இன்று காலை வாக்கிங் போனபோது ,ஹெட்போனை எடுத்துப் போகவில்லை. இது சமீப காலங்களில் என் வயதின் காரணமாக ஏற்படும் மறதியின் விளைவு.
வழக்கம் போல் வேடிக்கை பார்த்தபடி 'பிப்லி'யுடன் நடந்து கொண்டிருந்தபோது,யார் வீட்டிலோ யாரையோ "ஏய்,சொரணை கெட்ட எருமை மாடே மணி ஏழாகப் போகுது.. எந்திரிச்சு தொலை" என்ற செம்மொழி தமிழோசை காதில் வந்து விழுந்தது.அது ஒரு பெண்மணியின் கனமான குரல்.விடியும்போதே திட்டு வாங்கிக் கொண்டு எழுந்திருக்கும் அந்த பெருமகனார் யாரோ? அடியேன் அறியேன்!
ஒரு வேளை அந்த அம்மணியின் மகனாக இருக்கலாம்... மகளாக இருக்கலாம்.... அல்லது கணவனாகக் கூட இருக்கலாம். யாராக இருந்தால் நமக்கென்ன? நம் சிந்தனை அதை பற்றியது அல்ல. அந்த அம்மாளின் விளிப் பொருளாக இருந்த எருமையைப் பற்றியது
எருமையென்ன இப்படியெல்லாம் திட்டப்படலாமா ? அது என்ன சொரணையில்லாத மிருகமா? என் கால்கள் முன்னோக்கி நடந்தாலும் மனம் பின்னோக்கி எனது இளமைக் கால கிராமத்து வாழ்க்கையை நோக்கி நகர்ந்தது.
அப்பாவின் சொற்ப சம்பளத்தில் காலம் ஓட்டுவது கடினம் என்பதைப் புரிந்து கொண்ட அம்மா ,ஒரு எருமை மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்ய ஆசைப் பட்டார்கள். அந்த காலத்தில் அம்மாவின் பிறந்த வீட்டில் இஷ்டம் போல மாடு இருந்ததாம். பால் பண்ணையே நடந்ததாக அம்மா சொல்வார்கள். அதே போல் 'ஒரு எருமை மாட்டுடன் நாமும் ஆரம்பிக்கலாமே' என்பது அம்மாவின் ஆசை. அப்பாவும் சரி சொல்ல அம்மாவின் ரெட்டை வட சங்கிலி 'உள்ளே' போக வீட்டிற்குள் வந்தது,எருமை மாடு.
அன்று மாலை, பள்ளிக் கூடம் விட்டவுடன் விளையாடக் கூடப் போகாமல், நானும் என் அண்ணனும் ஒரே ஓட்டமாக ஓடி வீடு அடைந்தோம். புறக்கடையில் சமர்த்தாக எருமை மாடு நின்று கொண்டிருந்தது. அதைச் சுற்றி சாணம். 'ஞொய்' என்று ஒரு வாசம் வீசியதையும் பொருட்படுத்தாமல் அண்ணனுடன் களமிறங்கினேன். மாட்டைச சுற்றி சுற்றி வந்தோம். பெருமை பிடிபடவில்லை எங்கள் இருவருக்கும். 'நம்ம வீட்டு மாடு...நம்ம மாடு' என்றெல்லாம் பாடிபாடி சுற்றி வந்தோம். எங்களின் சப்தத்தையோ , பாட்டையோ மாடு , ரசிக்க வேண்டாம்... அட்லீஸ்ட்.. சட்டை செய்ய வேண்டாமோ...? ம்ஹும்..ஒரு உணர்வையும் வெளிக் காட்டாமல் வாலை 'சொர்ட்..சொர்ட்'டென்று தன வயிறறுப் பகுதியில் அடித்துக் கொண்டிருந்தது. அம்மா வந்து எங்களிருவரையும் வீட்டிற்குள் இழுத்துச் சென்றார்கள்.
அந்த மாட்டுக்கு 'கீதா' என்று பெயர் வைத்தோம். 'ஏன் அப்படி ஒரு பெயர் தேர்ந்தெடுத்தோம்' என்றெல்லாம் நினைவில்லை. நாங்கள் 'கீதா' என்று அழைத்த போதெல்லாம் அது திரும்பிப் பார்க்கும்.. மூக்கின் த்வாரங்களுக்கு இடைப்பட்ட பகுதியை சிணுங்கிக் கொள்ளும். அதன் வளைந்த கொம்புகளை ஆட்டும். தன பங்கிற்கு 'ங்கொய்..'யென்று ரீங்காரமாய் குரலெழுப்பும்.
அதற்கு சாப்பிட வைக்கோல், கட்டு கட்டாக வந்திறங்கியது. வீடு, அது வரை பார்த்தேயிராத பருத்திக் கொட்டையும், கடலைப் புண்ணாக்கும், மாட்டுத் தவிடும் மாட்டுக் கொட்டடிக்கு வந்தன. தினசரி இரவில் ஊற வைத்த பருத்திக் கொட்டையை விடியற்காலையில் அம்மாதான் அரைப்பார்கள். அதனுடன் தவிட்டைக் கலந்து கொடுக்கும் போது கீதா உறிஞ்சிக் குடிக்கும் அழகே அழகு. அப்படிக் குடித்து குடித்து மாடு நன்றாகவே பால் கறந்தது. சிவன் கோயிலில் மணியடிக்கும் மூக்கையன் அண்ட்ராயர் தெரிய வேஷ்டி கட்டியபடி வந்து பால் கறந்து கொடுத்துப் போவான்.
கிட்டத்தட்ட 2 வருஷங்கள் கீதா, எங்கள் வீட்டின் செல்லப் பிராணியாக இருந்து ஒழுங்காக பால் கொடுத்து எங்களின் பொருளாதார நிலையை கணிசமாக உயர்த்தியது.
அப்பாவிற்கு ஒரு ப்ரோமோஷன் வந்த காரணத்தினாலும் அதை விட அம்மாவின் இயலாமையினாலும் கீதாவை விற்று விட முடிவு செய்தார்கள்.
இரண்டு மூன்று ஆட்கள் வந்து பார்த்தார்கள்.அவர்களில் ஒருவர் மட்டும் நல்ல விலைக்கு பேசியதால் அவரிடமே கொடுத்துவிடலாம் என்று பேசப்பட்டது. 15 கி.மீ
தள்ளியிருந்த அந்த கிராமத்து மனிதர் ஓட்டிக்கொண்டு போவதற்காக வந்தார். அன்று இரவு எங்கள் வீட்டில் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுக்கப்போவதற்கு முன் பைசா பட்டுவாடாவை சரி செய்தார்.
அதிகாலை மூன்று மணிக்கு அப்பா,அம்மா,அந்த மனிதர் மூவரும் எழுந்து கொண்டனர். எனக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. எழுந்து கொண்டு அவர்களுடன் கொட்டடிக்குப் போனேன். கீதாவை புது மூக்கனாங்கயறு கொண்டு கட்டினார். அவர் அதை இழுத்தபோது பயங்கரமாக முரண்டு பிடித்தது. 'வர மாட்டேன்' என்பதாகப் பட்டது எனக்கு. "சாமி.. ஊரெல்லை வரைக்கும் நீங்க வாங்க ... அப்பத்தான் இதை ஓட்டிகிட்டுப் போக முடியும்...
இல்லைனா சண்டித் தனம் பண்ணும்" என்றார், அந்த மனிதர். அப்பா, அம்மா இரண்டு பேருமே மாட்டை ஓட்டிக் கொண்டு போனார்கள். கீதா, திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே போனது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.
அது 'ங்கொய்..'யென்று அடி வயிற்றிலிருந்து கத்திகொண்டே போனதாம். அதன் கண்களிலிருந்து 'பொல..பொல'வென்று கண்ணீர். அம்மாவிற்கு மனசே கேட்கவில்லையாம். என்ன செய்வது? ஊர் எல்லை வரை அப்பாவும் அம்மாவும் பொய் விட்டு வந்தார்கள்.
இந்த நிகழ்விற்குப் பிறகு 'எருமை மாடு' என்று யார், யாரைத் திட்டினாலும் எனக்கு 'சுறு சுறு..' என கோபம் வரும். 'எருமைக்கும் உணர்வுகள் உண்டு' என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என நினைப்பேன்.
மீண்டும் என்னை ஒரு முறை 'கீதா'வைப் பற்றி நினைக்க வைத்த என் ஞாபக மறதிக்கு நன்றி !! நாளை முதல் மறக்காமல் ஹெட் போனை மாட்டிக்கொண்டு 'வாக்கிங்கிற்கு இறங்க வேணும் !!! யார் யாரை வேண்டுமானாலும் எப்படியேனும் திட்டிக் கொள்ளட்டும்.
1 comment:
ஆஹா..அற்புதம்..எருமையைப் பற்றி..சாரி..கீதாவைப் பற்றி எழுதியது அருமையிலும், எருமை சாரி...அருமை!!
Post a Comment