போவா.. கஷ்டத்தையெல்லாம் என் கூட சேர்ந்து தாங்கினா ஷ்யாமிளி.... நான் இருக்கேம்மா உனக்கு... கண்கலங்காதேம்மான்னு... எனக்கு பொண்ணுக்கு பொண்ணா, பிள்ளைக்கு பிள்ளையா இருந்தா....என்னை தெருவில விட்ட தெய்வம் அனுப்பித் தந்த ஊனுகோல் அவ’ன்னு வாய் ஓயாம புலம்பித் தீர்ப்பா......’குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வரணும்கிற என்னோட வெறிக்கு ,தோள் கொடுத்து ஒத்தாசை பண்ணனும்னுட்டு, தான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லே’ன்னு என்கூடவே கைபிடிச்சு வந்தவ,ஷ்யாமிளி’ன்னு எப்பவும் உன்னைப் பத்தின பேச்சுத்தான்.... உன்னோட நினைப்புதான் ”
                    எங்களுக்காக உழைத்து  ஒடுங்கிப் போன அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். ஒரு வித கெஞ்சல் முகபாவனையுடன் ,திண்ணை ஜன்னல் வழியாக அப்பா எட்டியெட்டிப் பார்த்தார் .
                    அம்மாவின் மூச்சில் ஒருவித அசாதாரணம் தென்படவே , அவளருகில் குனிந்தேன். அம்மா ”மனசில வஞ்சனையோட இந்த உலகத்தை விட்டு பிரியாதே.... போனால் போகட்டும் என்று அப்பாவை மன்னித்து விடம்மா” என்று அவளைக் கட்டிக் கொண்டு ரஹஸ்யமாய் சொன்னேன். எனக்கான தன் பதிலை மிகவும் அமானுஷ்யமாக (subtle) சொல்லி விட்டு தலையை என் மடியில் சாய்த்தாள்.

**********
                 ல்லா பாரங்களையும் ஒரு பெருமூச்சுடன் உதறிவிட்டு கிளம்பிய அம்மாவை தலை நிறைய பூக்கள் சூட்டி, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன்  சுமங்கலியாக வழியனுப்பி வைத்தோம். ஒரு கணவனாக செய்ய வேண்டிய சாங்கியங்களை அப்பா ஒருவித குற்ற உணர்வு மேலிட செய்து முடித்தார். 
                   “நீங்க இனிமே திண்ணையில இருக்க வேண்டாம்.... நாளையிலிருந்து வீட்டிற்குள் வரலாம். அம்மாவிடம் கேட்டுவிட்டேன்” என்றேன். அந்த முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

                   றுநாள் காலையில்,  திண்ணையைப் போய் பார்க்கிறேன். திண்ணை காலியாக வெறிச்சோடிக் கிடந்தது.அந்த மனிதரைக் காணோம்.

************************

                  


 

             
                           
                                                   
                    


                   Saturday, June 4, 2011

நான் அடிச்சா தாங்கமாட்டே...


                 ரொம்ப நாட்களுக்கு பிறகு எனது பால்ய நண்பன் அப்துல் கஃபூரை  கைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, ‘ராசாவே உன்ன..காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுதே’ என்ற  ட்யூன் முடிந்த பிறகு, செருமியபடி, “ஹலோ... சொல்லுங்க ...எல்லென்” என்றான்.
                  ஷேம,லாபங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, “கஃபூர்.... போன வாரம் திருச்சி போயிருந்தேன்... அப்ப நம்ப  மேத்ஸ் டீச்சர் கிருஷ்ணன் சாரப் பாத்தேன்” என்றேன்.
                   “ஹேய்... நம்ப ’மஞ்சள் மகிமை’ கிருஷ்ணன் சாரா ? எப்படிப்பா இருக்கார்”
                   “நல்லாவே இருக்கார்.... என்ன.. வயசாயிடிச்சதுனால லேசா டல்லடிக்கிறார் ... மத்தபடி ஓக்கே”
                    “உன்ன அடையாளம் கண்டுகிட்டாரா?”
                    “ம்ஹூம்...’முத பெஞ்சில உட்கார்ந்திருப்பேனே சார்... உங்களுக்கு வெத்தில, பாக்கு கூட வாங்கி வருவேனே சார்’ங்கிறேன்.... ஆமாம்.. ஆமாங்கிறார்... ஆனா அவரால சரியா புரிஞ்சிக்க முடியல”
                    “அப்புறம்...” என்ற கஃபூர், “ஒரு நிமிஷம்..எல்லென்... சிக்னல் சரியா கிடைக்கல... மாடிக்கு வர்றேன்” என்று சொல்லி விட்டு சில நொடி மெளனம் காத்து, “ ம்... இப்ப சொல்லு” என்றான்.
                    “அப்புறமென்ன... ’சார்... நான் கஃபூர் கிளாஸ்மேட் சார்’ ன்னதும், அவர் முகத்தில ’அப்படியா’ன்னு ...ஒரே சந்தோஷம்...ஒன்னெ நல்லா ஞாபகம் வச்சுருக்கார்”
                     “அப்படியா..”என்றவனின் குரலிலும் சந்தோஷம் தொனித்தது.”என்ன அவரால மறக்க முடியாது...எல்லென். அதே போல எனக்கும் அவர லேசில மறக்க முடியாது” என்றான்.
                        இந்த கைபேசி சம்பாஷணையில் நமக்கு தேவையான இடத்தில் தற்போது நாம் நிற்பதால் இந்த உரையாடலை இங்கேயே  'freeze'  செய்து விட்டு கதைக்கு வருவோம்.
                       1974 - 75 -இல் நானும் கஃபூரும் S.S.L.C. (அப்போது XI Std.,) படித்துக் கொண்டிருந்தோம். நான் காலாண்டுத் தேர்வுக்கு முன்னால் ‘டைபாய்டு’ ஜுரத்தில் படுத்துவிட்ட போது யக்ஞராமன் என்ற நண்பனும் இந்த கஃபூரும்தான் என் வீட்டிற்கு வந்து அன்றாடம் நடந்த  பாட விவரங்களை எனக்கு சொல்வர். அந்த நன்றி கலந்த நட்பு 35 வருடங்களுக்கு பிறகும் - இன்றளவும் - எனக்கு கஃபூருடன் தொடர்கிறது.
                       கஃபூர் ஒரு  above average student.  படிப்பில் மிகவும் ஆர்வம் மிக்கவன். எல்லா பாடங்களிலும் 70 - 80 என்று வாங்குபவன், கணக்கில் மட்டும் நொண்டியடிப்பான். 50 -ஐ  தாண்ட ’தலைகீழாய் நின்று தண்ணி குடிப்பான்’.  
                        ’கிருஷ்ணன் சார்ட்ட மட்டும் ட்யூஷன் எடுத்தேன்னா நல்லா மார்க் வாங்கலாம்டான்னு’ சொல்வான்... அவர்கிட்ட கேட்டுப் பார்த்தான்..கெஞ்சிப் பார்த்தான். ஆனா, அவர் ஏனோ காரணத்தினால அவனுக்கு ட்யூஷன் எடுக்கறத தவிர்த்துகிட்டே வந்தார்.
                        சம்பவ தினத்தன்று, க்ளாஸ் ரூமில் மேத்ஸ் க்ளாஸை  கிருஷ்ணன் சார், மிகுந்த ரசனையுடன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சார், ஒரு கோபிஷ்டர் என்பதால் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கவனிக்கிறோம். ஆனால், மூன்றாவது பெஞ்சில் , கஃபூரோ இடது கையை இடது கன்னத்திற்கு முட்டு கொடுத்தவாறு உட்கார்ந்திருந்த ‘போஸை’ பார்த்த சாருக்கு வந்ததே கோபம். கஃபூரை எழுந்திருக்கச் சொல்லி ‘பொளிச்’சென்று விட்டார், ஒரு அறை. என் காதுக்குள் ‘ஙொய்ங்’ஙென்றது. அதைத் தொடர்ந்து ,
                        “அய்யோ” என்று  ஒரு அலறல்... அடி வாங்கிய கஃபூர் கத்தவில்லை...அடி கொடுத்த சார்தான் அலறியிருக்கிறார். என்ன நடந்தது என்று நாங்கள் எழுந்து நின்று பார்க்கிறோம்......கஃபூரின் வாயிலிருந்து பல் உடைந்து ரத்தம் ‘குபுக்..குபுக்’கென்று தினத்தந்தி பாஷைக் கணக்காய்க் கொட்டுகிறது. ரத்ததைப் பார்த்த சாருக்கு கையும் ஓடவில்லை...காலும் ஓடவில்லை...அவர் தேகம் நடுங்குகிறது...டென்ஷனாகி விட்டார்...”லீடர் இவனை பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போய் வாயைக் கழுவி, காண்டீன்ல  டீ வாங்கிக் கொடு....” என்று சொல்லி லீடர் கையில் ஐந்து ரூபாயைத் திணிக்கிறார்.
                      அன்று அவர் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்....எல்லாம் நல்ல படியாக நடந்தேறி, அவன் சொஸ்தமாக கிளாஸிற்கு வந்து சேர்ந்த பின்புதான் சாரின் முகம் மந்தஹாசமாகியது.(இரண்டு டீ போக மிச்ச சில்லறை அவர் கைக்கு போகவில்லை என்பது வேறு விஷயம்.)
                      அன்று நடந்த சம்பவத்தை ஹெட்மாஸ்டர் வரையில் கொண்டு போக மாட்டேன் என்று அவரிடம் கஃபூர் சத்தியம் செய்த போது, சார் அவனை உச்சிமுகராத குறைதான். 
                       ஆனால் அடுத்தடுத்த கிளாஸ்களில் சார்வாள் பொத்தாம்பொதுவாக,”ஓங்கி அடிச்சேன்னா, பல்லு முகரையெல்லாம் பிஞ்சிடும்” என்று ‘சிங்கம்’பட வசனம் மாதிரி பேசி உதார் விடும் போது எங்களுக்கு லேசாய் சிரிப்பு வரும்.
                        அதற்குப் பிறகு கஃபூர், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ,” எங்கப்பா உங்களைப் பாக்கணும்னு சொன்னார்,சார்”னு சொல்லவும், சார் பதட்டமாகினாராம். “எதுக்கு..எதுக்கு?” என்றாராம்.
                        “உங்ககிட்ட மேத்ஸ் ட்யூஷன் சம்பந்தமா பேசணுமாம், சார்” என்றிருக்கிறான், கஃபூர்.
                        ‘ இதுக்கெல்லாம் அப்பா வந்து என்னத்துக்கு சொல்லணும்... நாளை முதல் நீ ட்யூஷனுக்கு வந்துடு” என்று சொல்லி விட்டாராம்.
                         அவரிடத்தில்  ட்யூஷன் படித்து கணக்கில் 100 க்கு 100 வாங்கியதை எல்லோரிடத்தும் ,எப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்ளும்  கஃபூர், அடி வாங்கிய அன்றைக்கு அவன் பல் வலியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்ததையும் , அதனால் கையூன்றி அமர்ந்திருந்ததையும், நயா பைசா செலவில்லாமல் பல் ‘பிடுங்க’ப்பட்டதையும் எவரிடத்தும் சொன்னதே இல்லை -  என்னைத் தவிர.

**********                 
 

                  

                       
 
 

Sunday, May 22, 2011

                             சின்முத்ரா                  தியானத்தின் போது கைகளை இந்த படத்தில் உள்ளது போல் வைத்துக் கொண்டு த்யானிப்பது மிக விசேஷமானது. இதற்கு நாட்டிய  சாஸ்த்ரத்தில்  சின்முத்திரை என்று பெயர்.

                  தனித்தன்மைப் பெற்றிருப்பதாலும் , அதில்லாமல் மற்ற விரல்களின் இயக்கங்கள் ஸ்தம்பித்து விடும் என்பதாலும் கட்டை விரல்  - பரமனைக் குறிக்கிறது.
                  சுட்டிக் காண்பிப்பதின் மூலம் மனித தாத்பர்யத்தை உணர்த்துவதால் , சுட்டு விரல் - ஜீவனைக் குறிக்கிறது.

                  மோதிரம் அணிவதற்காக பிரத்தியேகமாக உள்ள மோதிர விரல் - பொன்னைக் குறிக்கிறது.

                  பாம்பைக் குறித்து , பாம்பு உறையும் இடத்தை உணர்த்தும்  பாம்பு விரல்  - மண்ணைக் குறிக்கிறது.

                  நளினமானதாலும் , மென்மையானதாலும் கடைசியான சிறு விரல்பெண்ணைக் குறிக்கிறது.

                  ‘அதாவது , சுட்டுவிரல் கட்டைவிரலைத் தவிர மற்ற மூன்று விரல்களுடன் இயைந்து அமைந்திருப்பது போல் ஜீவாத்மா எப்போதும் மண், பொன், பெண் ஆகியவற்றில் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட ஜீவாத்மா , பரமாத்மாவை அடைய வேண்டுமானால் அம்மூன்றிலிருந்தும் விலகி வர வேண்டும். பிறகுதான் பரமனை அடைவது சாத்தியம்’ என்கிற அரிய தத்துவத்தை உணர்த்துகிறது இந்த சின்முத்திரை.   

*******************Saturday, May 14, 2011

முதுமை

அடங்கப்போகும்  மனசுக்குள் 
சாஸ்வத சோகம்
மேகத்திட்டாக வியாபிக்கிறது;
சுவாசத்தின் பிரயத்தனத்தில் கூட 
ஆயாசம் சுதந்திர நடை போடுகிறது;
சாளரத்தின் அரையிருட்டில் 
நிச்சலனமாய் விட்ட 
பழைய பரிணாமக் கோட்பாடு 
ஒற்றைக் காலணியாய் தவம் கிடக்கிறது.
ஏன் 
விடியலுக்கு 
மட்டுமிந்த அர்த்தமுள்ள மோனம்?_கணையாழி பிப்ரவரி-1983 இதழில் வெளியானது.  
 
 

Saturday, April 30, 2011

             பேரு....பெத்த (BEDDHA ) பேரு...
                         ந்த இன்டர்நெட் யுகத்தில் எதற்குத்தான் வெப்சைட்டை நோண்டுவது என்ற விவஸ்தையே இல்லாமல்போய் விட்டது.....ஊசி முதல்  ஊலல்லா   பாடல் வரை 'நெட்'டில் தான் தேடுகிறார்கள். இப்படித்தான் ஒருநாள் எனது ஷட்டகரின் மகள், தனக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு பிறக்க இருக்கும் குழந்தைக்காக இப்போதே 'நெட்'இல் பெயர் தேடிக் கொண்டிருந்தாள். நம் காலத்தில் எல்லாம் இதெற்கெல்லாம் இப்படியா ரூம் போட்டு யோசித்தார்கள்? 'சாமி பெயரை வை....இல்லையென்றால் தாத்தா,பாட்டி பெயரை வை' என்று சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
                       அப்படித்தான் எனக்கு 'லக்ஷ்மிநாராயணன்' என்ற என் அம்மா வழி தாத்தாவின் பெயர்  வைக்கப்பட்டது.
                         அவர் நினைவாய் எனக்கு லக்ஷ்மிநாராயணன் என்ற நாமகரணம் சூட்டப்பட்டாலும், பெரியவரின் பெயரை எப்படி கூப்பிடுவது என்பதால் 'கிரிதரன்' என சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஒரு பெயரை வைத்து வீட்டில் கூப்பிட்டனர் . பின்னே என்ன லக்ஷ்மிநாராயணன் என்ற பெயரை சுருக்கி “நாணா” என்றோ “லக்‌ஷ்மணன்” என்றோ அழைத்திருக்கலாம்.
                        ஆனால், நண்பர்கள் என்னை 'லக்ஷ்மிநாராயணன்' என்று நீட்டிமுழக்காமல்   செல்லமாக 'லக்ஷ்மி' என்று  அழைத்தபோதுதான் சில சங்கடங்கள் உதித்தன.
                         நான் திருச்சியில் ஆறாப்பு  படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்கூலுக்குப்  போகிறேன். போகிற வழியில், பச்சை வர்ண தாவணி  வண்ணத்துப் பூச்சிகள் படிக்கும்  ’சாவித்திரி வித்யாசாலா பெண்கள் பள்ளிக்கூடத்தை’ தாண்டித்தான் போயாகவேண்டும். பின்னால் வந்து கொண்டிருந்த என் நண்பன் மனோகர் என்னை நோக்கி ,"லக்ஷ்மி" என்று விளிக்க, ஒரு தாவணி அக்கா அவனை முறைத்து ஏதோ திட்ட, நண்பன்  அன்றோடு என் சங்காத்தமே வேண்டாம் என்கிற முடிவிற்கு வந்து விட்டான். 
                          ரு முறை அப்படித்தான்....திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது, ஒரு வேளாண்  நிகழ்ச்சிக்காக ஒலிப்பதிவு செய்ய நாலைந்து அலுவலர்கள் ஜீப்பில் மயிலாடுதுறை சென்றோம். ஒரு  குறிப்பிட்ட B .D .O . விடம்  குரல் பதிவு செய்ய வேண்டி இருந்தது. B .D .O . ரெடியாக இருந்தால் என்னை அழைப்பதாகவும் அதன் பின் மைக், ரிகார்டரெல்லாம் செட் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு ஜீப்பை விட்டு இறங்கினார் என் நண்பரும் நிகழ்ச்சி பொறுப்பாளருமான கண்ணன்.
                         B .D .O . ஒலிப்பதிவிற்கு உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார். கண்ணனும் தன்னுடன் வந்த ஜீப் டிரைவரிடம் .'' ஒலிப்பதிவு பண்ணிடலாம்...லக்ஷ்மியை, வரச் சொல்லுங்க" என்றதும், அந்த B .D .O . தலையை சீப்பெடுத்து வாருகிறாராம், மீசையை வாருகிறாராம். வேர்வை துடைத்து 'மாவடித்து' கொள்கிறாராம். முக்கால் கையாக மடித்துவைத்த  சட்டையை அவசராவசரமாக முழுக்கையாக்கி, பொத்தானிட்டு  ரெடியானாராம். நான் மைக் ரெகார்டர் சகிதம் உள்ளே போனதும், "வாங்க லக்ஷ்மி, ரெகார்ட் பண்ணிடுவோம்" என்று என்னைப்பார்த்து கண்ணன் சொன்னதும் அந்த B .D .O .வின் முகம் ’ஙே’ என்றாகிவிட்டது !!
                         காதலித்துக்கொண்டிருந்த நாள்களில் , போனில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பவள் திடும்மென்று ,"டீ லக்ஷ்மி, அசைன்மென்ட் முடிச்சிட்டு சீக்கிரம் கொடுடீ...நான் எழுதணும்" என்று சொன்னாள் என்றால்  'பார்ட்டி'யின்  அப்ஸோ,அம்ஸோ 'அங்கிட்டு' அருகில் இருப்பதாக அர்த்தம். உஷாராகி விரைவாய் பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்வேன்.
                        இப்படி என் பெயரை சுருக்கி அழைத்ததால் ஏற்பட்ட சந்தோஷ/ சங்கடங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அற்புதமான பெயரை மிகவும் நேசிக்கவே செய்கிறேன்.
                         தே திருச்சி வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மற்றொரு மறக்கவொண்ணா சம்பவம். ஒரு நாள் ,
                          "லக்ஷ்மி...உங்களுக்கு ஒரு போன் கால்" - என்றார் ஒரு நண்பர்.
                          யாராயிருக்கும் என்கிற யோசனையுடன் நண்பர் கையிலிருந்து ரிசீவரை வாங்கி ,"ஹலோ" என்றேன்.
                           பரிச்சயமில்லாத ஆண் குரலொன்று ,"லக்ஷ்மிநாராயணன்தானே?' என்றது.
                           "ஹாங்"
                           "நான்தாண்டா கிரி, சித்தப்பா பேசறேன்"
                           "ஓ...சித்தப்பாவா?  சொல்லுங்க சித்தப்பா...எங்கேயிருந்து பேசறீங்க?"
                           "திண்டுக்கல்லில் இருந்துதான் பேசறேன்"
                            என் அப்பாவின் கடைசி தம்பி,அதாவது, எங்கள் சித்தப்பா அப்போது திண்டுக்கல்லில்தான் இருந்தார்.
                            "என்னாச்சு சித்தப்பா வாய்ஸ் என்னமோ மாதிரி இருக்கு ? தொண்டை கட்டியிருக்கா?" என்றேன் அக்கறையாய்.
                            ”ஆமாம்ப்பா” என்றவர் க்ஷேம லாபங்களை விசாரித்துவிட்டு, "உங்கம்மா VRS க்கு எழுதிக் கொடுத்திட்டாங்களா?" என்றார்.
                            சமையலறையே கதியாய்க் கிடக்கும் இல்லத்தரசியான அம்மாவாவது VRS ஆவது .... கொடுப்பதாவது.... எங்கியோ இடிக்குதே...என்று யோசித்தேன்...
                            "சார்...இது ஏதோ ராங் நம்பர்...உங்களுக்கு யார் வேணும்"
                            "லக்ஷ்மிநாராயணன்தானேப்பா நீ?"
                            "ஆமாம்"
                            "வீட்டிலே கூட உன்னை கிரின்னு  கூப்பிடுவாங்களே"
                            "வாஸ்தவம்தான்" என்றேன்.
                            "போன மார்ச்ல மெட்ராசிலிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிகிட்டு திருச்சி வந்தியேப்பா"
                            எனக்கு நெற்றியில் வியர்த்தாலும் மண்டைக்குள் 'சுர்'ரென்று ரத்தம் சுழட்டி அடித்து நியூரான்களை உசுப்பி,'அடடா....கிளெரிகல் செக்ஷன் 
லக்ஷ்மிநாராயணன்' என்றது.
                            விஷயத்தை அவருக்கு விண்டுரைத்தேன்."அப்படியா, ஹாஹ்..ஹா' என்று போனுக்குள்ளிருந்து சிரித்தார்.
                             அப்புறம் அந்த லக்ஷ்மிநாராயணனை அழைத்து விஷயத்தை விளக்கினேன்.அவனது சித்தப்பாவிடம் பேசச் சொன்னேன்.
                              எங்கள் இரண்டு பேருக்கும் இருந்த அபூர்வ 'பெயர்கள் ஒற்றுமை' அந்த சம்பவத்திற்கு பிறகு இன்றுவரை எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான  நட்பிற்கு வழி வகுத்தது என்பது வேறு விஷயம் !

************


                         

Sunday, April 24, 2011

நானும் மனிதன்
நானும் மனிதன்

அநித்ய
பயங்களிலேயே ஜனித்து ,
உயிர்ப்பு உணர்வுடன்,
சராசரத்தை 
கூடிய   மட்டில் அசுத்தமாக்கி ,
சாதாரணங்களோடு 
சர்வ சாதாரணமாய் ;
புலன் மீறி விதிர்த்து
புணர்வில் மிக லயித்து 
விருத்தி பாசுரத்தை மட்டும் 
சுவர்க் கோழிகளுடன் 
நள்ளிரவில் உச்சாடனம் செய்து 
அடுத்த தலைமுறைக்கு 
பதில் கூறிய பெருமையுடன் 
இதோ ....
அடங்கப் போகிறேன் .


('கணையாழி' மீண்டு(ம்) வெளிவருவதில் மகிழ்வுறும் எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன். இந்த சந்தர்ப்பத்தில் 'கணையாழி' செப்டம்பர் - 1982 இல் ஜீவிதன் என்கிற புனைபெயரில் அடியேன் எழுதி பிரசுரமான கவிதை)

Sunday, March 27, 2011

தூங்கு மூஞ்சி மரம்                  {கடந்த நாலைந்து வாரங்களாக ஆபிசிலும், வீட்டிலும் அய்யா பயங்கர பிசி... சிந்தனை குதிரை 'டொக்..டொக்'கென்று அதுபாட்டிற்கு ஓடிக் கொண்டிருந்தாலும் ஆற அமர உட்கார்ந்து இரண்டு வரி அடிக்க, மனசு ஒத்துழைக்க  வேணுமே...ம்ஹும்...நம் இனி(ணை)ய நண்பர்கள் "என்னாச்சு ?" என்று அக்கறையுடன் விசாரித்தனர்....எப்பொழுதும் என்னை எழுத உற்சாகப் படுத்தும் ஆர்.ஆர்.ஆர் சார், "ஆபிஸ், வீடுன்னு ஏதாவது காரணம் சொல்லாம எழுதுங்க " என்று அன்புக் கட்டளையிட்டார்...மேலும் , நலம் விசாரித்த பிரணவம் ரவிக்குமார் அவர்களுக்கும் கூடை கூடையாய் நன்றி கூறி தொடர்கிறேன்.}

             யாம் அறிந்த வரையில் எல்லா அரசு அலுவலகங்களின் முகப்பிலும் குறைந்தது ஒரு தூங்கு மூஞ்சி மரமாவது இருக்கிறது....'இது ஏன் ?' என்ற கேள்வி என் மூளையை அடிக்கடி பிறாண்டும். நானும் ,அங்கு பணி புரிவதாய் சொல்லிக் கொள்ளும் சில நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் தெரியவில்லை..'சிம்பாலிக் ஆக இருக்குமோ ' என்று என்னையே திரும்பிக் கேட்டு விட்டு  கொட்டாவி விட்டனர்..."ஏன் எதுக்குன்னு தெரியாதுப்பா...நாங்க மதியம் லஞ்ச் முடிச்சிட்டு வெற்றிலை பாக்கு,சிகரெட்,பான்,கடலை மிட்டாய் போன்றவற்றை அரட்டையுடன் அனுபவிக்க கிடைத்த நிழற்குடை..." என்றனர் வேறு சிலர்.

                   நமக்குத்தான் ஒரு விஷயம் கிடைத்து விட்டால் வேர் வரை சென்று அலசுவது வழக்கம் ஆயிற்றே... அதுவும் மரம் பற்றிய விபரம்.... விட்டு விடுவோமா...

                  இப்படித்தான் ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு அலுவலகமாம்.... நகரத்தை விட்டு பதினான்கு கி.மீ. தொலைவில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அமைந்திருந்ததாம். பிரிட்டிஷ் காலத்து பில்டிங். சுற்றிலும் எக்கச்சக்கச்சக்க வெற்று நிலம்...
                   ஒரு முறை அந்த ஆபிஸின் உயரதிகாரி "ஆஹா இத்தனை இடம் வெறுமனே இருக்கிறதே.. உபயோகமாக ஏதாவது பயிர் பண்ணலாமே" என்று ஒரு ஐடியாவை உதிர்க்க மூன்றே மாதங்களில் பூச்செடிகளால் நிரம்பியது அந்த இடம்...விதம் விதமான ரோஜாக்களும், சாமந்திகளும், மல்லிகையும் அந்த பிரதேசத்தை மிக ரம்யமாக்கின.
                    அடுத்து வந்தது வல்லடி... ஆபிஸிற்கு லீவு போட்டிருந்தாலும் ஊழியர்கள் மெனக்கெட்டுஆபிஸிற்கு வந்து ஆளாளுக்கு இத்தனை பூப்பறித்துக் கொண்டு  போவதை வழக்கமாக்கி கொண்டனர். வேறு வேலை எதுவும் இல்லாமல் ஆபிஸிற்கு வந்த சிலர் ஆபிஸ் வேலையை புறம்தள்ளி விட்டு பூப் பறித்து அதை அங்கேயே தொடுத்து, விற்று நாலு காசும் பார்த்தனர் !
                    பிறகு வந்த அதிகாரி, இந்த ஒழுங்கீனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக எல்லா செடிகளையும் களைந்து விட்டு வாழை, மா, பலா என்று மரம் நாடும் யோசனையை முன் வைத்து நடத்திக் காட்டினார்... எல்லா மரங்களும் பலன் கொடுக்கத் தொடங்கியபோது, அந்த காய்களை 'எனக்கு..உனக்கு' என்று ஒவ்வொருத்தரும் அடிபிடி சண்டையில் இறங்கி பிரித்துக் கொள்வதைப் பார்த்து 'ட்ரான்ஸ்பர்' கேட்டாராம். அந்த அதிகாரி...
ஒருமுறை ஒரு பலாப் பழத்திற்காக வெட்டு குத்தே நடந்ததாக ஒரு தகவல்....


                    ஆகையால்தான், அந்த சம்பவங்களுக்கு பிறகு இனிமேல் வெறும் நிழல் மட்டும் கொடுக்ககூடிய தூங்கு மூஞ்சி மரத்தை வளர்க்கவேண்டும் என்று தீர்மானித்து, ஒரு சுற்றறிக்கையை மற்ற அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி புண்ணியம் கட்டிக் கொண்டார்களாம்... 


                    எனவே, இனிமேல் எந்த அரசு அலுவலகத்திற்கு நீங்கள் செல்ல நேர்ந்தாலும் அங்கு கிளைபரப்பிக் கொண்டிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்து 'சிம்பாலிக்'காக வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்...
         
                                        *************************************


           
 
  


Thursday, February 24, 2011

வாலண்டைன்ஸ் தினம்

        

              வாலண்டைன்ஸ் தினம் கடந்து போன பின்புதான் ,"அடடா" என்று தோன்றியது....லேட்டா என்ட்ரி ஆவதுதானே காதலின் ஸ்பெஷலே...!
               எழுதாமல் எப்படி விடுவது ? சரி... இம்முறை 'கவிதையில்  கை வைப்போமே' என்று தோன்றியதன் விளைவாய் இதோ வருகிறது மூன்றே மூன்று  வரி - இரண்டு வார்த்தை கவிதை...

              விதி யாரை விட்டது...படியுங்கள்


                                    காதல் 

                      நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும் என நினைக்கும் ....

                                 *****************
  

Tuesday, February 15, 2011

அப்புடு.... இப்புடு....எப்புடு..?

         
            அப்புடு.... இப்புடு....எப்புடு..?                        
                                      (ரொம்ப தப்புடு)
(முன் குறிப்பு : முதலில் பின் குறிப்பு படிக்கவும்)

          என்.டி.ராமராவ்காரு     சி. எம். ஆக ஆந்திரத்தை 'ஓஹோ' என்று அரசாண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. வில்லாக சர்டிபிகேட்டுகளையும் , அம்பாக அப்ளிகேஷன்களையும் கருதிக்கொண்டு ,அடுத்த வேளை 'புவ்வாவு'க்கு   ஏதாவது வேலை  கிடைக்குமா என்று   நான் வேட்டையாடிகொண்டிருந்தேன். என்.டி.ராமராவ்காரு, என்னை உடனடியாக ஆந்திர  மாநிலத்திற்கு வருமாறும் ,எனக்கு ஒரு வேலைவாய்ப்பு தருவதில் பெருமைப்படுவதாகவும் கூறி (மன்றாடி) அழைக்காவிட்டாலும் நான் அங்கு போவதாக முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஹைதராபாத்தில் எனது ரூ.199.95 பைசா பாட்டா செருப்பு கால்களைப் பதித்தேன்.

           எனது சித்தி வீடு  ஹைதராபாத்தில் பாலா நகரில் இருந்தது. 'எந்தடு பஸ்சுடு பாலா நகருடு போகுடு' என்று எல்லா தமிழ் வார்த்தையோடும் ஒரு 'டு'வை சேர்த்தடித்து எனக்கும் எனது ஒன்றரையணா ஜோல்னா பைக்கும்  அதிக சேதாரம் ஏற்படா வண்ணம் பேசி, சித்தி வீடடைந்தேன். சித்திக்கும் என் கசின்களுக்கும் , நான் யார் துணையும் இன்றி தனியாக அவர்கள் வீடடைந்ததில் ஆச்சர்யம். கசங்கிப் போயிருந்த காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு என் பிரதாபத்தை பீட்டர் விட்டேன். 
            தெலுங்கு ஒரு 'டப்பா லேங்குவேஜ்' என்கிற என் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் சம்பவம் அடுத்த இரண்டு நாட்களில் நடக்கப் போவது தெரியாமல் அன்று முழுவதும் தெனாவெட்டாய்  திரிந்தேன்.
              சித்தப்பு HAL -இல் எக்சிக்யூடிவ். கசின்ஸ்   பள்ளிப்  படிப்பில் இருந்தனர். சித்தியோ 'லேடிஸ் க்ளப்' பின் காரியதரிசினி. எல்லாரும் ரொம்ப பிசி. நான் மட்டும் தான் அந்த வீட்டில் வெட்டி ஆபீசர். 
               சம்பவ தினத்தன்று , சித்தப்பு ஆபிஸ்க்கு கிளம்பிட்டார். யுனிபார்மை மாட்டிக்  கொண்டு கசின்சும் ஸ்கூலுக்குப் போயாச்சு. அவர்கள் போகும் வழியில் இருக்கும் அரிசிக் கடையில் வீட்டிற்கு அரிசிப் போட சொல்லிவிடும்படி சித்தி அவர்களிடம் காலையிலேயே சொல்லியிருந்தார்கள்.  'buf  கொண்டைக்கு ஊசி குத்தியபடி  சித்தி என்னிடம் ,"நேர போய் லெப்ட்ல திரும்பினா மளிகைக் கடை.. ..அங்க இந்த லிஸ்ட்ட குடுததுடு. அங்கிருந்து எதிர் சாரிக்கு வந்து பால் பூத்தை ஒட்டின சந்துல நேர போயி ரைட் எடுத்தா அரிசிக் கடை ஒண்ணு இருக்கும். நம்ப வீட்டு நம்பரை எழுதி தர்றேன்... அவங்ககிட்ட காமிச்சு 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா'ன்னு கேளு" என்றதும் ,'எவ்வளவோ செஞ்சுட்டோம் ...இதை செய்ய மாட்டோமா' என்று வீட்டு நம்பரை ஒரு தாளில் எழுதி எடுத்துக் கொண்டு  கிளம்பினேன்.
                 சாலையில் இறங்கினேன்.  'தொரகுனா இடுவண்டி சேவா' பாடல் எவர் வீட்டில் இருந்தோ கசிந்து கொண்டிருந்தது. அதை சட்டை செய்யாமல் மனது முழுக்க 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' என்று உருப்போட்டபடி மளிகைக் கடையை அடைந்து லிஸ்ட்டை விசிறியடித்து  விட்டு, அரிசிக் கடையை நோக்கிய என் இரண்டாம் கட்ட லட்சிய பயணத்தைத்  தொடர்ந்தேன். 
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                   என்று சிவாஜி மாதிரி, கமல் மாதிரி , ரஜினி மாதிரி  விதவிதமான மாடுலேஷனில் ஜெபித்துகொண்டே போய் என் இலக்கை அடைந்தேன். கடையில் செம கூட்டம். மனதுக்குள் 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' ரீல் ஓடியது.
சின்ன வயசில் அம்மா சொன்ன 'அத்திரிமாக்கு கொழக்கட்டை' கதை ஞாபகம் வந்தது.
                   கூட்டம் குறைந்ததும் அடிமேல் அடி வைத்து முன்னேறினேன்... 
                   காதில் பெரிய பெரிய கடுக்கன்களுடன், வெற்றிலையை குதப்பிக் கொண்டு அமர்ந்திருந்த முதலாளியை நெருங்கினேன்... அவருடைய சாதா பார்வையே முறைப்பது போல் இருந்தது.. கையில் தயாராக வைத்திருந்த தாளை உயர்த்திக் காண்பித்து தயங்கி, தயங்கி "வா ...ளு...   இன் ...டி...க்கு   பி. பீ... யம்    ப....ம்......பா .....லா   ...."என்று நாக்கு தடுக்கி, கண்கள் பிதுங்கி, தொண்டைக்குள் என் இதயம் சிக்கி சீரழிந்து, சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க இயலாமல் நான் தடுமாறி தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்த 'கடுக்கன்',தெலுங்கில் ஏதோ சொல்ல, நான், அம்பேல்  ஆனேன். ஆந்திரா முழுவதும் ராமராவ் 'கிருஷ்ண பரமாத்மா' வாக நிறைந்து  இருப்பார் போல...என் பக்கத்தில் நின்று கொண்டு என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பேற்பட்ட ஒரு 'கிருஷ்ண பரமாத்மா',"ரைஸ்  பேக் ' அல்ரெடி சென்ட் டு யுவர் ஹௌஸ்" ன்னு முதலாளி சொல்றாருப்பா." என்றார்.
                என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு குதித்தது  !!
                                
                                ***************
                         
                அடுத்த காரியமாக, பாலாஜி பப்ளிகேஷன்ஸின் '30 நாட்களில் தெலுங்கு' எங்கே கிடைக்கும் என்று தேடத் தொடங்கினேன்..

                                 **************
(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன்  குறையும்போது ரஜினி படத்தைப்          போட்டு சர்குலேஷனை  எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)

Monday, February 7, 2011

சமய சஞ்சீவி                               சமய சஞ்சீவி(!)

                         தே மாதிரி ஒரு தை மாதம்தான் ....திருச்சிக்கருகில் ஒரு கோவில் கும்பாபிஷேகம்....என் நண்பனும் தூரத்து உறவினனுமான தங்கராஜிற்கு அந்த கும்பாபிஷேகத்திற்கு  'சவுண்ட் சிஸ்டம்' செய்ய காண்ட்ராக்ட் கிடைத்தது.. அவனுக்கு ஏற்கெனவே நாலைந்து அல்லக்கை அசிஸ்டன்ட்கள் இருந்தாலும் ராஜகோபுர ஸ்பாட்டிற்கு ஒரு ஆள் தேவையாய் இருந்தது.  அவன் போதாத காலம், அவனை என்னிடம் அழைத்து வந்து,"பரமசிவம்... துறு துறுன்னு வேலை செய்யற ஆள் எவனாச்சும் இருந்தா சொல்லேன்" என்று என்னிடம் சொல்ல வைத்தது.
                   நாமதான் அடுத்தவங்களுக்கு உதவறத்துக்குன்னே இந்த ஜன்மம் எடுத்து தொலைச்சிருக்கமே .... உடனே ," 'கொசு' மணின்னு எங்க ஆபிஸ்ல ஒரு ஆள் இருக்கான்.லீவு போட்டு வேண்ணா வரச் சொல்றேன்.ரேட்டு பேசிக்கோ " என்றேன்.

                    கும்பாபிஷேக தினம்.  கூட்டம் 'ஜே..ஜே' என்று அலை மோதுகிறது. முதலமைச்சரின் வருகையினால் மாவட்டம் முழுவதிற்கும்  சிறப்பு விடுப்பு வேறு. அக்கம்பக்கம் ஊர்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மற்ற  கோபுரங்களுக்கு அல்லக்கைகளை அனுப்பிவிட்டு , 'கொசு' மணி சகிதம் காலை ஐந்து மணிக்கெல்லாம் தங்கராஜ் ராஜகோபுரம் ஏறிவிட்டான்.
                     ராஜகோபுரத்துக்கு மூணு ஐயர்மார்கள்.பெரிசு பெரிசாய் நாமம் போட்டுக்கொண்டு ரெண்டு 'மைக்' கேட்டனராம். தங்கராஜ் 'மைக்'கை செட் பண்ண'கொசு' மணி கேபிள் இழுத்து ஆம்ப்ளிபயரில் கனெக்ஷன் கொடுத்திருக்கிறான். 'மைக்'கைக் கண்டதும் ஐயர்மார்கள், அவர்கள் கோஷத்தை ஆரம்பித்து விட்டனர். தங்கராஜ் மற்ற கோபுர அல்லக்கைகளுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை சரி பார்த்துகொண்டான்.
                     மணி ஆறாகிறது....ஏழாகிறது.... எட்டாகிறது.... வெயில் சுறு சுறுவென்று ஏற ஆரம்பித்தது .பத்தரைக்குத்தான் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. நேர்முக வர்ணனைக்கு ஒரு 'மைக்'கை ரெடி பண்ணும்போது தங்கராஜிற்கு தலைவலி ஆரம்பித்திருக்கிறது. பசியும் சேர்ந்து கொள்ளவே கொஞ்சம் தள்ளாட தொடங்கினான். போதாகுறைக்கு  'ஜிவ்'வென்று  வேத கோஷத்தை கணீரென்று   ஐயர்கள் ஓதத் துவங்கியதும் 'மல்டிபிள் டிஸார்டர்' அவனுக்கு ஆரம்பித்தது. 
                   "கொசு மணி  ..... பயங்கரமா தலை  வலிக்குதுப்பா.." என்று கூறியிருக்கிறான்.
                   "அண்ணே.. இங்கன ப்ளாஸ்க் ரொப்பி காபி இருக்குது...எடுத்தாரட்டா ?" என்று உதவும் கரங்களை நீட்டியிருக்கிறான், 'கொசு'மணி.
                   "காபியோட ஒரு சாரிடான் போட்டேன்னா தலைவலி ஓடிரும் 'கொசு' "
                   "இப்படி 200 அடிக்கு மேல நின்டுக்கிட்டு சாரிடான் கேட்டா எங்கண்ணே போறது?
                   "எதுனாச்சும் பண்ணு 'கொசு'மணி... தலைவலி மண்டயப் பொளக்குது"
                   வெயிலுக்குப்  போட்டிருந்த குல்லாயை எடுத்து தலையை சொறிந்தான், 'கொசு'மணி. தங்கராஜு படும் பாட்டை காண  சகிக்க முடியாமல் என்ன பண்ணலாம் என்ற யோசனையுடன் 'கொசு'மணி, கோபுர விளிம்பு வரை சென்று தன் தலையை ஒரு கையாலும், முகவாய்க்கட்டையை மறு கையாலும் சொறிந்தபடி யோசித்தான். கீழே இறங்கி போய் மாத்திரை வாங்கி மீண்டு வர முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. கீழே பார்த்தால் புள்ளி,புள்ளியாய் ஜனங்கள்...
                   "ஆஹா...'என்று துள்ளிக்குதிக்காத குறையாக "இப்ப ரெடி பண்ணிடறேன் அண்ணே" என்று உற்சாகமாக அலைந்த அவன் கண்கள் எதையோ தேடின.
                   எல்லாம் வினாடி நேரத்தில் ரெடி ஆகின. தலையில் தான் போட்டிருந்த தொப்பிக்குள் ' ஒரு சாரிடான் வாங்கி அனுப்பவும், ப்ளீஸ்' என்று எழுதி ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் அந்த தொப்பிக்குள் இட்டு ,சாரம் காட்டி மிச்சமிருந்த கப்பாணி  கயிறில் தொப்பியைக் கட்டி மெதுவாக கீழே இறக்கினான்.
                    இடையிடையே "அண்ணே... கொஞ்சம் பொறுத்துக்குங்க... சாரிடான் இதோ வந்திடும்" என்று துடித்துக்  கொண்டிருக்கும் தங்கராஜிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.
                     அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் புண்ணியவான் எவரோ செய்த உதவியால் சாரிடான் 'கொசு'மணியின் கைக்கு வந்து சேர்ந்தது. 'பிளாஸ்கை' சரித்து ஒரு பெரிய சொம்பில் காபி எடுத்துக் கொண்டு , தலையைப் பிடித்தபடி அமர்ந்திருக்கும் தங்கராஜிடம் போய் ,"அண்ணே, காபியும் சாரிடானும் ரெடி...இந்தாங்க" என்றான்.
                    சஞ்சீவி மலையை தூக்கி வந்த அனுமானை ராமன் கட்டிக்கொண்டது போல் ஆலிங்கனம் செய்ய முன் வந்தபடி, தங்கராஜ் "கொசு மணி ....நீ பெரிய ஆளுய்யா " என்று கூற ,
                    " அண்ணே... ஒரு நிமிஷம்... ஒரு பத்து ரூபா கொடுங்க.."என்றான், 'கொசு'மணி.
                    'கொசு'மணி ஏதோ விளையாடுவதாக எண்ணிய தங்கராஜ், "தர்றேம்ப்பா... முதல்ல மாத்திரையை கொடு"எனவும்,
                     "அண்ணே... காசைக் கொடுங்க.. மாத்திரையும் காபியும் உங்க கைக்கு வரும்" என்று கறாராகக் கூறியிருக்கிறான்.
                     "என்னப்பா ... அநியாயமா இருக்கு.. சாரிடான் ஒரு ரூபாய்தானே"
                     "ஒரு ரூபாய்தான்னே... ஆனா ,அதை இவ்வளவு உயரத்திற்கு, நீங்க கேட்ட பத்து நிமிஷத்துக்குள்ளே, என் மூளையை கசக்கி ,கொண்டு வந்தேன் இல்லே...அதுக்கான பீஸ்தான் எச்சாவா நான் கேக்குறது... பத்து ரூவாவ கொடுத்திட்டு சாரிடான் போட்டு காபி குடிங்க அண்ணே .... இந்த டயத்தில காசை பாக்காதிங்க" என்றான்.
                      வேறு வழி தெரியாததால் தங்கராஜும் அப்படியே செய்தான்.

                     கும்பாபிஷேகத்தை  எல்லாம் நல்லபடியாக முடித்து  , இத்தனை விஷயத்தையும் ஒரே மூச்சில் என்னிடம் சொன்ன தங்கராஜ் அந்த சம்பவத்திற்குப் பிறகு இது நாள் வரை என்னிடம் வேறு எந்த உதவியும் கேட்கவே இல்லை...

             ***********


        Sunday, January 16, 2011

கொசுத் தொல்லை

                 கடி - 1
                  மீப கால சினிமா ஒன்றில் "இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்கிற வசனத்தைக் கேட்டிருப்பீர்கள். ரிஷி மூலம், நதி மூலம் என்பது போல் இந்த வசன மூலம் எது என்று பார்த்தால் அது எங்கள் பாக்டரிதான். இன்னும் சொல்லப் போனால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள்  பாக்டரியின் , எங்கள் ப்ளாண்டில் சாட்சாத் எங்கள் போர்மன்  திருவாயிலிருந்து உதிர்ந்த வாக்கியம்தான் ,"இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்பது.... இது எப்படியோ ,யார் மூலமோ அந்த காமெடி ட்ரேக் எழுதுபவர் காதிற்கு எட்டி அதை அவர்  'கபால்' என்று பிடித்துப் போட்டு காசு பார்த்து விட்டார்.
               என்ன , இந்த வசனம் என் அலுவலகத்தின் கைங்கர்யம்தான்  என்பதை என் நெருங்கிய நண்பர்கள், உறவின் முறையினர் ஒத்துக் கொண்டுவிட்டனர்... உங்களுக்கும் தெரிந்திருக்கட்டுமே என்பதால்தான் எழுதுகிறேன்...
                சரி...கதைக்குள் வருவோம்...இந்த கதையின் நாயகன் சுப்பிரமணியன்.....  I .T .I படித்து ,எங்கள் பாக்டரியில் சீனியர் டெக்னீஷியனாக 'வேலை பார்ப்பதாக' சொல்லிக் கொள்பவன். ஆள் நெடுநெடு என்று உயரமாய், கச்சலாய் இருப்பான்...கடினமான யூனிபார்மில் கொஞ்சம் பூசினாற்போலிருப்பான்...கண்கள் சதா அலை பாய்ந்து கொண்டே இருக்கும்... கமல்ஹாசன் மீசை  வைத்துக் கொள்ளும்போதெல்லாம் இவனும் மீசை  வைத்துக்  கொள்வான்...அவர் எடுத்தால் இவனும் எடுத்து விடுவான்...மற்றபடி, கொக்கு பறப்பதற்கு முன் ஒரு நடை நடக்குமே அது மாதிரித்தான் சுப்பிரமணியன், சாதாரணமாகவே  நடப்பான்.  நகரும்  பஸ்ஸை பிடிக்கும் அவசரம் அந்த நடையில் தெரியும்...
                  முன்பெல்லாம் அவனை 'கேயெஸ்'..'கேயெஸ்' என்று இனிஷியல் சொல்லித்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்...மூன்று வருஷத்திற்கு முன்னால் நடந்த யுனியன் எலெக்ஷனில் குதித்தபோது 'உங்கள் வைர வாக்குகளை தோழர் கொ.சு.மணிக்கு அளித்து இமாலய வெற்றி காண வைப்பீர்' என்ற வாசகங்களுடன்  ஜம்போ ப்ளேக்ஸ்யில் கம்பீர நடை பயின்று கொண்டிருந்தார் நம்ப தொரை..."டேய் நம்ப 'கேயெஸ்'டா" என்று அவனவனும் அடையாளம் கண்டுகொண்டு கூத்தாடினான்.எலெக்ஷன்ல  என்னமோ ஊத்திகிச்சுன்னாலும் அன்று முதல் எங்கள் பிளான்ட் தோழர் 'கேயெஸ்'ஸின் திருநாமம் 'கொசு மணி' என்று புனருத்தாரணம் ஆனது.
                நான் என்று மட்டுமில்லை ... பெரும்பாலோனோரும்  அவனுக்கு 'கேயெஸ்' என்ற சுருக்கப் பெயரை விட 'கொசு மணி' என்ற பெயரே மிகவும் பொருத்தமானது என்று கருதியதால் அந்த எலெக்ஷன் வந்தது ஒரு விதத்தில் நல்லதுதான் என்று உணர்ந்தோம் !
                   ஆனால் , தேர்தல் தோல்வியில் அவன் துவண்டு விடவில்லை...மாறாக கொசு மாதிரி 'சர்ட்'...சர்ட்' டென்று பறந்து கொண்டே இருந்தான்..உண்மையில் கொசு ஒரு புத்திசாலி ஜீவன். நாம் எளிதில் 'ரீச்' பண்ணமுடியாத நம் உடல் பிரதேசம் பார்த்து உட்கார்ந்து கடிக்கும். நாம் நின்று கொண்டிருந்தால் காலைப் பதம் பார்க்கும்... படுத்துக் கொண்டிருந்தால் முதுகில் தன் வாய்வரிசையை காண்பிக்கும் ... நாம் வளைந்து நெளிந்து அதை zero - in பண்ணி நெருங்குகையில் உறிஞ்ச வேண்டியதை உறிஞ்சிவிட்டு எஸ்கேப்..... வெறுமனே நம்மை நாமே அடித்துக் கொண்டு நம் கையை நாமே  பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்..
                  அதே போல்தான் நம்ப கொசு மணியும்... லேசில் சிக்காமல் பறப்பதில் கில்லாடி.. அப்படித்தான்  ஒரு நாள்............

                நான்  அப்போதுதான், நைட் ஷிப்டிற்கு வந்து என் சீட்டில் அமர்ந்தேன். உடனே போர்மேனிடமிருந்து போன்.
                "சார்,பரமசிவம் பேசறேன்" என்றேன்.
                "பரமசிவம் ,  அந்த கொசு மணி என்னய்யா நாலு மணிக்கெல்லாம் கிளம்பறான்...டூட்டி அஞ்சரை வரை உண்டுன்னு அவனுக்கு தெரியுமா..தெரியாதா?"
                "தெரியலியே சார்" -வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறாய் என்று என் உள்மனம் ஊளையிட்டது. 
                 "அவன் கிளம்பி வாசல்ல நிக்கிறப்போ கையும் களவுமா புடிச்சிப்பிட்டேன். எங்க கிளம்பியாச்சு?ன்னு கேக்குறேன்.. தெனாவெட்டா "ஊட்டுக்கு'ன்றான்....நான்தான், 'ரீவைண்டிங் போன ரெண்டு மோட்டார் சரியாகி வந்திருச்சு... ஓட்டிப் பாத்துட்டு போ'ன்னு  சொல்லி ப்ளான்ட்டுக்கு அனுப்பி இருக்கேன்.அவன லேசில விடாதையா...இன்னிக்கு அவன் ஓட்டிப் பாத்திட்டுத்தான் போகணும்..." என்றார்.
                 ஆஹா, கெரகம் பிடிச்சிடிச்சு....இன்னிய ஷிப்டு உருப்பட்டாமாதிரிதான்..
                 "சரி,சார்" என்றேன் அவசர அவசரமாய்..
          ***************
                 "என்ன சார் , அந்த எருமைத்தலையன் எதுவும் சொன்னானா?" -எருமைத்தலையர் ,என்று செல்லமாக மணியால் விளிக்கப்பட்டவர் எங்கள் போர்மன்.
                 "ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஓட்டிப் பாத்திட்டு அப்புறமா கிளம்புவியாம்" என்றேன்.
                "அந்தாள் என்னா சொன்னான்?" இது மணி. 'கொசு' மணி.
                 "ஒன்னை ஓட்டிப் பாத்திட்டு போகச்சொன்னார்" என்றேன்.
                 "இப்பிடியேத்தான் என் கையிலயும் அந்தாள் சொன்னான்...இனிமே நான் பாத்துக்கிறேன்" என்றபடி ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஒரு மோசமான 'லுக்' விட்டான், கொசு மணி. என்னைப் பார்த்து,"ஒரு 'தம்'மடிச்சிட்டு, அப்டியே ஒரு டீ குடிச்சிட்டு  வந்திடறேன், சார் " என்று சொல்லி நகர்ந்தான்.
                  நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. ஆளைக் காணவில்லை. நான் எனது மற்ற வேலைகளில் கவனம் செலுத்த, இரவு ஏழு மணி போல் வந்து சேர்ந்தான்.
                  " என்ன மணி, மோட்டாரப் பாக்கலியா?" என்றேன்.
                  "அதுக்குத்தான் டூல்செல்லாம்  எடுத்திட்டு வந்தேன் சார்" என்றபடி ஒவ்வொரு மோட்டாரையும் தகுந்த இடைவெளி கொடுத்து நகர்த்தினான். அவை பழைய  மோட்டார்கள் . ரீவைண்ட் செய்து பெயிண்ட் அடித்து அனுப்பியிருந்தனர்.    ஒரு பார்வைக்கு 'சௌகார்'ஜானகிக்கு 'பேசியல்'  செய்து லிப்ஸ்டிக் அடித்தது போல் சமர்த்தாக இருந்தன அவை.
                   மணி,மோட்டாரின் அச்சைப் பிடித்து சுற்றினான். பிறகு.. சப்ளை  கொடுத்து  
ஓட விட்டான். ரெண்டு மோட்டாரும் பதிவிசாக ,புக்ககம் வந்த புது நாட்டுப்பெண்ணைப் போல் சப்தமில்லாமல் இயங்கின.
                  அரை மணிக்கொருதரம் அவறிற்கு ஜுரம் அடிக்கிறதா என்கிற ரீதியில் தொட்டு,தொட்டுப் பார்த்தான்.'பேரிங்' சவுண்ட் இல்லாமல் ஓடுகிறதா என்று  நீளமான திருப்புளியை மோட்டாரில் வைத்து மறுபக்கம் காதை வைத்து செக் பண்ணினான். ஓடிக்கொண்டிருந்த இரண்டு மோட்டாரையும் நவகிரகம் சுற்றுவது போல சுற்றி சுற்றி வந்தான், மணி.
                  ஒன்பது  மணி போல வேலை முடிந்து எல்லாவற்றையும் 'பேக்கப்' செய்து விட்டு என்னிடம் வந்தான்."சார் ரெண்டு மோட்டாரும் நல்லாத்தான் ஓடுது....டெஸ்ட் பண்ணிட்டேன்... ஒரு 'தம்' மடிச்சிட்டு வர்றேன்" என்றான் கொசு மணி.
                  "ஏன், மணி கிளம்பலியா வீட்டுக்கு?" என்றேன் நான்.
                  "அதெப்படி சார் ... ஓட்டிப் பாத்திட்டு போக சொன்னத்துக்கப்புறம்.....பாக்காம போனா என்னா மருவாதி சார்?" என்றான்.
                  "அதுதான் ஓட்டி பாத்திடியே மணி" என்றேன்.
                  "எங்கே சார் ஓட்டிப் பாத்து முடிச்சேன்... இப்பதான்  ஓட்டிப் பாத்திக்கிட்டு இருக்கேன் சார்....ஓட்டின்னா 'ஓவர் டைம்'" என்று விளக்கம் அளித்தான்.
                            **************
                    மறு நாள் போர்மன் ரூமில் ஒரே சத்தம்."எந்த முட்டாள் உன்னை 'ஓவர் டைம்' பாக்கச்சொன்னான்?" என்று மணியிடம் போர்மன் 'லபோ திபோ' என்று காட்டு கத்தல் போட்டார்.
                    "நீங்கதானே சார் நேத்து என்னை ஓட்டிப் பாத்துட்டு போக சொன்னீங்க " என்று படு பவ்யமாக கூறியிருக்கிறான்.
                     என்னிடம் விசாரித்தார், போர்மன். நானும் "நீங்கதானே அவனை ஓட்டிப் பாத்திட்டுப் போகச் சொன்னீங்க.." என்றேன் நமட்டு சிரிப்புடன்.
                      " யோவ்... நான் மோட்டாரத்தான் ஓட்டிபாக்க சொன்னேன்..இவனை ஓவர்டைம் பாக்க சொல்லலே.."
                      "எதையும் கிளியரா புரியறா மாதிரி , குளப்பமில்லாம சொல்ல கத்துக்குங்க"என்று சொல்லிவிட்டு "ம்ம் ம்ம் ...ஓ.டி ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போடுங்க" என்று வந்த காரியத்தை முடித்துக் கொண்டு அவன் கிளம்பிப் போனதை ஊர்ஜிதப் படுத்தி விட்டு  எங்கள் போர்மேன் உதிர்த்த வாக்கியம்தான் ,"யோவ்...இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலியே..." என்பது...


           (கடிகள் தொடரும் )