Pages

நேசம் நம் சுவாசம் !

Saturday, June 4, 2011

நான் அடிச்சா தாங்கமாட்டே...


                 ரொம்ப நாட்களுக்கு பிறகு எனது பால்ய நண்பன் அப்துல் கஃபூரை  கைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, ‘ராசாவே உன்ன..காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுதே’ என்ற  ட்யூன் முடிந்த பிறகு, செருமியபடி, “ஹலோ... சொல்லுங்க ...எல்லென்” என்றான்.
                  ஷேம,லாபங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, “கஃபூர்.... போன வாரம் திருச்சி போயிருந்தேன்... அப்ப நம்ப  மேத்ஸ் டீச்சர் கிருஷ்ணன் சாரப் பாத்தேன்” என்றேன்.
                   “ஹேய்... நம்ப ’மஞ்சள் மகிமை’ கிருஷ்ணன் சாரா ? எப்படிப்பா இருக்கார்”
                   “நல்லாவே இருக்கார்.... என்ன.. வயசாயிடிச்சதுனால லேசா டல்லடிக்கிறார் ... மத்தபடி ஓக்கே”
                    “உன்ன அடையாளம் கண்டுகிட்டாரா?”
                    “ம்ஹூம்...’முத பெஞ்சில உட்கார்ந்திருப்பேனே சார்... உங்களுக்கு வெத்தில, பாக்கு கூட வாங்கி வருவேனே சார்’ங்கிறேன்.... ஆமாம்.. ஆமாங்கிறார்... ஆனா அவரால சரியா புரிஞ்சிக்க முடியல”
                    “அப்புறம்...” என்ற கஃபூர், “ஒரு நிமிஷம்..எல்லென்... சிக்னல் சரியா கிடைக்கல... மாடிக்கு வர்றேன்” என்று சொல்லி விட்டு சில நொடி மெளனம் காத்து, “ ம்... இப்ப சொல்லு” என்றான்.
                    “அப்புறமென்ன... ’சார்... நான் கஃபூர் கிளாஸ்மேட் சார்’ ன்னதும், அவர் முகத்தில ’அப்படியா’ன்னு ...ஒரே சந்தோஷம்...ஒன்னெ நல்லா ஞாபகம் வச்சுருக்கார்”
                     “அப்படியா..”என்றவனின் குரலிலும் சந்தோஷம் தொனித்தது.”என்ன அவரால மறக்க முடியாது...எல்லென். அதே போல எனக்கும் அவர லேசில மறக்க முடியாது” என்றான்.
                        இந்த கைபேசி சம்பாஷணையில் நமக்கு தேவையான இடத்தில் தற்போது நாம் நிற்பதால் இந்த உரையாடலை இங்கேயே  'freeze'  செய்து விட்டு கதைக்கு வருவோம்.
                       1974 - 75 -இல் நானும் கஃபூரும் S.S.L.C. (அப்போது XI Std.,) படித்துக் கொண்டிருந்தோம். நான் காலாண்டுத் தேர்வுக்கு முன்னால் ‘டைபாய்டு’ ஜுரத்தில் படுத்துவிட்ட போது யக்ஞராமன் என்ற நண்பனும் இந்த கஃபூரும்தான் என் வீட்டிற்கு வந்து அன்றாடம் நடந்த  பாட விவரங்களை எனக்கு சொல்வர். அந்த நன்றி கலந்த நட்பு 35 வருடங்களுக்கு பிறகும் - இன்றளவும் - எனக்கு கஃபூருடன் தொடர்கிறது.
                       கஃபூர் ஒரு  above average student.  படிப்பில் மிகவும் ஆர்வம் மிக்கவன். எல்லா பாடங்களிலும் 70 - 80 என்று வாங்குபவன், கணக்கில் மட்டும் நொண்டியடிப்பான். 50 -ஐ  தாண்ட ’தலைகீழாய் நின்று தண்ணி குடிப்பான்’.  
                        ’கிருஷ்ணன் சார்ட்ட மட்டும் ட்யூஷன் எடுத்தேன்னா நல்லா மார்க் வாங்கலாம்டான்னு’ சொல்வான்... அவர்கிட்ட கேட்டுப் பார்த்தான்..கெஞ்சிப் பார்த்தான். ஆனா, அவர் ஏனோ காரணத்தினால அவனுக்கு ட்யூஷன் எடுக்கறத தவிர்த்துகிட்டே வந்தார்.
                        சம்பவ தினத்தன்று, க்ளாஸ் ரூமில் மேத்ஸ் க்ளாஸை  கிருஷ்ணன் சார், மிகுந்த ரசனையுடன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சார், ஒரு கோபிஷ்டர் என்பதால் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கவனிக்கிறோம். ஆனால், மூன்றாவது பெஞ்சில் , கஃபூரோ இடது கையை இடது கன்னத்திற்கு முட்டு கொடுத்தவாறு உட்கார்ந்திருந்த ‘போஸை’ பார்த்த சாருக்கு வந்ததே கோபம். கஃபூரை எழுந்திருக்கச் சொல்லி ‘பொளிச்’சென்று விட்டார், ஒரு அறை. என் காதுக்குள் ‘ஙொய்ங்’ஙென்றது. அதைத் தொடர்ந்து ,
                        “அய்யோ” என்று  ஒரு அலறல்... அடி வாங்கிய கஃபூர் கத்தவில்லை...அடி கொடுத்த சார்தான் அலறியிருக்கிறார். என்ன நடந்தது என்று நாங்கள் எழுந்து நின்று பார்க்கிறோம்......கஃபூரின் வாயிலிருந்து பல் உடைந்து ரத்தம் ‘குபுக்..குபுக்’கென்று தினத்தந்தி பாஷைக் கணக்காய்க் கொட்டுகிறது. ரத்ததைப் பார்த்த சாருக்கு கையும் ஓடவில்லை...காலும் ஓடவில்லை...அவர் தேகம் நடுங்குகிறது...டென்ஷனாகி விட்டார்...”லீடர் இவனை பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போய் வாயைக் கழுவி, காண்டீன்ல  டீ வாங்கிக் கொடு....” என்று சொல்லி லீடர் கையில் ஐந்து ரூபாயைத் திணிக்கிறார்.
                      அன்று அவர் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்....எல்லாம் நல்ல படியாக நடந்தேறி, அவன் சொஸ்தமாக கிளாஸிற்கு வந்து சேர்ந்த பின்புதான் சாரின் முகம் மந்தஹாசமாகியது.(இரண்டு டீ போக மிச்ச சில்லறை அவர் கைக்கு போகவில்லை என்பது வேறு விஷயம்.)
                      அன்று நடந்த சம்பவத்தை ஹெட்மாஸ்டர் வரையில் கொண்டு போக மாட்டேன் என்று அவரிடம் கஃபூர் சத்தியம் செய்த போது, சார் அவனை உச்சிமுகராத குறைதான். 
                       ஆனால் அடுத்தடுத்த கிளாஸ்களில் சார்வாள் பொத்தாம்பொதுவாக,”ஓங்கி அடிச்சேன்னா, பல்லு முகரையெல்லாம் பிஞ்சிடும்” என்று ‘சிங்கம்’பட வசனம் மாதிரி பேசி உதார் விடும் போது எங்களுக்கு லேசாய் சிரிப்பு வரும்.
                        அதற்குப் பிறகு கஃபூர், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ,” எங்கப்பா உங்களைப் பாக்கணும்னு சொன்னார்,சார்”னு சொல்லவும், சார் பதட்டமாகினாராம். “எதுக்கு..எதுக்கு?” என்றாராம்.
                        “உங்ககிட்ட மேத்ஸ் ட்யூஷன் சம்பந்தமா பேசணுமாம், சார்” என்றிருக்கிறான், கஃபூர்.
                        ‘ இதுக்கெல்லாம் அப்பா வந்து என்னத்துக்கு சொல்லணும்... நாளை முதல் நீ ட்யூஷனுக்கு வந்துடு” என்று சொல்லி விட்டாராம்.
                         அவரிடத்தில்  ட்யூஷன் படித்து கணக்கில் 100 க்கு 100 வாங்கியதை எல்லோரிடத்தும் ,எப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்ளும்  கஃபூர், அடி வாங்கிய அன்றைக்கு அவன் பல் வலியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்ததையும் , அதனால் கையூன்றி அமர்ந்திருந்ததையும், நயா பைசா செலவில்லாமல் பல் ‘பிடுங்க’ப்பட்டதையும் எவரிடத்தும் சொன்னதே இல்லை -  என்னைத் தவிர.

**********                 
 

                  

                       
 
 









12 comments:

ரிஷபன் said...

கையக் கொடுங்க எல்லென்..
சபாஷ்..
அப்படியே ஒன்றிப் போய் படித்தேன்..
வகுப்பு ‘அறை’யில் நடந்ததை நகைச்சுவை ததும்ப சொன்ன விதம் கிளாசிக்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதைத் தான் ‘ பல்லு போச்சு..மார்க் வந்தது டும்..டும்..டும்’பாங்களா?

A.R.ராஜகோபாலன் said...

காலம் பல
கடந்தும்
நிலையாய்
நிற்கும்
உங்களின்
உன்னத
நட்பிற்கு ஒரு
ராயல் சல்யுட்
எல்லென் சார்
நம் நீண்ட கால நண்பர்களுடன் பேசும் போது அப்படியே கடந்த கால நினைவுகள் நம் மனதை மந்திரமாய் ஆக்கிரமிக்கும் அழகு என்றுமே அற்புதம்
நல்ல பதிவு எல்லென் சார்

மனோ சாமிநாதன் said...

மலரும் நினைவுகளை விதம் அருமை! எல்லோருக்குமே இந்த நினைவுகள், முக்கியமாக பள்ளி நினைவுகள் இப்படித்தான் அடிக்கடி நினைவில் எழுந்து மனதை தாலாட்டும். அதை எழுதியிருந்த விதம் சுவாரஸ்யமாக இருந்தது.

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
வெங்கட் நாகராஜ் said...

பள்ளி நினைவுகள் சுகமானவை. அதை நீங்கள் சொல்லி இருக்கும் விதம் அதே போல் சுகமாய் இருந்தது! வகுப்பறையில் விழுந்த அறை! நன்றாக இருந்தது.

பத்மநாபன் said...

கணக்குவாத்தியாரை ட்யுஷன் எடுக்க கணக்கு பண்ணியவிதம் அருமை.. வாழ்க்கையின் வசந்தமான பள்ளிவாழ்க்கை நினைவுகளை அழகாக பகிர்ந்தீர்கள்

குறையொன்றுமில்லை. said...

பள்ளி நினைவுகளை அருமையாகப்பகிர்ந்து கொண்டிருக்கிரீர்கள். நல்லா இருக்கு.

Yaathoramani.blogspot.com said...

எனது பள்ளி நினைவுகளையும்
கிளறிவிட்டுப்போனது உங்கள் பதிவு
பதிவின் வெற்றி என்பதுவே அதுதானே
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/2.html

இராஜராஜேஸ்வரி said...

வகுப்பறையில் கிடைத்த அறையால் பல்லுக்கும், வாழ்க்கைக்கும் ஒருங்கே விமோசனம் கிடைத்தது. அருமை. பாராட்டுக்கள் பகிர்வுக்கு

Unknown said...

சுவையான அனுபவம் சுவையாக்த்தொடங்கி நகைச்சுவையுடன் முடித்தது சுவையே!