சமய சஞ்சீவி(!)
இதே மாதிரி ஒரு தை மாதம்தான் ....திருச்சிக்கருகில் ஒரு கோவில் கும்பாபிஷேகம்....என் நண்பனும் தூரத்து உறவினனுமான தங்கராஜிற்கு அந்த கும்பாபிஷேகத்திற்கு 'சவுண்ட் சிஸ்டம்' செய்ய காண்ட்ராக்ட் கிடைத்தது.. அவனுக்கு ஏற்கெனவே நாலைந்து அல்லக்கை அசிஸ்டன்ட்கள் இருந்தாலும் ராஜகோபுர ஸ்பாட்டிற்கு ஒரு ஆள் தேவையாய் இருந்தது. அவன் போதாத காலம், அவனை என்னிடம் அழைத்து வந்து,"பரமசிவம்... துறு துறுன்னு வேலை செய்யற ஆள் எவனாச்சும் இருந்தா சொல்லேன்" என்று என்னிடம் சொல்ல வைத்தது.
நாமதான் அடுத்தவங்களுக்கு உதவறத்துக்குன்னே இந்த ஜன்மம் எடுத்து தொலைச்சிருக்கமே .... உடனே ," 'கொசு' மணின்னு எங்க ஆபிஸ்ல ஒரு ஆள் இருக்கான்.லீவு போட்டு வேண்ணா வரச் சொல்றேன்.ரேட்டு பேசிக்கோ " என்றேன்.
கும்பாபிஷேக தினம். கூட்டம் 'ஜே..ஜே' என்று அலை மோதுகிறது. முதலமைச்சரின் வருகையினால் மாவட்டம் முழுவதிற்கும் சிறப்பு விடுப்பு வேறு. அக்கம்பக்கம் ஊர்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மற்ற கோபுரங்களுக்கு அல்லக்கைகளை அனுப்பிவிட்டு , 'கொசு' மணி சகிதம் காலை ஐந்து மணிக்கெல்லாம் தங்கராஜ் ராஜகோபுரம் ஏறிவிட்டான்.
ராஜகோபுரத்துக்கு மூணு ஐயர்மார்கள்.பெரிசு பெரிசாய் நாமம் போட்டுக்கொண்டு ரெண்டு 'மைக்' கேட்டனராம். தங்கராஜ் 'மைக்'கை செட் பண்ண'கொசு' மணி கேபிள் இழுத்து ஆம்ப்ளிபயரில் கனெக்ஷன் கொடுத்திருக்கிறான். 'மைக்'கைக் கண்டதும் ஐயர்மார்கள், அவர்கள் கோஷத்தை ஆரம்பித்து விட்டனர். தங்கராஜ் மற்ற கோபுர அல்லக்கைகளுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை சரி பார்த்துகொண்டான்.
மணி ஆறாகிறது....ஏழாகிறது.... எட்டாகிறது.... வெயில் சுறு சுறுவென்று ஏற ஆரம்பித்தது .பத்தரைக்குத்தான் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. நேர்முக வர்ணனைக்கு ஒரு 'மைக்'கை ரெடி பண்ணும்போது தங்கராஜிற்கு தலைவலி ஆரம்பித்திருக்கிறது. பசியும் சேர்ந்து கொள்ளவே கொஞ்சம் தள்ளாட தொடங்கினான். போதாகுறைக்கு 'ஜிவ்'வென்று வேத கோஷத்தை கணீரென்று ஐயர்கள் ஓதத் துவங்கியதும் 'மல்டிபிள் டிஸார்டர்' அவனுக்கு ஆரம்பித்தது.
"கொசு மணி ..... பயங்கரமா தலை வலிக்குதுப்பா.." என்று கூறியிருக்கிறான்.
"அண்ணே.. இங்கன ப்ளாஸ்க் ரொப்பி காபி இருக்குது...எடுத்தாரட்டா ?" என்று உதவும் கரங்களை நீட்டியிருக்கிறான், 'கொசு'மணி.
"காபியோட ஒரு சாரிடான் போட்டேன்னா தலைவலி ஓடிரும் 'கொசு' "
"இப்படி 200 அடிக்கு மேல நின்டுக்கிட்டு சாரிடான் கேட்டா எங்கண்ணே போறது?
"எதுனாச்சும் பண்ணு 'கொசு'மணி... தலைவலி மண்டயப் பொளக்குது"
வெயிலுக்குப் போட்டிருந்த குல்லாயை எடுத்து தலையை சொறிந்தான், 'கொசு'மணி. தங்கராஜு படும் பாட்டை காண சகிக்க முடியாமல் என்ன பண்ணலாம் என்ற யோசனையுடன் 'கொசு'மணி, கோபுர விளிம்பு வரை சென்று தன் தலையை ஒரு கையாலும், முகவாய்க்கட்டையை மறு கையாலும் சொறிந்தபடி யோசித்தான். கீழே இறங்கி போய் மாத்திரை வாங்கி மீண்டு வர முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. கீழே பார்த்தால் புள்ளி,புள்ளியாய் ஜனங்கள்...
"ஆஹா...'என்று துள்ளிக்குதிக்காத குறையாக "இப்ப ரெடி பண்ணிடறேன் அண்ணே" என்று உற்சாகமாக அலைந்த அவன் கண்கள் எதையோ தேடின.
எல்லாம் வினாடி நேரத்தில் ரெடி ஆகின. தலையில் தான் போட்டிருந்த தொப்பிக்குள் ' ஒரு சாரிடான் வாங்கி அனுப்பவும், ப்ளீஸ்' என்று எழுதி ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் அந்த தொப்பிக்குள் இட்டு ,சாரம் காட்டி மிச்சமிருந்த கப்பாணி கயிறில் தொப்பியைக் கட்டி மெதுவாக கீழே இறக்கினான்.
இடையிடையே "அண்ணே... கொஞ்சம் பொறுத்துக்குங்க... சாரிடான் இதோ வந்திடும்" என்று துடித்துக் கொண்டிருக்கும் தங்கராஜிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.
அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் புண்ணியவான் எவரோ செய்த உதவியால் சாரிடான் 'கொசு'மணியின் கைக்கு வந்து சேர்ந்தது. 'பிளாஸ்கை' சரித்து ஒரு பெரிய சொம்பில் காபி எடுத்துக் கொண்டு , தலையைப் பிடித்தபடி அமர்ந்திருக்கும் தங்கராஜிடம் போய் ,"அண்ணே, காபியும் சாரிடானும் ரெடி...இந்தாங்க" என்றான்.
சஞ்சீவி மலையை தூக்கி வந்த அனுமானை ராமன் கட்டிக்கொண்டது போல் ஆலிங்கனம் செய்ய முன் வந்தபடி, தங்கராஜ் "கொசு மணி ....நீ பெரிய ஆளுய்யா " என்று கூற ,
" அண்ணே... ஒரு நிமிஷம்... ஒரு பத்து ரூபா கொடுங்க.."என்றான், 'கொசு'மணி.
'கொசு'மணி ஏதோ விளையாடுவதாக எண்ணிய தங்கராஜ், "தர்றேம்ப்பா... முதல்ல மாத்திரையை கொடு"எனவும்,
"அண்ணே... காசைக் கொடுங்க.. மாத்திரையும் காபியும் உங்க கைக்கு வரும்" என்று கறாராகக் கூறியிருக்கிறான்.
"என்னப்பா ... அநியாயமா இருக்கு.. சாரிடான் ஒரு ரூபாய்தானே"
"ஒரு ரூபாய்தான்னே... ஆனா ,அதை இவ்வளவு உயரத்திற்கு, நீங்க கேட்ட பத்து நிமிஷத்துக்குள்ளே, என் மூளையை கசக்கி ,கொண்டு வந்தேன் இல்லே...அதுக்கான பீஸ்தான் எச்சாவா நான் கேக்குறது... பத்து ரூவாவ கொடுத்திட்டு சாரிடான் போட்டு காபி குடிங்க அண்ணே .... இந்த டயத்தில காசை பாக்காதிங்க" என்றான்.
வேறு வழி தெரியாததால் தங்கராஜும் அப்படியே செய்தான்.
கும்பாபிஷேகத்தை எல்லாம் நல்லபடியாக முடித்து , இத்தனை விஷயத்தையும் ஒரே மூச்சில் என்னிடம் சொன்ன தங்கராஜ் அந்த சம்பவத்திற்குப் பிறகு இது நாள் வரை என்னிடம் வேறு எந்த உதவியும் கேட்கவே இல்லை...
***********
8 comments:
நிஜமாகவே சமய சஞ்சீவிதான்.. கதை மாதிரி தெரியவில்லை.. அபார்ட்மெண்ட்டில் 3ம் மாடியில் இருந்து கயிறு கட்டி பால் பாக்கட், கீரைக் கட்டு வாங்குவதைப் பார்த்திருக்கிறேன்.. கோபுர உச்சி இதுதான் முதல் தடவை..
ஹா,ஹா,ஹா,... கதை, நல்ல காமெடி போங்க....
சமய சஞ்சீவி! சமயத்திலே செய்த உதவி அல்லவா அதான் பத்து மடங்கு மதிப்பு போல! நல்லாத்தான் கேட்டு இருக்கார் கொசு மணி! இவரு அந்த ஓ.டி. கொசுமணியா?
நல்லா இருக்குங்க,கதை. எவ்வளவு சிரமப் பட்டு அவருக்கு தலைவலி மாத்திரை கொடுத்திருக்காரு..இதப் போய் அந்த தங்கராசு பெரிசுப் படுத்தியிருக்க வாணாம்!
நல்ல கதை!
வீட்டில் கொசுத்தொல்லை ரொம்ப அதிகமோ? போன கதையிலும் 'கொசு' இந்த கதையிலும் 'கொசு' .... பரவாயில்லை! கடி ஒன்னும் வலிக்கவில்லை. என்ன...'சப்பாஷ்..'அப்படின்னு ஒரு தட்டு தட்ட நினைத்தேன் .. 'கொசு' தாங்குமான்னு தெரியலையே....! 'சப்பாஷ்'...
-மு.ஹபி
இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா
சமய சஞ்சீவிகள் சந்தர்ப்ப வாதிகளாகவும் இருந்து தொலைத்தால் சிரமம் தான்.
Post a Comment