Pages

நேசம் நம் சுவாசம் !

Saturday, April 30, 2011

             பேரு....பெத்த (BEDDHA ) பேரு...




                         ந்த இன்டர்நெட் யுகத்தில் எதற்குத்தான் வெப்சைட்டை நோண்டுவது என்ற விவஸ்தையே இல்லாமல்போய் விட்டது.....ஊசி முதல்  ஊலல்லா   பாடல் வரை 'நெட்'டில் தான் தேடுகிறார்கள். இப்படித்தான் ஒருநாள் எனது ஷட்டகரின் மகள், தனக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு பிறக்க இருக்கும் குழந்தைக்காக இப்போதே 'நெட்'இல் பெயர் தேடிக் கொண்டிருந்தாள். நம் காலத்தில் எல்லாம் இதெற்கெல்லாம் இப்படியா ரூம் போட்டு யோசித்தார்கள்? 'சாமி பெயரை வை....இல்லையென்றால் தாத்தா,பாட்டி பெயரை வை' என்று சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
                       அப்படித்தான் எனக்கு 'லக்ஷ்மிநாராயணன்' என்ற என் அம்மா வழி தாத்தாவின் பெயர்  வைக்கப்பட்டது.
                         அவர் நினைவாய் எனக்கு லக்ஷ்மிநாராயணன் என்ற நாமகரணம் சூட்டப்பட்டாலும், பெரியவரின் பெயரை எப்படி கூப்பிடுவது என்பதால் 'கிரிதரன்' என சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஒரு பெயரை வைத்து வீட்டில் கூப்பிட்டனர் . பின்னே என்ன லக்ஷ்மிநாராயணன் என்ற பெயரை சுருக்கி “நாணா” என்றோ “லக்‌ஷ்மணன்” என்றோ அழைத்திருக்கலாம்.
                        ஆனால், நண்பர்கள் என்னை 'லக்ஷ்மிநாராயணன்' என்று நீட்டிமுழக்காமல்   செல்லமாக 'லக்ஷ்மி' என்று  அழைத்தபோதுதான் சில சங்கடங்கள் உதித்தன.
                         நான் திருச்சியில் ஆறாப்பு  படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்கூலுக்குப்  போகிறேன். போகிற வழியில், பச்சை வர்ண தாவணி  வண்ணத்துப் பூச்சிகள் படிக்கும்  ’சாவித்திரி வித்யாசாலா பெண்கள் பள்ளிக்கூடத்தை’ தாண்டித்தான் போயாகவேண்டும். பின்னால் வந்து கொண்டிருந்த என் நண்பன் மனோகர் என்னை நோக்கி ,"லக்ஷ்மி" என்று விளிக்க, ஒரு தாவணி அக்கா அவனை முறைத்து ஏதோ திட்ட, நண்பன்  அன்றோடு என் சங்காத்தமே வேண்டாம் என்கிற முடிவிற்கு வந்து விட்டான். 
                          ரு முறை அப்படித்தான்....திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது, ஒரு வேளாண்  நிகழ்ச்சிக்காக ஒலிப்பதிவு செய்ய நாலைந்து அலுவலர்கள் ஜீப்பில் மயிலாடுதுறை சென்றோம். ஒரு  குறிப்பிட்ட B .D .O . விடம்  குரல் பதிவு செய்ய வேண்டி இருந்தது. B .D .O . ரெடியாக இருந்தால் என்னை அழைப்பதாகவும் அதன் பின் மைக், ரிகார்டரெல்லாம் செட் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு ஜீப்பை விட்டு இறங்கினார் என் நண்பரும் நிகழ்ச்சி பொறுப்பாளருமான கண்ணன்.
                         B .D .O . ஒலிப்பதிவிற்கு உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார். கண்ணனும் தன்னுடன் வந்த ஜீப் டிரைவரிடம் .'' ஒலிப்பதிவு பண்ணிடலாம்...லக்ஷ்மியை, வரச் சொல்லுங்க" என்றதும், அந்த B .D .O . தலையை சீப்பெடுத்து வாருகிறாராம், மீசையை வாருகிறாராம். வேர்வை துடைத்து 'மாவடித்து' கொள்கிறாராம். முக்கால் கையாக மடித்துவைத்த  சட்டையை அவசராவசரமாக முழுக்கையாக்கி, பொத்தானிட்டு  ரெடியானாராம். நான் மைக் ரெகார்டர் சகிதம் உள்ளே போனதும், "வாங்க லக்ஷ்மி, ரெகார்ட் பண்ணிடுவோம்" என்று என்னைப்பார்த்து கண்ணன் சொன்னதும் அந்த B .D .O .வின் முகம் ’ஙே’ என்றாகிவிட்டது !!
                         காதலித்துக்கொண்டிருந்த நாள்களில் , போனில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பவள் திடும்மென்று ,"டீ லக்ஷ்மி, அசைன்மென்ட் முடிச்சிட்டு சீக்கிரம் கொடுடீ...நான் எழுதணும்" என்று சொன்னாள் என்றால்  'பார்ட்டி'யின்  அப்ஸோ,அம்ஸோ 'அங்கிட்டு' அருகில் இருப்பதாக அர்த்தம். உஷாராகி விரைவாய் பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்வேன்.
                        இப்படி என் பெயரை சுருக்கி அழைத்ததால் ஏற்பட்ட சந்தோஷ/ சங்கடங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அற்புதமான பெயரை மிகவும் நேசிக்கவே செய்கிறேன்.
                         தே திருச்சி வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மற்றொரு மறக்கவொண்ணா சம்பவம். ஒரு நாள் ,
                          "லக்ஷ்மி...உங்களுக்கு ஒரு போன் கால்" - என்றார் ஒரு நண்பர்.
                          யாராயிருக்கும் என்கிற யோசனையுடன் நண்பர் கையிலிருந்து ரிசீவரை வாங்கி ,"ஹலோ" என்றேன்.
                           பரிச்சயமில்லாத ஆண் குரலொன்று ,"லக்ஷ்மிநாராயணன்தானே?' என்றது.
                           "ஹாங்"
                           "நான்தாண்டா கிரி, சித்தப்பா பேசறேன்"
                           "ஓ...சித்தப்பாவா?  சொல்லுங்க சித்தப்பா...எங்கேயிருந்து பேசறீங்க?"
                           "திண்டுக்கல்லில் இருந்துதான் பேசறேன்"
                            என் அப்பாவின் கடைசி தம்பி,அதாவது, எங்கள் சித்தப்பா அப்போது திண்டுக்கல்லில்தான் இருந்தார்.
                            "என்னாச்சு சித்தப்பா வாய்ஸ் என்னமோ மாதிரி இருக்கு ? தொண்டை கட்டியிருக்கா?" என்றேன் அக்கறையாய்.
                            ”ஆமாம்ப்பா” என்றவர் க்ஷேம லாபங்களை விசாரித்துவிட்டு, "உங்கம்மா VRS க்கு எழுதிக் கொடுத்திட்டாங்களா?" என்றார்.
                            சமையலறையே கதியாய்க் கிடக்கும் இல்லத்தரசியான அம்மாவாவது VRS ஆவது .... கொடுப்பதாவது.... எங்கியோ இடிக்குதே...என்று யோசித்தேன்...
                            "சார்...இது ஏதோ ராங் நம்பர்...உங்களுக்கு யார் வேணும்"
                            "லக்ஷ்மிநாராயணன்தானேப்பா நீ?"
                            "ஆமாம்"
                            "வீட்டிலே கூட உன்னை கிரின்னு  கூப்பிடுவாங்களே"
                            "வாஸ்தவம்தான்" என்றேன்.
                            "போன மார்ச்ல மெட்ராசிலிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிகிட்டு திருச்சி வந்தியேப்பா"
                            எனக்கு நெற்றியில் வியர்த்தாலும் மண்டைக்குள் 'சுர்'ரென்று ரத்தம் சுழட்டி அடித்து நியூரான்களை உசுப்பி,'அடடா....கிளெரிகல் செக்ஷன் 
லக்ஷ்மிநாராயணன்' என்றது.
                            விஷயத்தை அவருக்கு விண்டுரைத்தேன்."அப்படியா, ஹாஹ்..ஹா' என்று போனுக்குள்ளிருந்து சிரித்தார்.
                             அப்புறம் அந்த லக்ஷ்மிநாராயணனை அழைத்து விஷயத்தை விளக்கினேன்.அவனது சித்தப்பாவிடம் பேசச் சொன்னேன்.
                              எங்கள் இரண்டு பேருக்கும் இருந்த அபூர்வ 'பெயர்கள் ஒற்றுமை' அந்த சம்பவத்திற்கு பிறகு இன்றுவரை எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான  நட்பிற்கு வழி வகுத்தது என்பது வேறு விஷயம் !

************














                         

10 comments:

Yaathoramani.blogspot.com said...

நிறைய பேர் தங்கள் பெயர் காரணம் குறித்த
பதிவுகளை வலைத்தளத்தில் பதிவு
செய்திருந்தார்கள் நான் உட்பட
ஆனாலும் இத்தனை சுவாரஸ்யமாக
எதுவும் இல்லை
குறிப்பாக பெயரைக் கேட்டு தன்னை
அழகு படுத்திக்கொண்ட பி.டி.ஓவை நினைத்து
வெகு நேரம் சிரித்தேன்
அசத்தலான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
சிலருக்கு ராசி போலும். வைத்த பெயரை யாரும் கூப்பிடுவதில்லை.
வாழ்த்துக்கள்.

Nitty said...
This comment has been removed by the author.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடாடா..எனக்கும் இப்படி ஒரு அனுபவம். நான் இருக்கும் ஆஃபீஸில் எக்சைஸ் செக்‌ஷனில் வேலை செய்த போது ரேஞ்ச் ஆஃபீசுக்கு புதிதாய் ஒரு சூப்ரடிண்டெண்ட் வருகிறார்.பேபி என்று பெயர் சொன்னவுடன், மனத்துள் ஜிலீரென்று ஒரு உற்சாகம் கவ்வ, அவங்க கேரளாவாம் என்றவுடன், நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..அந்த நாளும் வந்தது..
ஆவலுடன் அந்த ரேஞ்ச் ஆபீஸ் போனால், நல்ல ஆஜானுபாகுவாய், கறுத்த முறுக்கி விடப் பட்ட மீசையுடன்...
இது நடந்து இருபது வருடங்களாகி விட்டது இன்னமும் பேபி என்ற பெயரைக் கேள்விப் பட்டாலே, எப்பவுமே ஒரு ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வும் எனக்கு!

வெங்கட் நாகராஜ் said...

எங்கள் அலுவலகத்திலும் பத்மநாபன் என்ற நண்பரை பத்மா என்று தான் அழைப்போம். ஒரு நாள், ஒரு புதிய நபர் ஏதோ வேலை என்று வர, அவரிடம் “பத்மா இருப்பாங்க, போய் பாருங்க!” என்று சொன்னவுடன், தலையில் இல்லாத முடியை சீப்பெடுத்து வாரிக்கொண்டு, கைக்குட்டை எடுத்து “டச்-அப்” எல்லாம் செய்து கொண்டு அவர் போக, அவர் அசடுவழிவதைப் பார்க்க பின்னாலேயே நாங்கள் எல்லாரும் போக, ஒரே காமெடிதான் போங்க! பெயர் பற்றிய உங்கள் பதிவு அருமை எல்லென்.

பத்மநாபன் said...

நம்ம பெயர்கள் படும் பாட்டை நன்றாக விவரித்துள்ளீர்கள் எல்லென். பவுடர் பூசி தலைவாரியது நல்ல நகைச்சுவை

என்பெயரில் இது வரைக்கும் வெளிநாட்டு காரங்க அப்பா பெயரை மட்டும் சேர்த்தினாங்க... இப்ப தாத்தா பெயரில் பாதியை சேர்த்து ஒரு பெயரை இரண்டரை பெயர் ஆக்கிவிட்டார்கள்

ரிஷபன் said...

இவ்வுளூண்டு எழுதி முடிச்சிட்டீங்களே..லஷ்மி..

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

திரு.ரமணி : //அசத்தலான பதிவு
தொடர வாழ்த்துக்கள்// மிகவும் நன்றி!
திரு.ரத்னவேல்: எம் வலைப்பூவிற்கு வந்து, வாசித்து, வாழ்த்தியமைக்கு நன்றி.
திரு.மூவார் முத்து://இன்னமும் பேபி என்ற பெயரைக் கேள்விப் பட்டாலே, எப்பவுமே ஒரு ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வும் எனக்கு!// அண்ணி அருகில் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த விமரிசனத்தை எழுதிய உங்களின் தைரியம் மெச்சுதற்குரியது....நன்றி
திரு.வெங்கட்ராஜ்: இப்படி ஒரு பதிவு எழுத நீங்கள்தான் எனது இன்ஸ்பிரேஷன்.வாழ்த்தியமைக்கு நன்றி.
திரு.பத்மனாபன்:நன்றி..சார்!
திரு.ரிஷபன்:இன்னும் எழுதலாம்தான்....பிறகு, மாண்புமிகு. இல்லத்தரசி முதுகில் ‘டின்’ கட்டிவிடுவார்கள்...ஹிஹி..

மனோ சாமிநாதன் said...

சகோதரர் ரமணி எழுதியதை நான் அப்படியே வழி மொழிகிறேன்! மிக மிக சுவாரஸ்யமான பதிவு!!

பிரபாஷ்கரன் said...

நல்லாருக்கு அருமையான பதிவு வாழ்த்துக்கள்