முற்பகல் செய்யின்....
"நறுக்கின வெங்காயம் போதும் ...அது அப்படியே இருக்கட்டும் மூணு மொளகா வத்தலையும் பூண்டையும் மிக்சியில போட்டு நல்ல மையா அரைச்சு வை. நான் அதுக்குள்ளே சிக்கன கிளீன் பண்ணிடறேன்"
"சிக்கன டிரஸ் பண்ணித்தானே வாங்கி வந்தீங்க?"
"என்னாதான் அவங்க பண்ணிக் கொடுத்தாலும் நாம ஒரு தரம் கிளீன் பண்ணினாத்தான் எனக்கு திருப்தி"
"அமெரிக்கா பிள்ளை வர்ரான்னா நாலு தடவை கூட கிளீன் பண்ணுவீங்க சாமி.."
"ஏய்..இந்த கிண்டல்தானே வேணாங்கிறது ...அருண் வந்தாலும் சரி... இல்லேன்னாலும் சரி... நான் ரெண்டுவாட்டியாவது கிளீன் பண்ணிட்டுத்தான் சில்லி ப்ரை பண்ணுவேன்"
"எங்கப்பாவுக்கும் சில்லி ப்ரைன்னா ரொம்பப் பிடிக்கும்....தாத்தா மாதிரியே பேரனும் எப்பப் பாத்தாலும் 'சில்லி ப்ரை,சில்லி ப்ரை'ன்னு கேக்கறான்"
"மிக்சியில அரைக்க சொன்னேனே .... அரைச்சிட்டியா? அப்பாவுக்குப் பிடிக்கும் ...ஆத்தாவுக்குப் பிடிக்கும்னுட்டு"
"எங்கப்பா பத்தி சொன்னதும் ஏன் இப்படி 'சுர்ர்ர்ர்'ன்னு வருது?"
"உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லியோ... என்னால மறக்க முடியுமா, காமாட்சி?"
"அடாடா ... ஆரம்பிச்சிட்டீங்களா ஒங்க புராணத்தே...எங்கப்பாவ எதுனாச்சும் சொல்லாட்டா உங்களுக்கு பொழுதே போகாது சாமி"
"சரி..சரி ... அரைச்சிட்டியா...அதை இப்படி வெச்சிட்டு நாலு தக்காளியே அரிஞ்சு வை"
பேசிக் கொண்டே சுந்தரம் , சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டார். "உங்கப்பாவ நான் ரொம்ப மதிக்கிறேன்.. இல்லேன்னு சொல்லலே...ஆனாலும் அன்னைக்கு எக்மோர் ரயிலடியில சொன்னாரு பாரு... என்னதான் எங்கம்மா உன்னைய கொடும படுத்தினதாகவே இருக்கட்டும் ...உன்ன ஊருக்குக் கூட்டிட்டுப் போகும் போது ,'மாப்பிள்ளே ,எம் பொண்ண கண்ணுக்கு கண்ணா வளத்தேன்...அது கலங்கி நிக்குது... உங்கம்மா தன்னோட மருமகனு நினைக்க வேண்டாம்... தாயில்லாப் பிள்ளைன்னாவது நினைக்க வேண்டாமா? இப்படி வாய்க்கு வந்தபடி பேசலாமா? உங்கம்மாதான் சொல்றாங்கன்னா நீங்களாவது கொஞ்சம் அனுசரணையா இருக்கக் கூடாதா ? ம்..ம்ம்.....உங்களுக்கு ஒரு பொட்டப் பிள்ள பிறந்து அதக் கட்டிக் கொடுக்கும்போதுதான் என்னோட வலி உங்களுக்குப் புரியும்'ங்கிறார்"
"அப்பா அப்ப சொன்னதுதான் நடக்காம போயிடிச்சே...அப்புறம் அவருப் பேச்சு என்னத்துக்குங்க?"
சுந்தரம், வெட்டிய சிக்கன் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்துப் பிசைந்து பாத்திரத்தின் மேல், தட்டைப் போட்டு மூடினார்."அதான் சிங்கக் குட்டி போல நமக்கு அருண் பிறந்தவுடனே , அந்த சம்பவத்த மறக்க நினைக்கேன்.முடியல"
"சிங்கக் குட்டி..சிங்கக் குட்டின்னு செல்லமாத்தான் வளத்தோம் ...என்னாச்சு. நாலெழுத்துப் படிச்சுப் பெரிய ஆளா ஆனதும் ,அமெரிக்காப் போறேன்'ன்னு போனான்... கை நிறையா சம்பளம் வந்ததும் , சிங்கக் குட்டிக்கு தல கால் புரியல...கூட வேலைப் பாக்கிறப் பொண்ண கட்டிக்கிறேன்'னான்"
"சேர்ந்து வாழப் போறவன் அவன்... அவன் சந்தோஷம்தான் நம்ம சந்தோசம். இந்த மட்டும் நம்ம நாட்டுப் பொண்ணா பாத்து வெச்சானே..அதை நினைச்சு சந்தோஷப்படுவியா"
"என்னதான் நம்ம நாட்டுப் பொண்ணுன்னு நீங்க சமாதானம் சொன்னாலும் கன்னடப் பொண்ணு கன்னடப் பொண்ணுதான்... நம்ம தமிழ்ப் பொண்ணு தமிழ்ப் பொண்ணுதான்"
"சரி.. நடந்தது நடந்து போச்சு... அருண் வர்ற நேரம் ஆச்சு... அவன்கிட்ட இது மாதிரிப் பேசி அவன் மூட அப்செட் பண்ணிடாதே ,காமாட்சி.... புள்ள நாளைக்கு ப்ளைட்டப் பிடிச்சு அமெரிக்கப் போறான்... நல்லபடியா போய்ச் சேரணும்"
அருணை நினைத்து பெருமைதான் சுந்தரத்துக்கும், காமாட்சிக்கும். ஆனாலும் ,அவன் 'வர்ஷாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்' என்று பிடிவாதம் பிடித்ததில் லேசாய் வருத்தம். ஆனால் , வர்ஷாவின் அழகும், படிப்பும், சம்பளமும்,சமர்த்துதனமும் பெற்றவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் , பெரிதாய் அங்கலாய்த்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போயினர்.
என்னதான் பர்கர்,பீட்சா என்று அமெரிக்காவில் சாப்பிட்டு பழகினாலும் அருணுக்கு அப்பா செய்த சிக்கன் சில்லி ப்ரை என்றால்அத்தனை இஷ்டம். சுந்தரமும் சளைக்காமல் அவன் வரும்போதெல்லாம் செய்து கொடுத்து சாப்பிட வைத்து சந்தோஷப்படுவார்.
அரை மணி நேரம் தாண்டி அருண் காலிங் பெல்லை அழுத்தியவுடன் ,காமாட்சி ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்.
"வாப்பா அருண்....என்ன வர்ஷா வரலியா?"
"இல்லம்மா" என்றபடி வீட்டிற்குள் வந்த அருணை, சுந்தரம் கட்டிக் கொண்டார். "நீ இந்தியாவுக்கு வந்து 5 நாளாயிடிச்சு...இப்பத்தான் அப்பாவைப் பாக்கணும்,அம்மாவைப் பாக்கணும்னு தோணிச்சா, அருண்?" என்றார் ,வாஞ்சையுடன்.
"அதில்லப்பா... பெங்களூர்ல ஒரு ஆபிஸ் வேலையை வச்சிக்கிட்டுத்தான் வந்தேன்... வர்ஷாவுக்கும் நல்ல வேளையா லீவு கிடைக்கவும் அவ பேரண்ட்சோட இருக்கிறேன்னு சொன்னா. என்னோட ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நாளைக்கு யு.எஸ். கிளம்பணும். அதுக்கு முன்னாடி உங்களைப் பாத்துட்டு ,உங்க ஆசிகளோட புறப்படலாம்னு வந்தேன்ப்பா"
அருண் கல்யாணமாகிப் போய் , 6 மாதம் கழித்து இப்போதுதான் வருவதால் அவர்களுக்கிடையே பேச நிறைய விஷயங்கள் இருந்தன. பேசினார்கள்.
பேசிக்கொண்டே , சுந்தரம் மசாலா தடவிய சிக்கனை நன்றாக வேக வைத்து இறக்கி, வடிகட்டி, சுத்தமான நெய்யில் பொரித்தேடுத்தார். மற்றொரு சட்டியில் அரிந்த வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கி எடுத்து , பொறித்த சிக்கனுடன் கலக்க அருணுக்குப் பிடித்தமான சிக்கன் சில்லி ப்ரை தயாரானது.
ரொம்ப நாட்களுக்கு அப்புறம் மூன்று பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டதில் பெற்றோருக்கும், மகனுக்கும் மிகுந்த திருப்தி.
அன்று மாலை சுந்தரத்தையும், காமாட்சியையும் தன் காரிலேற்றிக் கொண்டு மயிலை, திருவல்லிக்கேணி கோவிலுக்கு கூட்டிப் போனான். இரவு டின்னருக்காக சரவணபவன் a c ரூமில் உட்கார்ந்திருந்தபோது வர்ஷாவிடமிருந்து போன் வந்தது.
"உம்....உம் ....ம்.. வர்றேன்...வர்றேன்...சென்னைக்கு வந்து முழுசா எட்டு மணி நேரம் கூட ஆகல... அப்பா.. அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கேன்... நாளைக்கு நைட்டுதானே ப்ளைட்டு? வர்றேன்...வர்றேன்" என்றான்.
"என்னப்பா?" என்றார் சுந்தரம்.
"இல்லப்பா... நாளைக்கு பெங்களுர்ல ஏதோ 'பந்தா'ம் ... இன்னைக்கு நைட்டே கிளம்பி வந்துடுன்னு வர்ஷா சொல்றா..."
காமாட்சிக்கு மளுக்கென்று கண்களில் நீர் ததும்பியது.... "உடனே கிளம்பணுமா அருண்?" என்றாள்.
"ஒண்ணும் ஆகிடாதும்மா .... நாளைக்கு மதியத்திற்கு மேல கிளம்பினா போதும்...அஞ்சு மணி நேரத்தில பெங்களூர் போயிடலாம்... வர்ஷாவோட அம்மா எதனாச்சும் பயமுறுத்தியிருப்பாங்க.... உடனே இவளும் 'சீக்கிரமா கிளம்பி வா'ங்கிறா"
சாப்பிட்டு வீடு திரும்புவதற்குள் மூன்று போன் வந்து விட்டது...சுந்தரமே வர்ஷாவின் அம்மாவிடம் பேசினார்..."அருண் ஒண்ணும் சின்ன பாப்பா இல்ல... அவன் ஜாக்கிரதையா வந்து சேர்வான்" என்று சொல்லிப் பார்த்தார்."நாளே பேடா ...ஈவத்து நைட்டே பந்துபிட ஹேளி" என்றாள் வர்ஷாவின் அம்மா கொஞ்சம் கர்ண கடூரமாய் ,கன்னடாவில்...
'என்ன சொல்றாங்கன்னே புரியலப்பா... நீ கிளம்பறதுன்னா கிளம்பு அருண்" என்ற சுந்தரத்தின் குரல் கம்மியது.
"ஒண்ணும் ஆகிடாதுப்பா.... நான் நாளைக்கே போறேன்..."
"வேண்டாம் அருண்...ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா ..என்னா பண்றது...வர்ஷா சொல்ற மாதிரி இப்பவே கிளம்பு...நாளைக்கு பகல் முழுசும் போன்லையே எங்களோட பேசிக்கிட்டிரு " என்றாள் காமாட்சி அரை மனதுடன்.
அவன், பாழாய்ப்போன 'பந்த்'தை சபித்துக் கொண்டே கிளம்பினான்..வர்ஷாவும் அவள் அம்மாவும் அனாவசியமாக கவலைப்பட்டு , தன்னைப் பெற்றவர்களுடன் இருக்க விடாமல் அவசரப்படுத்துவதின் மூர்க்கத்தையும் சபித்தான். சாயந்திரம் 6 மணிக்கு 'பந்த்' முடியப்போகிறது. இவன் சென்னையை விட்டு நாளை மதியம் கிளம்பினாலும் மாலை 'பந்த்' முடிந்ததும் பெங்களுர் அடைந்து விடலாம்.. இரவுதான் பிளைட் .... ஏன்தான் மாமியாரும் வர்ஷாவும் சேர்ந்துகொண்டு இப்படி ஓர் இக்கட்டான நெருக்கடியைத் தருகிறார்களோ என்று அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது, அருணுக்கு.
"அடுத்த தரம் வரும்போது ஆபிஸ் வேலையோட வராதேப்பா....எங்களுக்காக லீவு போட்டுட்டு வா" என்றார் சுந்தரம்.
வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த சுந்தரத்திற்கும் காமாட்சிக்கும் மனசு இற்றுப் போனது.... பிள்ளை வருவான்..பிள்ளை வருவான்.. என்று ஆசை ஆசையாக காத்திருந்தது இந்த எட்டு மணி நேரத்தை கொண்டாடத்தானா? இனி எப்போது வரப் போகிறான்... எப்போது மீண்டும் அவனை மடியில் படுக்க வைத்துக் கொண்டு தலை கோதி அவனோடு பேசப் போகிறோம்?' என்ற அங்கலாய்ப்பே அவர்களுள் மிஞ்சியது.
ஆனால், சுந்தரத்திற்கு மட்டும் 'ஆண் பிள்ளை ஆனாலும் , பெண் பிள்ளை ஆனாலும் கட்டிக் கொடுத்துவிட்டோம்' என்றால் இப்படிப் பட்ட வலிகளை எல்லாம் அனுபவித்துதான் தீர வேண்டும் போலிருக்கிறது என்று உறைக்க ஆரம்பித்தது. சுந்தரத்தின் நினவு விஸ்தீரணத்திற்குள் அவருடைய மாமனார் வந்துவிட்டுப் போனார். தன்னைப் பார்த்து அவர் ஏளனமாக சிரிப்பது போலவும் இருந்தது சுந்தரத்திற்கு.
****************