மாமா......சாமா.......பாமா.....
(முன் எச்சரிக்கை: படிச்சே ஆகணும்...ஆமா)
யாராவது ஒருத்தரைப் பாராட்டணும்னா எங்க காலத்தில எல்லாம் ஜோரா கைதட்டுவோம்...இல்லேன்னா ‘சபாஷ்’னு முதுகுல ஒரு ஷொட்டு கொடுப்போம்..கான்வென்ட்ல படிச்சிருந்த ஆக புத்திசாலிகளா இருந்தா ‘ஹிப்ஹிப்ஹுர்ரே’னு கத்துவோம்.
ஆனா, இந்த காலத்திலே... ஆம்பள,பொம்பள வித்தியாசம் இல்லாம எல்லாம் சேர்ந்துண்டு விசில் அடிக்குதுகள்.’தையா..தக்கா’ன்னு ஆடறதுகள்.இல்லேன்னா ‘ஓ’போடு’ ங்கிறதுகள்.. போதாகுறைக்கு ‘ஓ..போடு....ஓ .போடு”ன்னு ஒரு கண்றாவிப் பாட்டு வேற....
காலேஜ் லீவ் விட்டாச்சா? ‘ஓ’போடு’.....
லெக்சரர் சூடிதார்ல வந்தாளா... ‘ஓ’போடு’....
கேண்டீன் சாம்பார்ல கரப்பான்பூச்சி மிதந்ததா ... ‘ஓ’போடு’.
என்னமோப்பா...எனக்கு இந்த காலத்து பசங்களோட, கிஞ்சித்தும் ஒத்துப்போகவே முடியலே.. ஹ்ம்ம்ம்...சாம்பார்ல கரப்பான்பூச்சின்னதும் எனக்கு நம்ப சாமா - பாமா பத்தின நினைப்புதான் வர்றது.
சாமா என்கிற சாமினாதன்.....கல்யாணத்துக்கு முன்னாடி சர்யான அசட்டு அம்மாஞ்சியா இருந்தவன், பாமா என்கிற சத்யபாமாவை கைபுடிச்சதுக்கபுறம் கெட்டிச்சமத்தா ஆயிட்டான்.....தானும் இந்த மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டமேன்னு சாமாவுக்கு மனசு கொள்ளாத சந்தோஷம்.அதனாலேயே அவனுக்கு ஆம்படையாகிட்ட கொள்ளை ப்ரியம். ’பாமா..பாமா’ன்னு அவ முந்தானையப் புடிச்சுண்டே சதா சுத்துவன். அந்த பதிவிரதாசிரோன்மணியும் அவனை இடுப்பில தூக்கி வச்சிக்காத குறைதான்...ஒரு கொழந்தையைப் பாத்துக்கறா மாதிரி அப்படி பாத்துப்போ. இவா ரெண்டு பேரோட அன்னியோன்யத்தைப் பாத்து பாத்து புளகாங்கிதப்படற நாலைந்து ஜனங்கள்ல நானும் ஒருத்தன்.
இப்ப , ஆரம்பிச்ச கதைக்கு வாங்கோ... ‘ஓ’போடுங்கிறதைப் பத்தி விசாலமாப் பேசினோமே...இவா ரெண்டு பேருக்கும் முன்னாடி ’ஓ’ போட்டுப் பாருமேன்...’ஓ’சாமா.....’ஓ’பாமா..ன்னு சொன்னா அபத்தமாக அல்லவா ஆகிடும்.... ஒசாமாவும்,ஒபாமாவும் ஒருத்தொருக்கொருத்தர் எலியும் பூனையுமா இருந்து, யார், யாரை முதல்ல காலி பண்றதுன்னு காத்திண்டு இருந்தா. ஆனா, நம்ப பாமாவும் சாமாவும் அன்புக்கு அடையாளம்...... ப்ரேமைக்கு அடையாளம்....நல்ல தாம்பத்யத்துக்கு அடையாளம்.. அதுக்காக வேணும்னா அவாளுக்கு நாம ‘ஓ’போடலாம்.
நானும்,என் மனைவிசுப்புலக்ஷ்மியும் ஆண்டார்தெருவுக்கு ஜாகை மாத்திண்டு வந்ததுக்கப்புறம்தான் சாமா பரிச்சயம் ஆனான். சாமாவோடு வம்பு பேசறதுதான், ரிடையர்டான எனக்கு நல்ல பொழுதுபோக்கு. தெருவுல யார்யார் இருக்கா,என்ன பேரு,என்ன உத்தியோகம்கிற விபரங்கள் மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களை நான் சாமாவிடமிருந்துதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அவ்வப்போது என் மனைவி எங்கள் நாட்டுப்பெண்களின் பிரசவம் பார்க்க யு.எஸ். போகும்போதெல்லாம் சாமாதான் எனக்கு எடுபிடியாக எல்லா உதவியும் முகம் சுளிக்காமல் செய்வான்.ஒரு விஷயம் சொல்லட்டுமா...? அவனுக்கு சத்யபாமாவைப் பார்த்துவைத்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தவனே நான்தான்.
சத்யபாமா நன்றாக சமைப்பள். விதம்,விதமாக சாதம் கலப்பதில் கெட்டிக்காரி. சாமாவுக்கு நிரந்தரமாக வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் அவனிடம் ஒரு யோஜனை சொன்னேன்.”நோக்கோ சைக்கிள் ஓட்டத் தெரியும்... பாமாட்ட சொல்லி 5 பாக்கெட் புளிசாதம், 5 பாக்கெட் லெமன் சாதம், 5 பாக்கெட் கல்கண்டு சாதம், அதே மாதிரி தயிர் சாதம்னு கட்டிண்டு போயி பாக்கெட் பத்து ரூபாய்னு நம்ப கோர்ட் வாசல்ல வித்துப் பாரு...ஒரே வாரத்திலெ 5 பாக்கெட் பத்து பாக்கெட்டாகும்....பிசினெஸ் பிச்சிக்கும்” என்றேன். அப்படி நான் சொன்னபடியே நடந்ததும் ரெண்டு பேருக்கும் என் மேல அசாத்திய மரியாதை வந்துடுத்து. ‘கணேச மாமா எங்கள வாழ வைக்கிற தெய்வம்’னு ஊர் பூரா சொல்லிண்டிருக்குகள்.
அவா சின்னதா ஒரு மெஸ் ஆரமிச்சதுக்கும் அடியேன்தான் காரணி. ரெண்டு ஆளுக்கு சம்பளம் கொடுத்து மெஸ்ஸை நடத்தினாங்கன்னா அதுக்கு சாமா, பாமாவோட அற்புதமான உழைப்பும், பாமாவோட சமர்த்தும், சாமர்த்தியமும்தான் காரணம். மெஸ் வெச்சதுல அவாளோடல வாழ்க்கைத்தரம் லேசாதான் உசந்தது. வசதியா வாழறதுக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது. என்ற போதிலும் ரெண்டு பேர்கிட்டயும் கிஞ்சித்தும் அந்த அன்னியோன்னியம் குறையவேயில்லை.
ஒரு நாள் எனக்கு கிடச்ச ஒரு தகவலை சாமாகிட்ட சொல்லலாம்னு மெஸ்ஸுக்குப் போறேன். நல்ல மத்தியான வேளை. சாமா குஷி மூடில இருந்திருக்கவேணும்...குஷி மூடிலதான், அவன் தன்னோட கீச்சுக் குரல்ல பாடுவான்... அன்னிக்கு நான் அவன் மெஸ் வாசல்ல நிக்கறேன்...” அந்த சீரங்கத்தில் பல்லி கொல்கின்றவன்’ன்னுட்டு ’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாட்டை துவம்சம் செய்து உச்சஸ்தாயில, கீச்சுக் குரல்ல சாமா பாடிண்டிருக்கான். பாமா அவன் பக்கத்தில உக்காந்திண்டு அவன் தலையில குட்டிண்டே “ள்”னு - சொல்லுங்கோ....நாக்கை மடிச்சு ‘ள்’ சொல்லுங்கோ”ன்னு பாடம் நடத்தறா... எனக்கா சிரிப்பை அடக்க முடியல... என்னப் பாத்ததும் ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரியா ஆயிடுத்து... “தோ பாருங்கோ மாமா... பல்லி கொல்கின்றவன்’ன்னு பெருமாள அபச்சாரம் பண்ணி பல்லியையும் கொல்றார்...பாட்டையும் கொல்றார் இவர்” என்றாள், பாமா.
நான் போன விஷயத்தை இருவரிடமும் சொன்னேன். “அப்படியா ?” என்று வாய் பிளந்து கேட்டனர் இருவரும். வேறொன்றுமில்லை.
’தில்லைநகர் பக்கம் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்க உள்ளது. சுமார் அறுபது பேர் வேலை பார்க்கப்போகிறார்கள். அவர்களுக்கு காலை டிஃபன், காஃபி, மதியம் லஞ்ச், சாயங்காலம் டிஃபன், காஃபி, டீ இதெல்லாம் அவாளோட கேண்டீன்ல தயார் பண்ணிக் கொடுக்க ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் ஆளா தேடிண்டிருக்கா. நல்ல தரமாகவும், டேஸ்டாகவும் இருக்கணும்கிறதுதான் ஒரே கண்டீஷன்..மாசத்துக்கு 2 லட்சம் புரளும்’ன்னேன். ’அவா நாலஞ்சு சமையல் காண்ட்ராக்டர பாத்திருக்காளாம். உன் பேரையும் சொல்லியிருக்கேன்....இங்கேயும் அவா வரலாம்....உன் மெஸ்ஸுலயும் வந்து சாப்பிட்டுப் பாக்கலாம்’ன்னு சொன்னேன்.
“மாமா, எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கோ....எங்களுக்கே அந்த ஆர்டர் கிடைக்கணும்னு வாழ்த்துங்கோ”ன்னுட்டு சாமாவையும் இழுத்துப் போட்டுண்டு என் கால்ல விழறா, பாமா. முன்னேறணும்கிற ஆர்வம் அசாத்தியமா உள்ள பொண்ணு.....ம்ம்..ம்ம் ... எழுந்து நின்ன ரெண்டு பேர் கண்ணிலேர்ந்தும் தாரைதாரையா ஜலம் கொட்டறது.
கம்பெனியிலிருந்து பரமேஸ்வரப்பா என்ற கன்னடியர் வந்தார். இன்னொவாவில் வந்து இறங்கியவரை நான் அழைத்துக்கொண்டு மெஸ்ஸிற்குப் போனேன்.
சாமாவுக்கும்,பாமாவுக்கும் கையும் காலும் ஓடவில்லை. பரபரக்கிறார்கள். இருவர்க்கும் வேர்த்துக் கொட்டுகிறது. எனக்கு கன்னடா நன்றாக பேச வருமாதலால் பரமேஸ்வரப்பாவை கவனித்துக் கொண்டேன்.
பாமா சமைத்துவைத்திருந்த ஐட்டங்களை அமரிக்கையாக டேஸ்ட் பார்த்த பரமேஸ்வரப்பா “ஊட்டா ரெடியந்த்ரே தின்னு நோடானா”(சாப்பாடு ரெடின்னா சாப்பிட்டுப் பார்க்கிறேனே) என்றார்.
கடப்பைக் கல் பதித்த டேபிளை நல்லாத் துடைச்சு, பெரிய தலைவாழை இலை போட்டு பாயசம்,பச்சிடி,அப்பளாம், பொறியல், கூட்டுன்னு பரிமாறி ஜமாய்ச்சுட்டாள், பாமா. அது வரைக்கும் ஒரு ஓரமா நின்னுண்டிருந்த சாமா, சாம்பார் வாளியைத் தூக்கிண்டு வந்து மூக்கைத் துளைக்கற வாசனை வீசின முருங்கக்காய் + வெங்காய சாம்பார, சாதத்தில ஒரு கரண்டி எடுத்து ஊத்தறான்.
”பிரமாதம்” என்று ரசித்து சாப்பிடத் தொடங்கிய பரமேஸ்வரப்பா, “சொல்ப சாம்பார்....” என்று கேட்கவும் சாமா,மறுபடியும் பரிமாறினான்.
அப்படி ரெண்டாம் முறையாக பரிமாறப்பட்ட சாம்பாரில் வந்து விழுந்த வஸ்துவைப் பார்த்து, பரமேஸ்வரப்பா,”ஹேய்....காக்ரோச்” என்று காச்,மூச்சென்று கத்தவும், சகல நாடியும் ஒடுங்கிப்போனான், சாமா.
ஒரு மின்னல் போல வந்தாள், பாமா. “ இது கரப்பான் பூச்சி இல்லை...சின்ன வெங்காயத்தை தோலுரிச்சுட்டு, அலம்பி, சல்லிவேரோடப் போட்டா சாம்பாரோட டேஸ்டே தனி” என்று சொன்னவள், சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் - தருணத்தில் ‘அதை’ எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு சவைத்தபடி”மாமா....வெங்காயம்தான்” என்றாள் என்னைப் பார்த்து.
ஆரம்பத்தில் கொஞ்சம் கலவரம் காட்டிய பரமேஸ்வரப்பா, பாமாவின் பிரகடனத்தை நம்பவேண்டியவராகி சமாதானமானார். பிறகு, இலையில் பரிமாறப்பட்ட அத்தனை பதார்த்தங்களையும் திருப்தியாக ஒரு கை பார்த்துவிட்டே எழுந்தார்.”ஒரு நிமிஷம் அது கரப்பான்பூச்சியோன்னு நினைச்சு உங்களையும், உங்க சமையலையும் கேவலப்படுத்திட்டேன்......ரொம்ப,ரொம்ப ஸாரி..”ன்னு பாமாகிட்ட மன்னிப்பு கேட்டுண்டார்.
அப்புறம்...
அப்புறமென்ன .... அந்த காண்ட்ராக்ட் சாமாவுக்கே கிடைத்தது. சாஃப்ட்வேர் கம்பெனி கேண்டீனில் ’சாமா + பாமா’வின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.
நேற்று கடை வீதியில் இருவரையும் பார்க்க நேர்ந்தது. “மாமா, காசிக்குப் போகணும்னு ஒரு ப்ரார்த்தனை....நீங்களும் எங்களோட வந்தே ஆகணும்” என்று என் கையைப் பிடித்துக் கொண்டு சாமா சொல்ல, பாமா அதை ஆமோதிக்கும் விதமாக என்னைக் கெஞ்சும் முகத்துடன் பார்த்தாள்.
“நான் எதுக்கு...நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்கோ” - என்றேன்.
“காண்டீன் காண்ட்ராக்ட் கிடைக்கணும்ன்னு வெறியோட இருந்ததால என்ன பண்றோம்கிறதுகூட தெரியாம சடார்னு அந்த கரப்பான்பூச்சியை வாயில போட்டு தின்ன பாவத்தைத் தொலைக்க நாங்க காசிக்குப் போறதா வேண்டிண்டோம்...அதுக்கு சாட்சியா நின்ன உங்க பாவமும் தொலைய வேண்டாமா, மாமா... அதனாலதான் உங்களையும் கூப்பிடறோம்” என்றாள்,பாமா.
*************