Pages

நேசம் நம் சுவாசம் !

Saturday, December 11, 2010

'இரட்டை' அர்த்தம்

            றுபத்து நான்கு வயதில் 'பென்ஷன் வாங்கினோமா ...வேளாவேளைக்கு சாப்பிட்டோமா .... கச்சேரி கேட்டோமா ....உன்  போல் தலை நரைத்த தாத்தாக்களுடன் பேசி பொழுதை போக்கினோமா' என்றில்லாமல் கதை கதையாய் எழுதி என்னத்தை சாதிக்கப்போகிறாய் ? என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது...
               சாதிக்கப் போவது எதுவும்  இல்லைதான்...ஆனாலும் , சொல்லியே ஆக வேண்டிய விஷயங்கள் நிறைய்ய்ய்ய இருக்கின்றனவே. பெண்டாட்டி என்று ஒருத்தி இருந்தவரை அவளிடம் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்தேன். மகராஜி, போன மார்ச் மாதம் மூச்சை நிறுத்திக்கொண்ட பிறகு யாரிடம் சொல்வேன் ? பேரன், பேத்தி எல்லோரும்  அவரவர் பாடங்களிலும் , இன்னபிற லோகாயத பயிற்சிகளிலும் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு என் பக்கத்தில் உட்காரவே நேரம் போதவில்லை. அதனால்தான் என் புலம்பல்களை கதைகளாக எழுதுகிறேன். அவற்றை வாசித்து , நீங்கள் கூறும் கருத்துரைகளே இந்த பட்ட மரத்திற்கு ஊற்றப்படும் உயிர் நீர்.
இதற்கும்  மேல் 'என்ன சாதிக்கப் போகிறாய் ?' என்று கேட்க மாட்டீர்கள்தானே....
               என்னமோ தெரியவில்லை சார் / மேடம் , இந்த 'இரட்டை ' சமாச்சாரங்கள் என்னை எப்போதும் உலுக்கிப் பார்த்திருக்கின்றன...சின்ன வயதில் 'சயாமீஸ் இரட்டையர்களை' பற்றிப் படித்து, அழுதிருக்கிறேன்... இறைவனின் படைப்பில் ஏன் இப்படி ஓர் அவலம் என்று ...
                அதே மாதிரி  இரட்டை வாழைப் பழத்தை யாரும் சாப்பிட முன் வரமாட்டார்கள். பிறக்கும் குழந்தை இரட்டையாய்ப் பிறக்கும் என்று பயப்படுவார்கள்...ஆனால் எனக்கோ இரட்டைக் குழந்தை வேண்டுமென்று இரட்டை வாழைப் பழத்தை தேடி வாங்கி சாப்பிடுவேன்.... அதிலும், கடவுள்  என்னிடம் பாராமுகமாய் நடந்து கொண்டார்  ...நினைத்தது நடக்காமல் போனது...
                அவ்வளவு ஏன் ? என் கல்யாணத்தின் போதும், க்ரஹப்ரவேசத்தின்போதும் சீராக வந்த ஜோடி பருப்பு தேங்காய் கூடுகளை இன்னமும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

                அமெரிக்காவில் அந்த இரட்டை கோபுரங்கள் தீவிரவாத விமானங்களால் தகர்க்கப்பட்ட நாளன்றும், அடுத்த நாளைக்கும் நான் கொலைப் பட்டினி கிடந்தேன், ஸ்வாமி!! மனசு இற்றுப் போனது !!
                தெருவில் பாவாடை சட்டை அணிந்து குஞ்சலம் , குஞ்சலமாக குழந்தைகள் நடக்கும்போது அவர்களின் ரெட்டை ஜடை அத்தனை அழகாய் என்னைக் கொல்லும். இதை எல்லாம் விடுங்கள்.... கோவிலுக்குப்  போனால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ? நேராகப் போய் மூலவரை தரிசிப்பதில்தானே உங்களின் மொத்த கவனமும் இருக்கும்... எனக்கு அப்படி இல்லை...மூலவர் சந்நிதிக்கு முன்னால் நிற்கும் அந்த த்வாரபாலகர்களுக்கு என் வந்தனத்தை செலுத்துவதிலேயே என் ஆர்வம் ததும்பும். சந்நிதானத்தில் இருக்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றால், அந்த கடவுளையே காத்து நிற்கும் இந்த ஜோடி த்வாரபாலகர்கள், என்னைக் காப்பாற்றியவர்கள் ஆயிற்றே !!! ஆகையால் , அவர்களுக்கு எனது ஆன்மார்த்த வந்தனத்தை சமர்ப்பித்து விட்டு நிறைய சமயங்களில் மூலவரை தரிசிக்காமலே வந்திருக்கிறேன்.
                     என் ஒரே பையன் ரமேஷுக்கும், மகள்கள் சாருவுக்கும் , கோமளிக்கும் சொத்துபத்தைஎல்லாம் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டேன்.எல்லோர்க்கும் (மாப்பிள்ளைகள்,மாட்டுப்பெண் உட்பட) சந்தோஷம். சுப்புலஷ்மி கடைசிவரை போட்டுக் கொண்டிருந்த ஒரே ஒரு ரெட்டை வட சங்கிலியை மட்டும் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் சேர்த்து எரிக்க சொல்லி ரமேஷிடம் சொல்லியிருக்கிறேன்... என்ன செய்யப் போகிறானோ.....
                    சரி ..சரி... லூசு போல இருக்கிறது என்று முடிவு கட்டி, வேறு கதையை தேடி போய்விடாதீர்கள்...எல்லா கார்யங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்? என்னுடைய  இந்த   இரட்டைப் பித்திற்க்கான காரணம் என்ன தெரியுமா?
                     என் கல்யாணத்திற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம். இப்பொழுது நினைத்தாலும் மெல்லிசாய் ஒரு நடுக்கம் தோன்றுகிறது. எனக்கும் சுப்புலஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒரு பிப்ரவரி மாதம்...தேதியும் நினைவிருக்கிறது...சேலத்திற்கு ஒரு காரியமாகப் போய் விட்டு திருச்சிக்கு திரும்புகிறேன். சேலம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போதே இரவு மணி 11 ஆகிவிட்டது. சுலபத்தில் பஸ் கிடைக்கவில்லை.ரொம்ப நேரம் காத்திருந்துதான் பெங்களூரிலிருந்து  வந்த ஒரு பஸ்ஸைப் பிடிக்க முடிந்தது. டிரைவர் சீட்டிற்கு பின்னால் நான் அமர இடம் கிடைத்தது.
                  சேலத்தை விட்டு  கிளம்புகையில் நள்ளிரவு தாண்டி விட்டது. நாமக்கல் வந்ததும் , அந்த மூன்று பேர் அமரும் சீட்டில் நான் மட்டும். மற்றவர்கள் இறங்கி விட்டனர். நாமக்கல்லில் ஒரு குடும்பம் ஏறியது. இளம் வயது கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகள்.அவர்களுக்கு சீட்டு ஏற்பாடு செய்வதற்காக நடத்துனர் என்னை எழுந்திருக்க சொன்னதும்  எனக்கு கோபம் வந்தது.
                   "நான் சேலத்திலிர்ந்து வர்றேன்...இப்ப ஏறினவங்களுக்காக நான் இடம் மாறணுமா...முடியாது.." என்று சொல்ல வந்த நான் என் பாழாய்ப் போன இரட்டை செண்டிமெண்ட் தாக்கத்தால் உடனடியாக எழுந்து இடம் கொடுத்தேன். காரணம் , மொட்டு,மொட்டென்று பார்த்துக்கொண்டிருந்த  அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்கள் !!
                    "அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க" என்று அப்பா சொன்னதும் இரண்டில் ஒரு குழந்தை கை கூப்பியது... மற்றது எனக்கு கை கொடுத்தது...மஹா ம்ருதுவான பிஞ்சு ஸ்பரிசம்...
                    எனக்கு முன் பக்க ஏறு வழியின் ஜன்னலை ஒட்டின சீட் கிடைத்தது.இரவுப் பயணங்களில் பெரும்பாலும் நான் உறங்குவதில்லை. போதும் போதாததற்கு, அப்பாவிற்கும் ,அம்மாவிற்கும் நடுவில் படுத்துறங்கிக்  கொண்டிருந்த அந்த தளிர்களை பார்த்தபடியே என் பயணம் தொடர்ந்தது.
                     முசிறி வந்ததும் பஸ் நின்றது . டீ குடிக்க ஓட்டுனரும் , நடத்துனரும் இறங்கினர். தொடர்ந்து , பஸ்சிலிருந்த பெரும்பாலோர் இறங்கவே நானும் இறங்கி நின்றேன். சத்தமாக எஸ்.பி.பியின் குரல் , பிராந்தியத்தை கலக்கியது.அந்த குழந்தைகளை தோளுக்கு ஒன்றாய்  தூக்கிக் கொண்டு அந்த அப்பாவும் இறங்கி, தூங்கி வழிந்து கொண்டிருந்த , குழந்தைகளின் டிராயர் இறக்கி 'உச்சா'போக வைத்தார். இரண்டும் நடுங்கிக் கொண்டே போயின.இடுப்பை வளைத்து டிராயரை மேலே இழுத்துக் கொண்டன.
                    நான் அந்த குழந்தைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டும் நல்ல ரோஸ் நிறம். அழகென்றால் அப்படி ஓர் அழகு! செராக்ஸ் காப்பி மாதிரி இருந்தன . ஒரு குழந்தையை நான் வாங்கிக் கொண்டேன். பேர் கேட்டேன் ... ஸ்வெட்டரும்  தொப்பியும் அணிந்திருந்த அந்த குட்டி ,''நான் மகேஷ்... அவன் ரமேஷ் ..." என்றது.
                   அதற்குள் ரமேஷ் என்ற அந்த குழந்தை அப்பாவிடம் 'கடையில் விற்கும் பிஸ்கட் வேணும்' என்று கேட்க,'இங்கெல்லாம் நல்ல பிஸ்கெட்டா இருக்காது... திருச்சி போனதும் வாங்கித் தருவதாக' சொன்னார். அழுது   அடம் பிடிப்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.. மற்றும் ஆச்சர்யம்... "ஓக்கே..டாடி" என்ற குழந்தையை நான் வாங்கி உச்சி முகரணும் போலிருந்தது.
                    பஸ் முசிறியை விட்டு கிளம்பியது. பஸ்ஸில் டிரைவரையும் என்னையும் தவிர ,அனைவரும் சாமியாடிக் கொண்டிருந்தனர். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. டிரைவர் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்.  குறுகலான அந்த சாலையின் இடது புறம் நன்கு ஒதுக்கி ஓட்டியவர் வலது பக்கம் வந்த ஒரு வளைவை சமாளிக்கும் பொருட்டு வண்டியை ஒரேடியாக வலதுப் பக்கம் திருப்ப, எதிரே பார்க்காமல் எதிரே வந்த ஒரு லாரியுடன் நாங்கள்  பயணித்திருந்த  பஸ், 'டமால்' என்று மோதியது.
                      இத்தனை நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு 'சர்ட்டென்று' தலையை சுற்றியது. எங்கள் பஸ்சிற்குள் 'ஓ'வென்று அலறல்.முன் பக்கத்து கண்ணாடி நொறுங்கி என் நெற்றியிலும் முகத்திலும் முள் முள்ளாக கண்ணாடி சிதறல்கள்.. அலறி அடித்துக் கொண்டு கீழிறங்கினேன். படபடப்பில் இருந்து , சுதாரித்துக் கொள்ள எனக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.பின் பக்க வாயில் வழியாக சிலர் கத்தியபடி இறங்கினர். எல்லோருமாக நிதானபடுத்திக்கொண்டு  நிலைமையை ஆராய்ந்தோம். பஸ்சும் லாரியும் 'head on collission  ... லாரி டிரைவரின் உடம்பு எங்கள் பஸ்சிற்குள் செருகிக் கிடந்தது. எங்கள் பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே  காலி. பஸ்சிற்குள் ஏறினேன்... மனம் பதைபதைத்தது... என்ன கொடூரம்.... டிரைவர் சீட்டிற்குப் பின்னால் இருந்த மூன்று சீட்டு பயணிகளும் ஸ்தல மரணம். ஐயோ... அந்த பிஞ்சு குழந்தைகளும் ,அப்பாவும், அம்மாவும் அடையாளம் தெரியாமல் கூழாகப்  பார்த்தேனே ஸ்வாமி  ....அந்தக்ஷணம் என் வசமில்லாமல் நான் பெரிதாய் அழத் தொடங்கினேன்.
                      அந்த ரோஜாப்பூ குழந்தைகள் என்ன பாவம் செய்தன... ஏன் இப்படி ஒரு கோர மரணம் அவற்றிற்கு...என்ன பாவம் செய்தார்கள் அந்த பெற்றோரும், கூட இறந்த அத்தனை ஜனங்களும்...
                     'கொஞ்ச நேரத்திற்கு  முன்னால் பிஸ்கட் கேட்ட ரமேஷ் குழந்தை இப்போது இல்லையே.... திருச்சிக்கு போய் வாங்கி தருவதாக சொன்ன அப்பா வாங்கி தராமலேயே போய் விட்டாரே.. தெய்வமே .... ஏன் இப்படி என் கண் முன்னால் இப்படி ஒரு பலி வாங்கினாய் ?' பஸ்ஸை சுற்றி சுற்றி வந்து என் முகத்து கண்ணாடி சிதறல்களை பிடுங்கியபடி அரற்றினேன்... இது கனவாக இருக்கக் கூடாதா ?   
                   கனவில்லை.... நிஜம்.  இறந்து போனவரும், காயமடைந்தவரும் ஏராளம். கூக்குரல்களும்,ஓலங்களும் வயிற்றை ஓங்கி அறைந்தன.
                    நிதானமாக யோசித்தேன்... நாமக்கல்லில் இந்த குடும்பம் ஏறாதிருந்தால் அந்த பிப்ரவரி இருபத்தாறாம் தேதியின் புலர் காலை பொழுதில் நான் இறந்திருப்பேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் இரட்டை குழந்தைகளால் இப்போது நான் பிழைத்து நிற்கிறேன்...ஒரு குழந்தையாய் இருந்திருந்தால் கூட அதே சீட்டில் 'அட்ஜஸ்ட்' பண்ணி உட்காரும்படி நடத்துனர் கூறியிருக்கக் கூடும் ...என்னைப் பிழைக்க வைத்து விட்டு தாம் மறைந்து போன அந்த இரட்டைக் குழந்தைகளின் நினைவாக இன்றும் நான் ஜோடி பருப்பு தேங்காய் கூட்டைப் பாதுகாத்து வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமா, சார் ?
                   அமெரிக்க இரட்டைகோபுரம்  தகர்ந்ததற்க்கு நான் பட்டினி கிடந்தது  தப்பா ,சார்?
                   கோயில் சாமியை விட்டு விட்டு த்வார பாலகர்களை மெய்ம்மறந்து வணங்குவது, சரியில்லையா மேடம்..?
                    சுப்புலஷ்மியின் ரெட்டை வட பவுன் சங்கிலியை எவர்க்கும் தராமல் என்னுடனே வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமா..... நீங்களே சொல்லுங்கள் !! 

                                  ***********

11 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இல்லவே இல்லை எல்லென்.வேறென்ன கொண்டு செல்லப்போகிறோம் இந்த மாதிரி அவரவர்க்கான மலர்கள் போன்ற சில நம்பிக்கைகளைத் தவிர.

என் கண்களில் இருந்து வடியும் நீர் அந்தக் குழந்தைகளின் ஆன்மாவைத் தொடும்.

என்ன ஆச்சு எல்லென்! நாங்க இருக்கோம் அற்புதமான எழுத்தை ஆர்வமா வாசிக்க.

என்ன அருமையான கலைஞன் நீங்க!எழுதுங்க வரைங்க பாடுங்க.

இந்தக் காலக் குழந்தைகள் அவர்களே அறியாத ஒரு வலையில் சிக்கிகொண்டிருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் இப்படித்தான்.

மென்மையான உள்ளங்களைக் கதைகளிலும் சினிமாக்களிலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்-பக்கத்தில் இப்படி ஒரு ஆன்மா இப்படி ஒரு பூஞ்சையான மனதோடு இருப்பதறியாமல்.

கை குடுங்க. இது மாதிரி நிறைய எழுதுங்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படித்து முடித்ததும் என்னை அறியாமல், கண்களைத் துடைத்துக் கொண்டேன்...

சிவகுமாரன் said...

கண்ணீரைத் தடுக்க முடியவில்லை . தடுக்கவும் விரும்பவில்லை.இரண்டு கண்களில் இருந்தும் இரட்டையாய் இறங்கின கண்ணீர்த்துளிகள்.
எழுதுங்கள் அய்யா. படிக்க நானிருக்கிறேன்.

ரிஷபன் said...

என்ன இப்படி ஷாக் கொடுத்துட்டீங்க கடைசில..
இது வெறும் கதையாகவே இருக்கட்டும் என்று திருச்சி இரட்டைப் பிள்ளையாரை வேண்டுகிறேன்

நிலாமகள் said...

தொடக்கத்தில் கசிய வைத்தவர், போகப் போக துடிதுடித்து துவளச் செய்துவிட்டீர்கள். தங்கள் இழப்புகளின் வலி வாசிக்கும் எங்களுள்ளும் கனமாக இறங்குகிறது. சுந்தர்ஜி சொன்னது போல் எழுத்தில், வரைதலில் எண்ணத்தை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்... எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எந்தப் புண்ணியவானோ பல தினுசு மரங்களை இரட்டை இரட்டையாக வைத்து வளர்த்துப் போயிருக்கிறார். வந்த புதிதில் ஏனென்று புரியாமல் வியந்திருக்கிறேன். அவற்றிலிருந்து எப்போதேனும் கேட்கும் ஒற்றைக்குயிலின் சோகம் இழையும் மென்குரல் இப்போது என் காதில் ஒலித்து மனசைப் பாரமாக்குகிறது. இனி பிஸ்கெட்டைப் பார்க்கும் போதெல்லாம் ரமேஷ் நினைவெழுந்து கரையச் செய்யும்.

naanhabi said...

இது போல ஏராளமான கதைகளை கேட்டிருப்போம். ஏன், நமக்கே கூட அனுபவமாக ஏற்பட்டிருக்கும். அனைதிலும் நமக்கு தோன்றுவது, நல்ல வேளையாக நான் தப்பித்துக்கொண்டேன் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், தப்ப வைத்தவனையும் தப்ப காரணமாக இருந்தவரையும், அதற்கு பதிலாக பலியாபவரையும் நாம் எதனை காலம் நினைப்போம்...? நினைக்க வேண்டும் என்று "ரெட்டை" யாக சொன்ன உங்கள் கதைக்கு ரெட்டை 'சொட்டு'க்கள்.

helmina said...

நெஞ்சை கசிய செய்தது உங்கள் கதை. தொடரட்டும் என் உங்கள் எழுத்தாணியின் திறன்.

helmina said...

நெஞ்சை கசிய செய்தது உங்கள் கதை. தொடரட்டும் உங்கள் எழுத்தாணியின் திறன்.(pizhai thiruthiya pin.. :))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எல்லென்.

யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன் அருமை எல்லென்.

மனோ சாமிநாதன் said...

உண்மை அனுபவமா அல்லது மனதின் அடி ஆழத்திலிருந்து பீரிட்டு எழுந்த உண‌ர்வலைகளை சிறுகதையாய்த் தொடுத்திருக்கிறீர்களா என்பது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரியும் நெஞ்சை நெகிழ வைத்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது ஒரு கற்பனைக் கதைதான், உண்மைச் சம்பவம் அல்ல என்று தயவுசெய்து சொல்லுங்கள்.

ரிஷபன் ஸார் சொன்ன அந்த இரட்டைப் பிள்ளையாருக்கு, இரட்டைச் சக்கர வாகனத்தில் போய், இரட்டைத் தேங்காயாக உடைத்து விட்டு வருகிறேன்.