Pages

நேசம் நம் சுவாசம் !

Monday, November 1, 2010

'வ' மேல் 'வ'
(தலைப்பு குறித்த விளக்கம், இறுதியில்)
கஸ்மாத்தாக , யதேச்சையாக ,தெய்வாதீனமாக ,தெய்வ சங்கல்பமாக - இந்த நான்கு வார்த்தைகளில் எதை வேண்டுமானாலும்  இன்று காலை நடந்த ஒரு சந்திப்பிற்கு நீங்கள் உபயோகப் படுத்தி கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. 

சென்னை செல்லும் 'பல்லவனை'ப் பிடிக்க ஸ்ரீரங்கம் ஸ்டேஷனிற்கு ஐந்தே  முக்காலுக்கெல்லாம் வந்து விட்டேன். அதிகாலை நேரத்து சிலு சிலு காற்றை அனுபவித்தபடி , தொப்பையை தள்ளிக் கொண்டு 'உஸ்..புஸ்' என்று பிளாட்பாரத்தில் வாக்கிங் போகும் மனுஷாளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு என்று பல்லவன் லேட். ஆறு ஐம்பதுக்குத்தான் எதிர்பார்க்கப்படுவதாக வார்த்தைகளை வெட்டி வெட்டி அறிவித்தார்கள் .

'சரி, நிற்கும் நேரத்தில் டிபனை முடித்து விடலாமென்று' பிளாட்பார கடையை நோக்கி நடந்த போது தான், அந்த நடுத்தர வயது தம்பதிகளைப் பார்த்தேன். 'நமக்குத் தெரிந்த ஜனங்கள்...ஆனால் 'டக்'கென்று ஞாபகம் வரவில்லையே' என்ற மன நமைச்சலுடன் நான்கு இட்லிகளை சாப்பிட்டு முடித்தேன்.

'யார்? யாராயிருக்கும்?... கீழச் சித்திரை வீதி ரங்கன் சொந்தக் காரர்களோ ? இல்லையே...அடையவளைஞ்சான் ஆரவாமுதனின் வீட்டில் பார்த்திருக்கிறோமோ? இல்லை ...திருவானைக்கா......'என்று பலவித யோசனைகளில் நான் சிக்கித் திளைத்துக் கொண்டிருந்ததை சற்றும் உணராத அந்த ந.வ.தம்பதிகள் இருபதடித் தொலைவில் என்னமோப் பேசிக் கொண்டிருந்தனர். 

பல்லவன் வந்ததும் , ஏசி சேர் கார் சீட்டில் நான் சென்று அமர, வண்டி கிளம்பியது. கொஞ்சம் ஆசுவாசமானதும் மனது மீண்டும்,'யார்...யார்..' என்று பிறாண்ட ஆரம்பித்தது.
'என்ன ஆச்சர்யம்... அவர்களும் எனது கம்பார்ட்மெண்ட்டை  நோக்கி, அதுவும் நான் அமர்ந்து கொண்டிருக்கும் சீட்டருகில் வந்து நின்று நம்பர் சோதித்துக் கொண்டிருக்க, "சீட் நம்பர் என்ன?" என்றேன். எனக்கடுத்த இரண்டு சீட்டுகளும் அவர்களுடையது!! 
அமர்ந்தனர். தங்களுக்குள் சன்ன குரலில் என்னமோ பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் கழித்து நான்தான் ஆரம்பித்தேன்,"நீங்க ஸ்ரீரங்கத்தில" என்று சாங்கோபாங்கமாகத் தொடங்கி , அந்தப் பெண்மணி என் நண்பன் முகுந்தனின் அக்கா என்றும், முகுந்தனுக்கு மட்டும் அவர்கள் குடும்பத்திலேயே சரியான வேலை கிடைக்காமல் , ஏதோ பிசினெஸ்   செய்து  கொண்டிருப்பதுப் பற்றியும் அறிந்து  கொண்டேன். ( நாங்கள் பேசின மற்ற  விஷயங்கள் இந்த கதையின் எல்கைகளுக்கு அப்பாற்பட்டதால், அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில், பிறிதொரு கதையில் எழுதுகிறேன்.)

முகுந்தனும்  நானும் ஸ்ரீரங்கம் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படித்து, சேஷாய் பாலிடெக்னிகில் 'டிப்ளமா' முடித்தோம். படிப்பை முடித்த கையுடன் 'வாழ்வே மாயம்' படம் பார்த்தோம். நாங்கள் ஐந்து  பேர் ஜமா சேர்ந்து ஸ்ரீரங்கத்தையே சைக்கிளில் சுற்றி சுற்றி வந்தோம். நானும் முகுந்தனும் மட்டும் எலெக்ட்ரிகல்  டிப்ளமா ஆனதால் ,வீட்டு வயரிங் , எரியாமல் போன லைட்டை சரி பார்த்து, ஓடவே ஓடாத டேபிள் பேனை கிரீஸ் அடித்து ஓட்டி கிடைத்த காசில், ஐந்து உறுப்பினர்களுடன்  'கமல்' ரசிகர் மன்றம் தொடங்கினோம். நாங்கள் ஐந்து பேரும் கமல் மாதிரியே ஸ்டெப்கட் செய்து கொண்டு,பெல்பாட்டம் பேன்ட் அணிந்து கொண்டு  , செய்த அலம்பல்களை ஸ்ரீரங்கத்தின் முன்னாள் தேவதைகள் _ இந்நாள் மடிசார் மாமிகள் , அவ்வளவு லேசில் மறந்திருக்க மாட்டார்கள். தினசரி , சாயங்காலம் மொட்டை கோபுரத்து சலூனில் கூடி , ஓசி சீப்பில் தலை வாரியபடி மறு நாளுக்கான திட்டமிடலில் ஈடுபடுவோம்.

எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..... அக்கௌண்ட்ஸ் படித்திருந்த ரங்குவுக்கும், 'மொக்கு' சீனுவுக்கும் பேங்க்கில் வேலை கிடைக்க , ராமானுஜனை அவன் அப்பா எங்களோடு சேர்ந்து பார்த்தால் காலை ஒடித்து விடுவதாக மிரட்டியதால் அவனும் ஒதுங்க, நானும் முகுந்தனும் மட்டும் 'கமலைக்' கட்டிக் கொண்டு அழுதோம். எங்கள் பேட்சிலேயே  நாங்கள் இருவர் மட்டும்தான் உருப்படியாக எதுவும் வேலை கிடைக்காமல் ரொம்ப காலம் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் முகுந்தன் வீட்டிற்கு அவன் அப்பா இருக்காத சமயங்களில் அவ்வப்போது செல்வதுண்டு. இந்த அக்காவிற்கு ஏற்கெனவே கல்யாணமாகி விட்டதால், முகுந்தனுடைய வீட்டில் இவர்களை நான் எப்போதோ ஓரிரு முறை மட்டும் பார்த்திருக்கிறேன்.

ஒரு தரம் அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்த போது, வீடு கொள்ளாமல் கூட்டம்.வைகுண்ட ஏகாதசிக்காக ஒரு வாரம் முன்பே உறவினர்கள் வந்து ரொம்பி இருந்தனர் . "வாடா , ரகுபதி  ...நாம திண்ணைல உக்காந்துண்டு பேசலாம்" என்று முகுந்தன் என்னை இழுத்துக் கொண்டு வந்த நேரம் , அவனுடைய உறவினர் ஒருவர் அவன் அம்மாவிடம் "ஒண்ணும் கவலையே படாதே,எச்சுமி.... முகுந்தன் ஜாதகத்த அலசிப் பாத்துட்டேன் ... ஓஹோன்னு இருப்பான் பாரு.... அவனைப் பத்தி நீ கவலையே பட வேண்டாம்.. பிசினெஸ் பண்ணுவான்.... கால்மேல கால் போட்டு உக்காந்துண்டு சம்பாதிப்பான்..... நான் சொல்றது நடக்கறதா இல்லியான்னு வேணா பாரேன்" என்று ரொம்ப நம்பிக்கையா சொன்னார்.

முகுந்தனின் தாயார்," நீ சொன்னா சரிண்ணா" என்று ஒன்பது கஜப் புடவையின் முந்தானையில் மூக்கை சிந்திக் கொண்டே ,விரல்களால் கண்களைத் துடைத்துக்  கொண்டாள்.

"இதே ஊரிலயே பிசினெஸ் பண்ணினா , மன்றத்தையும் நடத்துவோம்டா" என்றான் முகுந்தன்.

"ன் பேர் என்னன்னு சொன்னே?" என்று முகுந்தன் அக்கா கேட்டதில் திடுக்கிட்டு நிஜ உலகத்திற்கு வந்தேன்.

"ரகுபதி" என்றேன்.

"முகுந்தனோட கால் ரெண்டையும் எடுத்தாச்சு, தெரியுமோல்யோ" என்று அடுத்த அதிர்ச்சி  அம்பு என் மேல் குத்தி நின்றது.

"என்னத்து? காலை ...எடுத்தாச்சா? என்ன சொல்றேள்?" என்று  அதிர்ந்து கத்தியே விட்டேன்..

"ஒனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் ...... போன வருஷம், ஒரு ஆக்சிடெண்ட்ல அடிபட்டு பொழச்சதே புனர்ஜென்மம்னு ஆயிடுத்து..கால எடுக்க வேண்டியதா ஆயிடுத்து"

"அடப் பாவமே... இப்ப என்ன பண்றான்?"

"முகுந்தன்,கூரியர் கம்பெனியில   வேலைப் பாத்திண்டு இருந்த போது விபத்து நடந்துது.கால் போனதுக்கு அப்புறம் இங்கே தாம்பரத்தில ஒரு செல்போன் சர்வீஸ் கடை ஆரம்பிச்சு நடத்திண்டு இருக்கான்."

மாம்பலத்தில் இறங்க வேண்டிய நான் தாம்பரம் வந்ததும் இறங்கிக் கொண்டேன். அக்கா கொடுத்த முகவரியை நோக்கி நடந்தேன். "முகுந்தா.. என் இனிய நண்பனே... உனக்கு என்ன ஒரு சோதனை!! 'கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பான்'ன்னு சொல்லப்பட்ட ஜோசியமும் உன்னளவில தோத்துப் போய்டுத்தே..முகுந்தா" என்று அரற்றியபடியே அவன் கடையைக் கண்டுபிடித்தேன்.கடையில் நாலைந்து கஸ்டமர்கள் இருந்ததால், கொஞ்சம் வெயிட் பண்ணி, கூட்டம் கலைந்ததும், அவனை நெருங்கினேன்.

 என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. 'என்ன சார் வேணும்?" என்றான்.
"முகுந்தா... நான் ரகுபதிடா " என்றேன்.
என்னை எனது பிரெஞ்சு தாடியிலிருந்து மைனஸ் பண்ணிப் பார்த்து விட்டு ,"டேய்..ரகு " என்று கத்தியவன் கண்களில் மின்னல் வெளிச்சம்..."எப்படீடா இங்கே?' என்றான்.
"பல்லவன்ல பெரியாக்காவைப் பாத்தேண்டா...உன்னப் பத்தி சொன்னா...உடனேப் பாக்கணும்னு தோணித்து...ஓடி வந்துட்டேன்டா.."

சேரை விட்டு எழுந்திருக்க பிரயத்தனித்தான்... "கால் ரெண்டும் போய்டுச்சுடா"என்றவன் குரலில் சுய கழிவிரக்கம் எட்டிப் பார்த்தாலும் ,"பொழச்சுட்டேண்டா ...எப்படியும் மேல வந்துடுவேன்.." என்று நம்பிக்கை வார்த்தைகளாய் வெளி வந்தன.

" கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பேன்னு ஒன்னோட சொந்தக்காரர் சொன்னது ஞாபகம் வர்றதுடா,முகுந்தா" என்ற என் குரல் உடைந்ததை என்னால் உணர முடிந்தது.

"சரியாத்தாண்டா  சொல்லியிருக்கார்... இப்ப பாரு ... இந்த கால் போய்ட்டா என்னா... வந்து நிக்கற அத்தனை  பேர் மொபைல் போனுக்கும்  டாப் அப், ரீ சார்ஜ்னு 'கால்' மேல 'கால்' போட்டு சொல்லித்தான் ஏற்பாடு பண்ணறேன்" என்று கட,கடவென சிரித்தான், முகுந்தன்.

எனக்கு ,ஏனோ  சிரிக்கத் தோன்றவில்லை. 


*************

(தலைப்பு குறித்த விளக்கம்:  தமிழில் 'கால் '  (1 /4 ) ,என்பதற்கு   'வ' என்ற எழுத்து எழுதப்பட்டது.)





























3 comments:

naanhabi said...

கதையை படித்ததும் 'வ' மேலே 'வ' வாக, அதாவது வருத்தத்திற்கு மேலே வருத்தமாக இருந்தது...
-அன்புடன் மு.ஹபி !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதமான கதை.நேர்த்தியான நடை. ஸ்ரீரங்கத்தின் மையப்புள்ளியிலிருந்து மற்றொரு நல்ல எழுத்து.சபாஷ் எல்லென்.உங்கள் எழுத்தின் ருசிக்கு அடிமையாகிவிட்டேன்.

Rekha raghavan said...

நல்ல நடையுடன் மனதை நெகிழவைத்த சிறுகதை.

ரேகா ராகவன்