Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, November 5, 2010

தீபாவளித் திருநாள்

                     

     தீபாவளித்  திருநாள் 



               ப்படி,இப்படியென்று   2010 -ம் வருடத்திய தீபாவளி , நவம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமையன்று  கங்கா ஸ்நானத்துடன் (!) தொடங்கி , ரஜினி பேட்டியுடன் இனிதே நிறைவடைந்தது. பெரியவர்களின் ஆசிர்வாதங்களும், நட்பு  இதயங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் கைபேசி மற்றும் தொலைபேசிகள் மூலம் சொஸ்தமாக வந்து சேர்ந்தன. குறும்(பு) செய்திகளுக்கும் குறைவில்லை. வழக்கம் போல் நாமும் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து வாழ்த்துகளை வாரி வழங்கினோம்!!

               நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களிடம் ஸ்வீட்டை நீட்டிவிட்டு , "எங்க தாத்தா காலத்திலே' என்று நாம் ஆரம்பித்ததும்  , எம் உத்தம புத்திரன் ,"அப்ப  நான் கிளம்பறேன்"என்று பைக்கை ஓங்கி உதைத்துக் கிளப்பி தன சகாக்களை  காணச் சென்றான். வாழ்த்த வந்த நண்பர்களோ , எஸ்கேப்  ஆக வேறு வழி  தெரியாமல் சரணாகதித் தொனியில் "உங்க தாத்தா காலத்திலே...?" என்று ரொம்ப ஆவலை முகத்தில்  தேக்கிக் கேட்டனர்.

                  இது போதாதா நமக்கு.  கண்களை மூடிக் கொண்டு பழைய நினைவுகள் ஓட்டை டேபிள் பானாக சுற்றத் தொடங்கியது .."தாத்தா காலத்திலே , அவர் வசிச்ச கிராமத்துக்கு போவோம். தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முந்தியே , எங்க பாமிலி, எங்க சித்தப்பாக்கள்  பாமிலிஎன்று 8 பெரியவர்களும் சுமார் 20 சிறிய உருப்படிகளுமாக போய் இறங்குவோம். லேடீஸ் எல்லோரும் பட்சண, பலகார தயாரிப்புகளில் இறங்க , அப்பா,சித்தப்புஸ் எல்லோரும் கடைசி நேர ஷாபிங் செல்வர். தாத்தாவும் பாட்டியும் அவர்கள் காலத்திய தீபாவளியைப் பற்றி சிலாகித்து எங்களுக்கு கதை சொல்லியவற்றை மறக்க முடியுமா? நாங்கள் 20 பேரும் 'ஹா'வென்று வாய் பிளந்துக் கேட்டுக் கொண்டிருப்போம்.

                  அந்த இரண்டு நாட்களும்  'தீபாவளி,தீபாவளி' என்ற பினாத்தல்தான்... 'அவரவர் டிரெஸ்தான் ஒசத்தி' என்று  பீற்றிக்கொள்ளும்போது  ஏற்படும் ஆனந்தத்தை  விட 'அடுத்தவன் டிரெஸ் கலர் நல்லாவே  இல்லே...என்கிட்டே இதே மாதிரி ஒரு சட்டை இருந்தது ... ஒரே மாசத்துல டர்ரர்ர்ர்ர் ..ர்ர்ர்னு கிழிஞ்சுப் போச்சுன்னு'  சொல்லி கடுப்பு ஏத்தறதுல உண்டாகற உற்சாகம் இருக்கிறதே...அட..அட..அடா...!!! பாதிக்கபட்டவனோ / வளோ  தம் அம்மாவிடம் போய்ச் சொல்லி, அங்கே ஒரு சின்ன பாலிடிக்ஸ் அரங்கேறும்.

                 எங்களுக்கு மொத்தம் மூன்று சித்தப்பாக்கள். எல்லோரும் ,'தாம்..தூம்' என்று செலவழிப்பார்கள். ஒருவர் பட்டாசே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வருவார்.(எழுபது...எண்பதுகளில் ஆயிரம் என்பது பெரிய தொகை) இன்னொரு சித்தப்பு  ஆம்பிளப் பசங்களுக்கு மோதிரம் , சிகப்பு பிரேம் கூலிங் கிளாஸ் , கலைடாஸ்கோப் என்றும், பொம்பளப் பசங்களுக்கு ரிப்பன், வளையல், நெயில்பாலிஷ் என்றும் அள்ளி வழங்குவார். மூன்றாவது சித்தப்பு, பரிவாரங்கள் புடை சூழ ஹோட்டல் சென்று முந்திரி போட்டு ரவா தோசை வாங்கிக் கொடுத்து வீட்டில் வந்து தாத்தாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வார். "வீட்டில இத்தனை செய்யும் போது எதுக்குக்  கூட்டிக்கிட்டுப் போனே" என்று தாத்தா சத்தம் போடுவார். பாவம் சித்தப்பா .

                  தீபாவளி நாளன்றைக்கு விடியல் மூன்று  மணிக்கெல்லாம் எழுந்து விடுவார் எம் அப்பா. இரண்டு பெரிய தவலைகளில் கிணற்று நீரை நிரப்பி , மண் அடுப்பில் ஏற்றி வைத்து வெந்நீர் வைத்து விட்டு எங்களை எழுப்புவார். " தீபாவளி வந்துடிச்சி... எழுந்திருங்க..எழுந்திருங்க " என்று எம் அப்பாவின் குரலைக் கேட்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து , புழக்கடைப்பக்கம் ஓடுவோம்.

                    ஆஜானுபாகுவாய் இருப்பார் தாத்தா. முதலில் முதல் பேரனுக்கு தலைக்கு சுடச் சுட எண்ணெய் வைத்து விட்டு, பிறகு மற்ற பேரன் , பேத்திகளுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். எண்ணெய் பட்டு கண்கள் ஒரு மாதிரி ஜிவு ஜிவுக்க போதா குறைக்கு , சரியாக காய்ந்திராத ஈர விறகு வேறு தன பங்கிற்கு புகையைக்  கிளப்பி பாடாய்ப் படுத்தும்.

                      எண்ணெய்  உடம்பில் சூடாய் வெந்நீர் ஊற்றப் படும்போது ஒரு சிலிர்ப்பு உண்டாகும். அதை அனுபவித்தபடி  இருக்கும்போதே சீயக்காய் தேய்க்கப்படும். அந்த காலத்தில் ஈகிள் பிராண்ட் சீயக்காய் பொடிதான். கண்ணில் பட்டதோ ....செம எரிச்சல் எரியும். இப்படி கண்ணில் சீயக்காய் விழுந்து ரெண்டு மூணு உருப்படிகள் 'வ்றாட்..வ்றாட்'டென்று கத்திக் கொண்டிருக்கும்.

                        குளித்து வந்தவுடன் தாத்தாதான் எல்லோருக்கும் அவரவருடைய துணிமணிகளை  சந்தன, குங்குமம் இட்டு ஆசிர்வாதம் செய்து கட்டிக் கொள்ள சொல்வார். அதற்கப்புறம் பெரியவர்கள் ஸ்நானம் பண்ணின  பிறகு, அவர்களின் பந்தோபஸ்துடன் வெடி,பட்டாசு, மத்தாப்பு வெடிக்க கிளம்புவோம்.

                         பொடிசுகள் நாங்கள் பொட்டு கேப், கம்பி மத்தாப்பு, கலசம், பாம்பு மாத்திரை, தரை சக்கரம் என்று ஜோலியைப் பார்க்க சித்தப்பாக்கள், அப்பா, தாததா எல்லோரும் பெரிய,பெரிய வெடிகளை வெடிப்பார்கள். தாத்தா ,ஒரு உபகரணம் வைத்திருப்பார். அதில் கந்தகத்  தூளை நிரப்பி,மூடி, ஓங்கி பாறாங்கல்லில் அடிக்க கிராமமே அதிரும். எங்கள் காதுகளுக்குள் 'ங்கொய்'என்கும்.

                        அதற்குப் பிறகு, தீபாவளி மருந்து சாப்பிட்டு , பட்சணங்களை ஒரு கை பார்ப்போம்.

                       இப்படி அழகாய் கொண்டாடிய தீபாவளி எங்கே? இப்போது ஏனோ, தானோவென்று  கொண்டாடும் தீபாவளி எங்கே? என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது.டெலிவிஷன் பாதியும், கணிப்பொறி பாதியுமாக நம் இளம் தலை முறையினரை  கட்டிப் போட்டு விட , செலேப்ரேஷன்  என்பது கூட ஒரு சம்பிரதாயமாக ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் தாய்மார்கள்தான் அடுத்த தலைமுறையினர்க்கு நம் பாரம்பர்ய விழாக்களைப் பற்றி எடுத்துச் சொல்லி  அவர்களுக்கு அவற்றின் சிறப்புகளை உணர்த்த வேண்டும். "எம் பொண்ணு கிச்சன் பக்கமே வர மாட்டா.....கடையில போய்  என்ன வேணுமோ வாங்கிட்டு வந்து தீபாவளியை கொண்டாடிட வேண்டியதுதான் ..."என்று நம் தாய்மார்கள் கூறினால் , லட்டு,  மைசூர் பா, அச்சு முறுக்கு போன்ற பட்சணங்களை நம் வீட்டில், நாமே மிக சுகாதாரமாக செய்யலாம் என்பது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

                   யோசிப்போம். அடுத்த தீபாவளியை நிறைய மக்களுடன், உற்சாகமாக , நிறைய பலகாரங்கள் நம் வீட்டிலேயே செய்து ,டெலிவிஷனற்ற தீபாவளியாகக் கொண்டாட உறதி ஏற்போம்.

                    நான்  கண் விழித்த போது ஸ்வீட் சாப்பிட்டு முடித்து விட்டு நண்பர்கள் எப்போதோ கிளம்பிப் போயிருந்தனர் !!!



         

8 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..சூப்பர். இதைப் போல தான் நான் ‘புது வருடப் பிறப்பில்’ ‘புலம்பியிருக்கேன்.

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

helmina said...

True, tried not to watch TV and spend time with family but the movies were tempting.... Pazhai ponna manasu.. :(

naanhabi said...

அதிகாலை எழுந்து ..... என்ற வரிகளே அர்த்தமற்ற்தாகிபோனதே நண்பரே... ! நான் செல் பேசியில் தொடர்பு கொண்டபோது (சுமார் ஒன்பது மணியளவில்) கொட்டாவி விட்டுக்கொண்டே வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டவர்கள் அனேகம்பேர் .... என்னவென்று சொல்வது.. நண்பரின் புண்ணியத்தில் கற்பனயில் நானும் தீபாவளி கொண்டாடிவிட்டேன்! நன்றி! சீயக்காய் எரிச்சல் தான் இன்னும் போகவில்லை..... ஹி...ஹி.....

Unknown said...

a nostalgic reminder of a bygone era

jalaludeen

ரிஷபன் said...

தீபாவளி மட்டுமல்ல தினசரி வாழ்க்கையே இப்போது ‘எந்திரனாய்’ மாறிவிட்டது!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் எல்லென்.க்ளாஸ் இடுகை. நாம் பல விஷயங்களில் அவற்றின் அர்த்தத்தை இழந்து சம்ப்ரதாயத்துக்காகப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்.ஒரு வேளை தொலைக்காட்சியும் கணிணியும் அப்போதே இருந்திருந்தால் இதே புலம்பலை இழப்பை உங்களின் அப்பாவோ தாத்தாவோ புலம்ப நீங்கள் உத்தம புத்திரனாய் பைக்கை உதைத்துக் கிளம்பியிருக்கக் கூடும்.

தவிர அமைப்புக்களுக்குச் சென்று சொல்சரிபார்ப்புத் தேவையில்லை என்று மாற்றி விடுங்கள்.கமெண்ட் கொடுக்க எளிதாயிருக்கும்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

எம் வலைப்பூவிற்கு வந்தமைக்கு மிக்க நன்றி! தங்களின் ஆலோசனைப்படி 'சொல் சரிபார்ப்பு' தேவையேயில்லை என்று பதிந்து விட்டோம்.

vasan said...

எல்லென், அரும‌யான அந்த‌நாள் ஞாப‌க‌ப் ப‌திவு. தீபாவ‌ளி வருவத‌ற்கு ஓரிரு மாத‌ங்க‌ளுக்கு முன்பிருந்தே குறுகுறுன்னு இருக்கும். வ‌குப்பு ப‌ச‌ங்ககிட்ட‌ கிட‌க்கிற‌ நேர‌த்தில‌ எல்லாம் இதே பேச்சுத்தான். வெடி, துப்பாக்கி, ம‌த்தாப்பு, புது டிர‌ஸ், டைல‌ர்க‌டை, ப‌ல‌கார‌ம், சொந்த‌ம் அது ஒரு க‌ன‌க்கால‌ம் தான். தீபாவ‌ளி முடிஞ்சி ம‌க்காநாள், இன்னும் ஒரு வருஷ்ம் காத்திருக்க‌னுமுன்னு ஒரு வ‌ருத்த‌ம் வ‌ரும் பாருங்க‌! ம்..ஏக‌த்துக்கும், ஏக்க‌ம்.