Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, June 19, 2011

பி(ஸ்)ஸி பேளா பாத்

நவீன பி(ஸ்)ஸி பேளா பாத் சாப்பிடலாம் வாங்க....

                      ந்த ‘கம்ப்யூட்டர்’, எல்லா துறைகளிலும்  புகுந்து கொலைவெறி தாண்டவம் ஆடும் இய்யுகத்தில் தமிழனின் பெருமைத்தளமான சமையல்துறையையும் விட்டுவைக்க வேண்டாம் என்கிற பேருள்ளம் கொண்டு ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ செய்து சாப்பிடும் முறை இவ்வாரம் வெளியிடப்படுகிறது.

                        சமையல் ‘ரெசிபி’ புத்தகங்கள் பெரும்பாலும் ‘சமைத்துப் பார்’ என்கிற ஒரு மாதிரியான கட்டளைத் தலைப்புடன்தான் வெளிவருகின்றன. விஷயம் தெரிவதாகக் காட்டிக் கொள்(ல்)கிற நண்பர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது,”ஆமாம்...அப்படித்தான் தலைப்பிடுகிறார்கள். ‘ரெசிபி’ பிரகாரம் செய்து பார்த்தோமே....டேஸ்டாக இல்லையே என்று எசகுபிசகாக யாராவது கேள்வி கேட்டுத் தொலைத்தால் ”நாங்கள் சமைத்துப் பார் என்றுதானே போட்டிருக்கிறோம்...உங்களை யார் சாப்பிடவெல்லாம் சொன்னது?’’என்று மடக்குக் கேள்வி கேட்டு அமுக்கிவிடலாம் என்ற தப்பித்தல் மனோபாவத்துடன் அவை அப்படி வெளியிடப்படுகிறன” என்றார்.

                     ஆனால், இந்த ‘ரெசிபி’ அந்த ரகம் இல்லை. தாராளமாக, மடிக்கணினியை அடுக்களைக்கு எடுத்துப் போய், ‘கேஸ்’அடுப்பின் ஜ்வாலைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் வைத்துக் கொண்டு வரிவரியாகப் படித்தபடி ஜூடான, ஜுவையான ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ தயாரிக்கலாம். தயாரிக்கப்பட்ட ‘மேற்படியை’ டைனிங் டேபிளுக்கு எடுத்துப் போய் தானும் சாப்பிட்டு மகிழலாம்....அகப்பட்டவர்க்கும் அளித்து மகிழலாம்.

                     முதலில் இந்த அய்ட்டங்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.

                  கெட்டி அவல் ....... 250 கிராம்
                   பாசிப்பருப்பு ..........100 கிராம்
                  பெரிய வெங்காயம் ........ 2
                   பெங்களூர் தக்காளி ........ 2
                    உருளைக்கிழங்கு ..............2
                     கேரட் ........................................1
                    ஊறிய பச்சைப் பட்டாணி.......50 கிராம்
                     சாம்பார் பொடி ..................... 2 ஸ்பூன்
                     கரம் மசாலா பொடி ..............1 ஸ்பூன்
                      புளி ..........................        நெல்லிக்காய் அளவு
                      கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                                      (தம்மாத்துண்டு)தேங்காய்துருவல்
                      பச்சை கொத்துமல்லி 
                      முந்திரிப் பருப்பு+நெய்
                      ரீஃபைண்ட் ஆயில்
                       பட்டை,லவங்கம்,ஏலக்காய்

                       ஓக்கே....ரெடியா?

                       அடுப்பை பற்றவைத்து, ப்ரஷர் பேனில் கொஞ்சம்  ரீஃபைண்ட் ஆயிலையும் நெய்யையும் ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலக்காய் ஆகியவற்றை ஃப்ரை செய்து,  பொடிபொடியாக நறுக்கின பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அப்புறம் நறுக்கின மற்ற காய்கறிகளையும் போட்டு வதக்கி லேசாக ஒரு பெருமூச்சை உதிர்க்கவும்.
                        
                 பிறகு, சாம்பார் பொடியையும்  கரம் மசாலா பொடியையும் போட்டு வதக்கி, புளிக்கரைசலை அதில் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொதிக்க வைக்கவும்.
‘தள..புள’வென்று கொதிக்கத் தொடங்கும்போது தண்ணீரில் நனைத்த அவலையும், பாசிப்பருப்பையும் அதில் இடவும். ஒரு பங்கிற்கு சுமார் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, பிறகு தேவையான அளவு உப்பு இடவும்.
  
                  கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                               (தம்மாத்துண்டு) தேங்காய்துருவல் ஆகியவற்றை தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு  அந்த பொடியையும்  ப்ரஷர் பேனில் கொதித்துக் கொண்டிருக்கும்  சமாச்சாரத்தில் போடவும்.

                 ப்ரஷர் பேனை மூடி வைத்து வெயிட்டைப் போடவும். மூன்று விசில் வரும் வரை அவரவர்க்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம். மூன்றாம் விசில் அடித்த முப்பதாவது வினாடியில் அடுப்பை அணைக்கவும். 

                  சிறிது நேரம் தேவுடு காத்துவிட்டு மூடியைத் திறந்து நறுக்கின கொத்மல்லியையும் நெய்யில் பொறித்த முந்திரிப்பருப்பையும் அதில் போட்டு, நன்றாக கிளறி டைனிங் டேபிளுக்கு எடுத்து செல்லவும். 

                   பிரியமானவர்களுடன் அமர்ந்து பரிமாறி சூடாக,ஸ்பூன் உதவியுடன்  சாப்பிட்டு மகிழலாம். விருப்பத்திற்கு ஏற்றார்போல் காராபூந்தியோ, சிப்ஸோ சேர்த்துக்கொள்ளலாம்.
        
                   உங்களுடைய   குடும்பத்து உறுப்பினர் எவர்க்கேனும் ‘ஷுகர்’ இருந்தால் அவர்களுக்கு அவலுக்கு பதிலாக சம்பாகோதுமை ரவா உபயோகித்து செய்து தரலாம்.

 ****************

                 (பி.கு.:  திருமதி இந்த பதார்த்தத்தை செய்த போது “ஆஹ்ஹா.... ஓஹ்ஹோ”என்று பாராட்டியதன் விளைவு.....’இதை 'blog'ல் எழுதுங்களேன்’ என்ற அன்புக் கட்டளை. நீங்களும் செய்து பார்த்து, சாப்பிட்டுப் பார்த்து, பாராட்டித்தான் பாருங்களேன்!)

















                 
     















15 comments:

பத்மநாபன் said...

சுடு பருப்பு சாதத்தின் செய்முறையை சுவாரசியமா எழுதியிருக்கிங்க ..... படிக்க படிக்கவே செஞ்சு சாப்பிட்ட உணர்வை கொடுத்திட்டிங்க .. ஊருக்கு போனவுடன் இந்த மெனு ஆர்டர் பண்ணிற வேண்டியதுதான் ....

குறையொன்றுமில்லை. said...

இந்த பிஸி பேளா பாத் அரிசில செய்து
பாத்திருக்கேன்.அவலில் புது மாதிரியா
இருக்கு. செய்துட வேண்டியது தான்.
ருசியான குறிப்புக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிஸ்ஸி பேளா பாத் செய்முறை குறிப்பு பசியைக் கிளப்பிவிட்டது. அருமை.

நன்றி! எழுதிய உங்களுக்கும், எழுதத்தூண்டிய தங்கள் துணைவியாருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிஸ்ஸி பேளா பாத் செய்முறை குறிப்பு பசியைக் கிளப்பிவிட்டது. அருமை.

நன்றி! எழுதிய உங்களுக்கும், எழுதத்தூண்டிய தங்கள் துணைவியாருக்கும்.

எல் கே said...

ஹ்ம்ம் ரிஸ்க் எடுக்கணுமா ? சாப்பிட்டு உங்களுக்கு ஒன்னும் ஆகலையே

A.R.ராஜகோபாலன் said...

நல்லதொரு செய்முறை விளக்கம்
செய்திடச் சொல்லுறேன் என் மனையாளை
நாளைக்கு இதுதான் லஞ்ச்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..
1.இத்த நீங்க செஞ்சு திருமதி சாப்பிட்டாங்களா?
2. திருமதி செஞ்சு நீங்க சாப்பிட்டீங்களா?
3. நீங்க ரெண்டு பேரும் செஞ்சு வேற யாராவது சாப்பிட்டாங்களா?
4. வேற யாராவது செஞ்சு நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?

ரிஷபன் said...

சமையல் குறிப்பு ஜோர்..

ரிஷபன் said...

மூன்று விசில் வரும் வரை அவரவர்க்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம்
சிறிது நேரம் தேவுடு காத்துவிட்டு

சமையலுக்கு நடுவே இந்த குறிப்புகளில் மையல் கொண்டேன்

RVS said...

நளபாகம்! உங்களுக்கு அடுப்பு தானா எரியுமா?
நல்ல டேஸ்ட்! ;-))

அம்பாளடியாள் said...

அருமையான சமயல்க் குறிப்பு தந்துள்ளீர்கள்
நன்றி வாழ்த்துக்கள்........

நிலாமகள் said...

லேசாக ஒரு பெருமூச்சை உதிர்க்கவும்.//
தம்மாத்துண்டு//
மூன்று விசில் வரும் வரை அவரவர்க்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம்//
கைம‌ண‌ம் வெகு ஜோர்!

வெங்கட் நாகராஜ் said...

பி[ஸ்]ஸி பேளாபாத் நாங்கள் செய்யும்போது சுவைக்கும் படி இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் கொடுத்துள்ள நகைச்சுவை உணர்வுடன் கூடிய குறிப்பு சுவையாக இருந்தது. இன்று வீட்டில் சொல்லி விடுகிறேன்...

மனோ சாமிநாதன் said...

அவலில் பிஸி பேளாபாத் செய்முறை கொடுத்து அசத்தி விட்டீர்கள். அவசியம் செய்து பார்க்க வேண்டும். அந்த மிளகாய் வற்ற‌ல், கடலைப்பருப்பு, தேங்காயின் அளவையும் எழுதியிருக்கலாமல்லவா?

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நைஸ்..யூஸ்ஃபுல்.பகிர்தலுக்கு நன்றி.
http://zenguna.blogspot.com/