Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, March 27, 2011

தூங்கு மூஞ்சி மரம்



                  {கடந்த நாலைந்து வாரங்களாக ஆபிசிலும், வீட்டிலும் அய்யா பயங்கர பிசி... சிந்தனை குதிரை 'டொக்..டொக்'கென்று அதுபாட்டிற்கு ஓடிக் கொண்டிருந்தாலும் ஆற அமர உட்கார்ந்து இரண்டு வரி அடிக்க, மனசு ஒத்துழைக்க  வேணுமே...ம்ஹும்...நம் இனி(ணை)ய நண்பர்கள் "என்னாச்சு ?" என்று அக்கறையுடன் விசாரித்தனர்....எப்பொழுதும் என்னை எழுத உற்சாகப் படுத்தும் ஆர்.ஆர்.ஆர் சார், "ஆபிஸ், வீடுன்னு ஏதாவது காரணம் சொல்லாம எழுதுங்க " என்று அன்புக் கட்டளையிட்டார்...மேலும் , நலம் விசாரித்த பிரணவம் ரவிக்குமார் அவர்களுக்கும் கூடை கூடையாய் நன்றி கூறி தொடர்கிறேன்.}

             யாம் அறிந்த வரையில் எல்லா அரசு அலுவலகங்களின் முகப்பிலும் குறைந்தது ஒரு தூங்கு மூஞ்சி மரமாவது இருக்கிறது....'இது ஏன் ?' என்ற கேள்வி என் மூளையை அடிக்கடி பிறாண்டும். நானும் ,அங்கு பணி புரிவதாய் சொல்லிக் கொள்ளும் சில நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் தெரியவில்லை..'சிம்பாலிக் ஆக இருக்குமோ ' என்று என்னையே திரும்பிக் கேட்டு விட்டு  கொட்டாவி விட்டனர்..."ஏன் எதுக்குன்னு தெரியாதுப்பா...நாங்க மதியம் லஞ்ச் முடிச்சிட்டு வெற்றிலை பாக்கு,சிகரெட்,பான்,கடலை மிட்டாய் போன்றவற்றை அரட்டையுடன் அனுபவிக்க கிடைத்த நிழற்குடை..." என்றனர் வேறு சிலர்.

                   நமக்குத்தான் ஒரு விஷயம் கிடைத்து விட்டால் வேர் வரை சென்று அலசுவது வழக்கம் ஆயிற்றே... அதுவும் மரம் பற்றிய விபரம்.... விட்டு விடுவோமா...

                  இப்படித்தான் ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு அலுவலகமாம்.... நகரத்தை விட்டு பதினான்கு கி.மீ. தொலைவில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அமைந்திருந்ததாம். பிரிட்டிஷ் காலத்து பில்டிங். சுற்றிலும் எக்கச்சக்கச்சக்க வெற்று நிலம்...
                   ஒரு முறை அந்த ஆபிஸின் உயரதிகாரி "ஆஹா இத்தனை இடம் வெறுமனே இருக்கிறதே.. உபயோகமாக ஏதாவது பயிர் பண்ணலாமே" என்று ஒரு ஐடியாவை உதிர்க்க மூன்றே மாதங்களில் பூச்செடிகளால் நிரம்பியது அந்த இடம்...விதம் விதமான ரோஜாக்களும், சாமந்திகளும், மல்லிகையும் அந்த பிரதேசத்தை மிக ரம்யமாக்கின.
                    அடுத்து வந்தது வல்லடி... ஆபிஸிற்கு லீவு போட்டிருந்தாலும் ஊழியர்கள் மெனக்கெட்டுஆபிஸிற்கு வந்து ஆளாளுக்கு இத்தனை பூப்பறித்துக் கொண்டு  போவதை வழக்கமாக்கி கொண்டனர். வேறு வேலை எதுவும் இல்லாமல் ஆபிஸிற்கு வந்த சிலர் ஆபிஸ் வேலையை புறம்தள்ளி விட்டு பூப் பறித்து அதை அங்கேயே தொடுத்து, விற்று நாலு காசும் பார்த்தனர் !
                    பிறகு வந்த அதிகாரி, இந்த ஒழுங்கீனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக எல்லா செடிகளையும் களைந்து விட்டு வாழை, மா, பலா என்று மரம் நாடும் யோசனையை முன் வைத்து நடத்திக் காட்டினார்... எல்லா மரங்களும் பலன் கொடுக்கத் தொடங்கியபோது, அந்த காய்களை 'எனக்கு..உனக்கு' என்று ஒவ்வொருத்தரும் அடிபிடி சண்டையில் இறங்கி பிரித்துக் கொள்வதைப் பார்த்து 'ட்ரான்ஸ்பர்' கேட்டாராம். அந்த அதிகாரி...
ஒருமுறை ஒரு பலாப் பழத்திற்காக வெட்டு குத்தே நடந்ததாக ஒரு தகவல்....


                    ஆகையால்தான், அந்த சம்பவங்களுக்கு பிறகு இனிமேல் வெறும் நிழல் மட்டும் கொடுக்ககூடிய தூங்கு மூஞ்சி மரத்தை வளர்க்கவேண்டும் என்று தீர்மானித்து, ஒரு சுற்றறிக்கையை மற்ற அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி புண்ணியம் கட்டிக் கொண்டார்களாம்... 


                    எனவே, இனிமேல் எந்த அரசு அலுவலகத்திற்கு நீங்கள் செல்ல நேர்ந்தாலும் அங்கு கிளைபரப்பிக் கொண்டிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்து 'சிம்பாலிக்'காக வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்...
         
                                        *************************************


           
 
 



 


Thursday, February 24, 2011

வாலண்டைன்ஸ் தினம்

        

              வாலண்டைன்ஸ் தினம் கடந்து போன பின்புதான் ,"அடடா" என்று தோன்றியது....லேட்டா என்ட்ரி ஆவதுதானே காதலின் ஸ்பெஷலே...!
               எழுதாமல் எப்படி விடுவது ? சரி... இம்முறை 'கவிதையில்  கை வைப்போமே' என்று தோன்றியதன் விளைவாய் இதோ வருகிறது மூன்றே மூன்று  வரி - இரண்டு வார்த்தை கவிதை...

              விதி யாரை விட்டது...படியுங்கள்


                                    காதல் 

                      நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும் என நினைக்கும் ....

                                 *****************
  

Tuesday, February 15, 2011

அப்புடு.... இப்புடு....எப்புடு..?

         
            அப்புடு.... இப்புடு....எப்புடு..?                        
                                      (ரொம்ப தப்புடு)
(முன் குறிப்பு : முதலில் பின் குறிப்பு படிக்கவும்)





          என்.டி.ராமராவ்காரு     சி. எம். ஆக ஆந்திரத்தை 'ஓஹோ' என்று அரசாண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. வில்லாக சர்டிபிகேட்டுகளையும் , அம்பாக அப்ளிகேஷன்களையும் கருதிக்கொண்டு ,அடுத்த வேளை 'புவ்வாவு'க்கு   ஏதாவது வேலை  கிடைக்குமா என்று   நான் வேட்டையாடிகொண்டிருந்தேன். என்.டி.ராமராவ்காரு, என்னை உடனடியாக ஆந்திர  மாநிலத்திற்கு வருமாறும் ,எனக்கு ஒரு வேலைவாய்ப்பு தருவதில் பெருமைப்படுவதாகவும் கூறி (மன்றாடி) அழைக்காவிட்டாலும் நான் அங்கு போவதாக முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஹைதராபாத்தில் எனது ரூ.199.95 பைசா பாட்டா செருப்பு கால்களைப் பதித்தேன்.

           எனது சித்தி வீடு  ஹைதராபாத்தில் பாலா நகரில் இருந்தது. 'எந்தடு பஸ்சுடு பாலா நகருடு போகுடு' என்று எல்லா தமிழ் வார்த்தையோடும் ஒரு 'டு'வை சேர்த்தடித்து எனக்கும் எனது ஒன்றரையணா ஜோல்னா பைக்கும்  அதிக சேதாரம் ஏற்படா வண்ணம் பேசி, சித்தி வீடடைந்தேன். சித்திக்கும் என் கசின்களுக்கும் , நான் யார் துணையும் இன்றி தனியாக அவர்கள் வீடடைந்ததில் ஆச்சர்யம். கசங்கிப் போயிருந்த காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு என் பிரதாபத்தை பீட்டர் விட்டேன். 
            தெலுங்கு ஒரு 'டப்பா லேங்குவேஜ்' என்கிற என் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் சம்பவம் அடுத்த இரண்டு நாட்களில் நடக்கப் போவது தெரியாமல் அன்று முழுவதும் தெனாவெட்டாய்  திரிந்தேன்.
              சித்தப்பு HAL -இல் எக்சிக்யூடிவ். கசின்ஸ்   பள்ளிப்  படிப்பில் இருந்தனர். சித்தியோ 'லேடிஸ் க்ளப்' பின் காரியதரிசினி. எல்லாரும் ரொம்ப பிசி. நான் மட்டும் தான் அந்த வீட்டில் வெட்டி ஆபீசர். 
               சம்பவ தினத்தன்று , சித்தப்பு ஆபிஸ்க்கு கிளம்பிட்டார். யுனிபார்மை மாட்டிக்  கொண்டு கசின்சும் ஸ்கூலுக்குப் போயாச்சு. அவர்கள் போகும் வழியில் இருக்கும் அரிசிக் கடையில் வீட்டிற்கு அரிசிப் போட சொல்லிவிடும்படி சித்தி அவர்களிடம் காலையிலேயே சொல்லியிருந்தார்கள்.  'buf  கொண்டைக்கு ஊசி குத்தியபடி  சித்தி என்னிடம் ,"நேர போய் லெப்ட்ல திரும்பினா மளிகைக் கடை.. ..அங்க இந்த லிஸ்ட்ட குடுததுடு. அங்கிருந்து எதிர் சாரிக்கு வந்து பால் பூத்தை ஒட்டின சந்துல நேர போயி ரைட் எடுத்தா அரிசிக் கடை ஒண்ணு இருக்கும். நம்ப வீட்டு நம்பரை எழுதி தர்றேன்... அவங்ககிட்ட காமிச்சு 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா'ன்னு கேளு" என்றதும் ,'எவ்வளவோ செஞ்சுட்டோம் ...இதை செய்ய மாட்டோமா' என்று வீட்டு நம்பரை ஒரு தாளில் எழுதி எடுத்துக் கொண்டு  கிளம்பினேன்.
                 சாலையில் இறங்கினேன்.  'தொரகுனா இடுவண்டி சேவா' பாடல் எவர் வீட்டில் இருந்தோ கசிந்து கொண்டிருந்தது. அதை சட்டை செய்யாமல் மனது முழுக்க 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' என்று உருப்போட்டபடி மளிகைக் கடையை அடைந்து லிஸ்ட்டை விசிறியடித்து  விட்டு, அரிசிக் கடையை நோக்கிய என் இரண்டாம் கட்ட லட்சிய பயணத்தைத்  தொடர்ந்தேன். 
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                   என்று சிவாஜி மாதிரி, கமல் மாதிரி , ரஜினி மாதிரி  விதவிதமான மாடுலேஷனில் ஜெபித்துகொண்டே போய் என் இலக்கை அடைந்தேன். கடையில் செம கூட்டம். மனதுக்குள் 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' ரீல் ஓடியது.
சின்ன வயசில் அம்மா சொன்ன 'அத்திரிமாக்கு கொழக்கட்டை' கதை ஞாபகம் வந்தது.
                   கூட்டம் குறைந்ததும் அடிமேல் அடி வைத்து முன்னேறினேன்... 
                   காதில் பெரிய பெரிய கடுக்கன்களுடன், வெற்றிலையை குதப்பிக் கொண்டு அமர்ந்திருந்த முதலாளியை நெருங்கினேன்... அவருடைய சாதா பார்வையே முறைப்பது போல் இருந்தது.. கையில் தயாராக வைத்திருந்த தாளை உயர்த்திக் காண்பித்து தயங்கி, தயங்கி "வா ...ளு...   இன் ...டி...க்கு   பி. பீ... யம்    ப....ம்......பா .....லா   ...."என்று நாக்கு தடுக்கி, கண்கள் பிதுங்கி, தொண்டைக்குள் என் இதயம் சிக்கி சீரழிந்து, சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க இயலாமல் நான் தடுமாறி தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்த 'கடுக்கன்',தெலுங்கில் ஏதோ சொல்ல, நான், அம்பேல்  ஆனேன். ஆந்திரா முழுவதும் ராமராவ் 'கிருஷ்ண பரமாத்மா' வாக நிறைந்து  இருப்பார் போல...என் பக்கத்தில் நின்று கொண்டு என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பேற்பட்ட ஒரு 'கிருஷ்ண பரமாத்மா',"ரைஸ்  பேக் ' அல்ரெடி சென்ட் டு யுவர் ஹௌஸ்" ன்னு முதலாளி சொல்றாருப்பா." என்றார்.
                என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு குதித்தது  !!
                                
                                ***************
                         
                அடுத்த காரியமாக, பாலாஜி பப்ளிகேஷன்ஸின் '30 நாட்களில் தெலுங்கு' எங்கே கிடைக்கும் என்று தேடத் தொடங்கினேன்..

                                 **************
(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன்  குறையும்போது ரஜினி படத்தைப்          போட்டு சர்குலேஷனை  எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)

Monday, February 7, 2011

சமய சஞ்சீவி



                               சமய சஞ்சீவி(!)

                         தே மாதிரி ஒரு தை மாதம்தான் ....திருச்சிக்கருகில் ஒரு கோவில் கும்பாபிஷேகம்....என் நண்பனும் தூரத்து உறவினனுமான தங்கராஜிற்கு அந்த கும்பாபிஷேகத்திற்கு  'சவுண்ட் சிஸ்டம்' செய்ய காண்ட்ராக்ட் கிடைத்தது.. அவனுக்கு ஏற்கெனவே நாலைந்து அல்லக்கை அசிஸ்டன்ட்கள் இருந்தாலும் ராஜகோபுர ஸ்பாட்டிற்கு ஒரு ஆள் தேவையாய் இருந்தது.  அவன் போதாத காலம், அவனை என்னிடம் அழைத்து வந்து,"பரமசிவம்... துறு துறுன்னு வேலை செய்யற ஆள் எவனாச்சும் இருந்தா சொல்லேன்" என்று என்னிடம் சொல்ல வைத்தது.
                   நாமதான் அடுத்தவங்களுக்கு உதவறத்துக்குன்னே இந்த ஜன்மம் எடுத்து தொலைச்சிருக்கமே .... உடனே ," 'கொசு' மணின்னு எங்க ஆபிஸ்ல ஒரு ஆள் இருக்கான்.லீவு போட்டு வேண்ணா வரச் சொல்றேன்.ரேட்டு பேசிக்கோ " என்றேன்.

                    கும்பாபிஷேக தினம்.  கூட்டம் 'ஜே..ஜே' என்று அலை மோதுகிறது. முதலமைச்சரின் வருகையினால் மாவட்டம் முழுவதிற்கும்  சிறப்பு விடுப்பு வேறு. அக்கம்பக்கம் ஊர்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மற்ற  கோபுரங்களுக்கு அல்லக்கைகளை அனுப்பிவிட்டு , 'கொசு' மணி சகிதம் காலை ஐந்து மணிக்கெல்லாம் தங்கராஜ் ராஜகோபுரம் ஏறிவிட்டான்.
                     ராஜகோபுரத்துக்கு மூணு ஐயர்மார்கள்.பெரிசு பெரிசாய் நாமம் போட்டுக்கொண்டு ரெண்டு 'மைக்' கேட்டனராம். தங்கராஜ் 'மைக்'கை செட் பண்ண'கொசு' மணி கேபிள் இழுத்து ஆம்ப்ளிபயரில் கனெக்ஷன் கொடுத்திருக்கிறான். 'மைக்'கைக் கண்டதும் ஐயர்மார்கள், அவர்கள் கோஷத்தை ஆரம்பித்து விட்டனர். தங்கராஜ் மற்ற கோபுர அல்லக்கைகளுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை சரி பார்த்துகொண்டான்.
                     மணி ஆறாகிறது....ஏழாகிறது.... எட்டாகிறது.... வெயில் சுறு சுறுவென்று ஏற ஆரம்பித்தது .பத்தரைக்குத்தான் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. நேர்முக வர்ணனைக்கு ஒரு 'மைக்'கை ரெடி பண்ணும்போது தங்கராஜிற்கு தலைவலி ஆரம்பித்திருக்கிறது. பசியும் சேர்ந்து கொள்ளவே கொஞ்சம் தள்ளாட தொடங்கினான். போதாகுறைக்கு  'ஜிவ்'வென்று  வேத கோஷத்தை கணீரென்று   ஐயர்கள் ஓதத் துவங்கியதும் 'மல்டிபிள் டிஸார்டர்' அவனுக்கு ஆரம்பித்தது. 
                   "கொசு மணி  ..... பயங்கரமா தலை  வலிக்குதுப்பா.." என்று கூறியிருக்கிறான்.
                   "அண்ணே.. இங்கன ப்ளாஸ்க் ரொப்பி காபி இருக்குது...எடுத்தாரட்டா ?" என்று உதவும் கரங்களை நீட்டியிருக்கிறான், 'கொசு'மணி.
                   "காபியோட ஒரு சாரிடான் போட்டேன்னா தலைவலி ஓடிரும் 'கொசு' "
                   "இப்படி 200 அடிக்கு மேல நின்டுக்கிட்டு சாரிடான் கேட்டா எங்கண்ணே போறது?
                   "எதுனாச்சும் பண்ணு 'கொசு'மணி... தலைவலி மண்டயப் பொளக்குது"
                   வெயிலுக்குப்  போட்டிருந்த குல்லாயை எடுத்து தலையை சொறிந்தான், 'கொசு'மணி. தங்கராஜு படும் பாட்டை காண  சகிக்க முடியாமல் என்ன பண்ணலாம் என்ற யோசனையுடன் 'கொசு'மணி, கோபுர விளிம்பு வரை சென்று தன் தலையை ஒரு கையாலும், முகவாய்க்கட்டையை மறு கையாலும் சொறிந்தபடி யோசித்தான். கீழே இறங்கி போய் மாத்திரை வாங்கி மீண்டு வர முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. கீழே பார்த்தால் புள்ளி,புள்ளியாய் ஜனங்கள்...
                   "ஆஹா...'என்று துள்ளிக்குதிக்காத குறையாக "இப்ப ரெடி பண்ணிடறேன் அண்ணே" என்று உற்சாகமாக அலைந்த அவன் கண்கள் எதையோ தேடின.
                   எல்லாம் வினாடி நேரத்தில் ரெடி ஆகின. தலையில் தான் போட்டிருந்த தொப்பிக்குள் ' ஒரு சாரிடான் வாங்கி அனுப்பவும், ப்ளீஸ்' என்று எழுதி ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் அந்த தொப்பிக்குள் இட்டு ,சாரம் காட்டி மிச்சமிருந்த கப்பாணி  கயிறில் தொப்பியைக் கட்டி மெதுவாக கீழே இறக்கினான்.
                    இடையிடையே "அண்ணே... கொஞ்சம் பொறுத்துக்குங்க... சாரிடான் இதோ வந்திடும்" என்று துடித்துக்  கொண்டிருக்கும் தங்கராஜிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.
                     அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் புண்ணியவான் எவரோ செய்த உதவியால் சாரிடான் 'கொசு'மணியின் கைக்கு வந்து சேர்ந்தது. 'பிளாஸ்கை' சரித்து ஒரு பெரிய சொம்பில் காபி எடுத்துக் கொண்டு , தலையைப் பிடித்தபடி அமர்ந்திருக்கும் தங்கராஜிடம் போய் ,"அண்ணே, காபியும் சாரிடானும் ரெடி...இந்தாங்க" என்றான்.
                    சஞ்சீவி மலையை தூக்கி வந்த அனுமானை ராமன் கட்டிக்கொண்டது போல் ஆலிங்கனம் செய்ய முன் வந்தபடி, தங்கராஜ் "கொசு மணி ....நீ பெரிய ஆளுய்யா " என்று கூற ,
                    " அண்ணே... ஒரு நிமிஷம்... ஒரு பத்து ரூபா கொடுங்க.."என்றான், 'கொசு'மணி.
                    'கொசு'மணி ஏதோ விளையாடுவதாக எண்ணிய தங்கராஜ், "தர்றேம்ப்பா... முதல்ல மாத்திரையை கொடு"எனவும்,
                     "அண்ணே... காசைக் கொடுங்க.. மாத்திரையும் காபியும் உங்க கைக்கு வரும்" என்று கறாராகக் கூறியிருக்கிறான்.
                     "என்னப்பா ... அநியாயமா இருக்கு.. சாரிடான் ஒரு ரூபாய்தானே"
                     "ஒரு ரூபாய்தான்னே... ஆனா ,அதை இவ்வளவு உயரத்திற்கு, நீங்க கேட்ட பத்து நிமிஷத்துக்குள்ளே, என் மூளையை கசக்கி ,கொண்டு வந்தேன் இல்லே...அதுக்கான பீஸ்தான் எச்சாவா நான் கேக்குறது... பத்து ரூவாவ கொடுத்திட்டு சாரிடான் போட்டு காபி குடிங்க அண்ணே .... இந்த டயத்தில காசை பாக்காதிங்க" என்றான்.
                      வேறு வழி தெரியாததால் தங்கராஜும் அப்படியே செய்தான்.

                     கும்பாபிஷேகத்தை  எல்லாம் நல்லபடியாக முடித்து  , இத்தனை விஷயத்தையும் ஒரே மூச்சில் என்னிடம் சொன்ன தங்கராஜ் அந்த சம்பவத்திற்குப் பிறகு இது நாள் வரை என்னிடம் வேறு எந்த உதவியும் கேட்கவே இல்லை...

             ***********














        



Sunday, January 16, 2011

கொசுத் தொல்லை

                 கடி - 1
                  மீப கால சினிமா ஒன்றில் "இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்கிற வசனத்தைக் கேட்டிருப்பீர்கள். ரிஷி மூலம், நதி மூலம் என்பது போல் இந்த வசன மூலம் எது என்று பார்த்தால் அது எங்கள் பாக்டரிதான். இன்னும் சொல்லப் போனால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள்  பாக்டரியின் , எங்கள் ப்ளாண்டில் சாட்சாத் எங்கள் போர்மன்  திருவாயிலிருந்து உதிர்ந்த வாக்கியம்தான் ,"இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்பது.... இது எப்படியோ ,யார் மூலமோ அந்த காமெடி ட்ரேக் எழுதுபவர் காதிற்கு எட்டி அதை அவர்  'கபால்' என்று பிடித்துப் போட்டு காசு பார்த்து விட்டார்.
               என்ன , இந்த வசனம் என் அலுவலகத்தின் கைங்கர்யம்தான்  என்பதை என் நெருங்கிய நண்பர்கள், உறவின் முறையினர் ஒத்துக் கொண்டுவிட்டனர்... உங்களுக்கும் தெரிந்திருக்கட்டுமே என்பதால்தான் எழுதுகிறேன்...
                சரி...கதைக்குள் வருவோம்...இந்த கதையின் நாயகன் சுப்பிரமணியன்.....  I .T .I படித்து ,எங்கள் பாக்டரியில் சீனியர் டெக்னீஷியனாக 'வேலை பார்ப்பதாக' சொல்லிக் கொள்பவன். ஆள் நெடுநெடு என்று உயரமாய், கச்சலாய் இருப்பான்...கடினமான யூனிபார்மில் கொஞ்சம் பூசினாற்போலிருப்பான்...கண்கள் சதா அலை பாய்ந்து கொண்டே இருக்கும்... கமல்ஹாசன் மீசை  வைத்துக் கொள்ளும்போதெல்லாம் இவனும் மீசை  வைத்துக்  கொள்வான்...அவர் எடுத்தால் இவனும் எடுத்து விடுவான்...மற்றபடி, கொக்கு பறப்பதற்கு முன் ஒரு நடை நடக்குமே அது மாதிரித்தான் சுப்பிரமணியன், சாதாரணமாகவே  நடப்பான்.  நகரும்  பஸ்ஸை பிடிக்கும் அவசரம் அந்த நடையில் தெரியும்...
                  முன்பெல்லாம் அவனை 'கேயெஸ்'..'கேயெஸ்' என்று இனிஷியல் சொல்லித்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்...மூன்று வருஷத்திற்கு முன்னால் நடந்த யுனியன் எலெக்ஷனில் குதித்தபோது 'உங்கள் வைர வாக்குகளை தோழர் கொ.சு.மணிக்கு அளித்து இமாலய வெற்றி காண வைப்பீர்' என்ற வாசகங்களுடன்  ஜம்போ ப்ளேக்ஸ்யில் கம்பீர நடை பயின்று கொண்டிருந்தார் நம்ப தொரை..."டேய் நம்ப 'கேயெஸ்'டா" என்று அவனவனும் அடையாளம் கண்டுகொண்டு கூத்தாடினான்.எலெக்ஷன்ல  என்னமோ ஊத்திகிச்சுன்னாலும் அன்று முதல் எங்கள் பிளான்ட் தோழர் 'கேயெஸ்'ஸின் திருநாமம் 'கொசு மணி' என்று புனருத்தாரணம் ஆனது.
                நான் என்று மட்டுமில்லை ... பெரும்பாலோனோரும்  அவனுக்கு 'கேயெஸ்' என்ற சுருக்கப் பெயரை விட 'கொசு மணி' என்ற பெயரே மிகவும் பொருத்தமானது என்று கருதியதால் அந்த எலெக்ஷன் வந்தது ஒரு விதத்தில் நல்லதுதான் என்று உணர்ந்தோம் !
                   ஆனால் , தேர்தல் தோல்வியில் அவன் துவண்டு விடவில்லை...மாறாக கொசு மாதிரி 'சர்ட்'...சர்ட்' டென்று பறந்து கொண்டே இருந்தான்..உண்மையில் கொசு ஒரு புத்திசாலி ஜீவன். நாம் எளிதில் 'ரீச்' பண்ணமுடியாத நம் உடல் பிரதேசம் பார்த்து உட்கார்ந்து கடிக்கும். நாம் நின்று கொண்டிருந்தால் காலைப் பதம் பார்க்கும்... படுத்துக் கொண்டிருந்தால் முதுகில் தன் வாய்வரிசையை காண்பிக்கும் ... நாம் வளைந்து நெளிந்து அதை zero - in பண்ணி நெருங்குகையில் உறிஞ்ச வேண்டியதை உறிஞ்சிவிட்டு எஸ்கேப்..... வெறுமனே நம்மை நாமே அடித்துக் கொண்டு நம் கையை நாமே  பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்..
                  அதே போல்தான் நம்ப கொசு மணியும்... லேசில் சிக்காமல் பறப்பதில் கில்லாடி.. அப்படித்தான்  ஒரு நாள்............

                நான்  அப்போதுதான், நைட் ஷிப்டிற்கு வந்து என் சீட்டில் அமர்ந்தேன். உடனே போர்மேனிடமிருந்து போன்.
                "சார்,பரமசிவம் பேசறேன்" என்றேன்.
                "பரமசிவம் ,  அந்த கொசு மணி என்னய்யா நாலு மணிக்கெல்லாம் கிளம்பறான்...டூட்டி அஞ்சரை வரை உண்டுன்னு அவனுக்கு தெரியுமா..தெரியாதா?"
                "தெரியலியே சார்" -வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறாய் என்று என் உள்மனம் ஊளையிட்டது. 
                 "அவன் கிளம்பி வாசல்ல நிக்கிறப்போ கையும் களவுமா புடிச்சிப்பிட்டேன். எங்க கிளம்பியாச்சு?ன்னு கேக்குறேன்.. தெனாவெட்டா "ஊட்டுக்கு'ன்றான்....நான்தான், 'ரீவைண்டிங் போன ரெண்டு மோட்டார் சரியாகி வந்திருச்சு... ஓட்டிப் பாத்துட்டு போ'ன்னு  சொல்லி ப்ளான்ட்டுக்கு அனுப்பி இருக்கேன்.அவன லேசில விடாதையா...இன்னிக்கு அவன் ஓட்டிப் பாத்திட்டுத்தான் போகணும்..." என்றார்.
                 ஆஹா, கெரகம் பிடிச்சிடிச்சு....இன்னிய ஷிப்டு உருப்பட்டாமாதிரிதான்..
                 "சரி,சார்" என்றேன் அவசர அவசரமாய்..
          ***************
                 "என்ன சார் , அந்த எருமைத்தலையன் எதுவும் சொன்னானா?" -எருமைத்தலையர் ,என்று செல்லமாக மணியால் விளிக்கப்பட்டவர் எங்கள் போர்மன்.
                 "ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஓட்டிப் பாத்திட்டு அப்புறமா கிளம்புவியாம்" என்றேன்.
                "அந்தாள் என்னா சொன்னான்?" இது மணி. 'கொசு' மணி.
                 "ஒன்னை ஓட்டிப் பாத்திட்டு போகச்சொன்னார்" என்றேன்.
                 "இப்பிடியேத்தான் என் கையிலயும் அந்தாள் சொன்னான்...இனிமே நான் பாத்துக்கிறேன்" என்றபடி ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஒரு மோசமான 'லுக்' விட்டான், கொசு மணி. என்னைப் பார்த்து,"ஒரு 'தம்'மடிச்சிட்டு, அப்டியே ஒரு டீ குடிச்சிட்டு  வந்திடறேன், சார் " என்று சொல்லி நகர்ந்தான்.
                  நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. ஆளைக் காணவில்லை. நான் எனது மற்ற வேலைகளில் கவனம் செலுத்த, இரவு ஏழு மணி போல் வந்து சேர்ந்தான்.
                  " என்ன மணி, மோட்டாரப் பாக்கலியா?" என்றேன்.
                  "அதுக்குத்தான் டூல்செல்லாம்  எடுத்திட்டு வந்தேன் சார்" என்றபடி ஒவ்வொரு மோட்டாரையும் தகுந்த இடைவெளி கொடுத்து நகர்த்தினான். அவை பழைய  மோட்டார்கள் . ரீவைண்ட் செய்து பெயிண்ட் அடித்து அனுப்பியிருந்தனர்.    ஒரு பார்வைக்கு 'சௌகார்'ஜானகிக்கு 'பேசியல்'  செய்து லிப்ஸ்டிக் அடித்தது போல் சமர்த்தாக இருந்தன அவை.
                   மணி,மோட்டாரின் அச்சைப் பிடித்து சுற்றினான். பிறகு.. சப்ளை  கொடுத்து  
ஓட விட்டான். ரெண்டு மோட்டாரும் பதிவிசாக ,புக்ககம் வந்த புது நாட்டுப்பெண்ணைப் போல் சப்தமில்லாமல் இயங்கின.
                  அரை மணிக்கொருதரம் அவறிற்கு ஜுரம் அடிக்கிறதா என்கிற ரீதியில் தொட்டு,தொட்டுப் பார்த்தான்.'பேரிங்' சவுண்ட் இல்லாமல் ஓடுகிறதா என்று  நீளமான திருப்புளியை மோட்டாரில் வைத்து மறுபக்கம் காதை வைத்து செக் பண்ணினான். ஓடிக்கொண்டிருந்த இரண்டு மோட்டாரையும் நவகிரகம் சுற்றுவது போல சுற்றி சுற்றி வந்தான், மணி.
                  ஒன்பது  மணி போல வேலை முடிந்து எல்லாவற்றையும் 'பேக்கப்' செய்து விட்டு என்னிடம் வந்தான்."சார் ரெண்டு மோட்டாரும் நல்லாத்தான் ஓடுது....டெஸ்ட் பண்ணிட்டேன்... ஒரு 'தம்' மடிச்சிட்டு வர்றேன்" என்றான் கொசு மணி.
                  "ஏன், மணி கிளம்பலியா வீட்டுக்கு?" என்றேன் நான்.
                  "அதெப்படி சார் ... ஓட்டிப் பாத்திட்டு போக சொன்னத்துக்கப்புறம்.....பாக்காம போனா என்னா மருவாதி சார்?" என்றான்.
                  "அதுதான் ஓட்டி பாத்திடியே மணி" என்றேன்.
                  "எங்கே சார் ஓட்டிப் பாத்து முடிச்சேன்... இப்பதான்  ஓட்டிப் பாத்திக்கிட்டு இருக்கேன் சார்....ஓட்டின்னா 'ஓவர் டைம்'" என்று விளக்கம் அளித்தான்.
                            **************
                    மறு நாள் போர்மன் ரூமில் ஒரே சத்தம்."எந்த முட்டாள் உன்னை 'ஓவர் டைம்' பாக்கச்சொன்னான்?" என்று மணியிடம் போர்மன் 'லபோ திபோ' என்று காட்டு கத்தல் போட்டார்.
                    "நீங்கதானே சார் நேத்து என்னை ஓட்டிப் பாத்துட்டு போக சொன்னீங்க " என்று படு பவ்யமாக கூறியிருக்கிறான்.
                     என்னிடம் விசாரித்தார், போர்மன். நானும் "நீங்கதானே அவனை ஓட்டிப் பாத்திட்டுப் போகச் சொன்னீங்க.." என்றேன் நமட்டு சிரிப்புடன்.
                      " யோவ்... நான் மோட்டாரத்தான் ஓட்டிபாக்க சொன்னேன்..இவனை ஓவர்டைம் பாக்க சொல்லலே.."
                      "எதையும் கிளியரா புரியறா மாதிரி , குளப்பமில்லாம சொல்ல கத்துக்குங்க"என்று சொல்லிவிட்டு "ம்ம் ம்ம் ...ஓ.டி ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போடுங்க" என்று வந்த காரியத்தை முடித்துக் கொண்டு அவன் கிளம்பிப் போனதை ஊர்ஜிதப் படுத்தி விட்டு  எங்கள் போர்மேன் உதிர்த்த வாக்கியம்தான் ,"யோவ்...இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலியே..." என்பது...


           (கடிகள் தொடரும் )




                  
                


Monday, January 10, 2011

Swami Vivekananda Speech at Chicago - Welcome Address

ஜனவரி 12 --சுவாமி விவேகானந்தாவின் ஜன்ம தினம் ... அவருடைய கம்பீரக் குரலைக் கேட்போம் ,வாருங்கள்..

Sunday, January 2, 2011

சங்கீத சீசன் 
            திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்த நாட்கள் எம் வாழ்வின் மறக்கவொண்ணாத இனிய நிகழ்வு....எத்தனையோ கச்சேரிகளை இசைப்பதிவு செய்யும் பாக்கியம் கிடைத்தது...மனம் நிறைந்த சந்தோஷத்துடன் குதூகலமாக பதிவு செய்த கச்சேரிகள் இன்றும் AIR -இன் இசைக் கருவூலத்தில் உள்ளன.
                  இசை விற்பன்னர்கள் மேடையேறி அமர்ந்ததும் எங்கள் எல்லோர்க்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அவர்கள் ஸ்ருதியை சரிபார்க்கிற நேரத்திற்குள் நாங்கள் balancing  செய்ய தயாராக இருக்க வேண்டும். ரசிகாசைப் பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்து விட்டு அவர்கள் இசைக்கத் துவங்கும்போது balancing  பணி ஆரம்பிக்கும். அதாகப்பட்டது ,அந்த மேடையை அலங்கரிக்கும்  எல்லா கலைஞர்களின் குரல் மற்றும்  வாத்தியங்களின் ஒலி அளவை  amplifier  -இல்  தேவைக்கேற்ப கூட்டி, குறைத்து ரம்யமான இசையைக் காற்றில் தவழ விடும் ரசவாதம். கொஞ்சம் பிசகினாலும் எவரும்  ரசிக்க முடியாது.
                 எனக்கு இந்த வேலை சுலபமாக இருந்ததற்கு காரணம் இசை மீதான என் பிரத்யேக காதல். அனுபவித்து balancing   -ஐ முடித்து விட்டு மேடையை அலங்கரிக்கும் அந்த இசை மேதையை கிடைத்த பேப்பரில்  வரைந்து 'தனி' நேரத்தின்போது அவரிடம் ஆட்டோக்ராப் வாங்கி விடுவேன்....  அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் வரையப்பட்ட சில ஓவியங்கள் இந்த வாரம் உங்களின் பார்வைக்கு...


                   27 .04 .1981 அன்று குன்னக்குடி திரு. வைத்யநாதன் அவர்களின் கச்சேரி. தன் மோகன சிரிப்பை சிந்தியபடி வியப்பில் தன் கண்களை அகல விரித்து ,"ஆஹா ... என்னை படமா வரைஞ்சுட்டேளா?  பேஷ்" என்றபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.




                      திருவாரூரில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் விழாவில் மண்டலின் வாசித்த U  சீனிவாஸ் ஒரு பால் வடியும் முகம் கொண்ட குழந்தை  ... 89 -ம் வருடம்.



                    1993 -ம் வருடம் திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.. அந்த பாசம் மிகுந்த சகோதரியின் அறிவுத்திறனையும், பேச்சுதிறனையும் அருகிருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.வாய் நிறைய எனை 'லக்ஷ்மிநாராயணன்' என்று அழைத்து அன்பு பாராட்டிய பெருந்தகை .




                    மார்ச் மாதம்..... 1989  -ம் வருடம் . மிகவும் சாஸ்த்ரீயமாய் வாசித்துக் கொண்டிருந்தார் லால்குடி திரு.ஜெயராமன். கையெழுத்தில் தன் பங்கிற்கு வயலினை வரைந்து விட்டு 'இது எப்படி இருக்கு ?' என்ற பாணியில் என்னைப் பார்த்து முறுவலித்தார்.





                     திருவாரூர் கச்சேரி... சாயந்திரம்  ஆறு மணிக்கு...மூணே முக்காலுக்கெல்லாம் 'வேகு வேகென்று' தனது வாத்திய பெட்டி சகிதம் பந்தலுக்குள் நுழைகிறார், அந்த கலைஞர். ஒரு சேரில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது... அட.. இது கத்ரி அல்லவா...ஓடோடிச்சென்று வரவேற்கிறேன்.."எனக்கு ஒரு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கணும்... கொஞ்சம் ஏற்பாடு பண்ண முடியுமா?" என்று மிக பணிவுடன் கேட்ட அந்த மாமேதையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. காரியதரிசிஇடத்து  கூட்டிச் சென்று  அவருக்கு உதவ முடிந்ததது.
                    வழக்கம் போல் 'தனி ஆவர்த்தனத்தின்' போது அவருடைய படத்தை நீட்டி ஆட்டோக்ராப் கேட்டபோது  "ஓ ...நீங்களா?"என்று என்னையும் நினைவில் வைத்து கேட்டு , கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.



என்ன தவம் செய்தேனோ !!