சின்முத்ரா
தியானத்தின் போது கைகளை இந்த படத்தில் உள்ளது போல் வைத்துக் கொண்டு த்யானிப்பது மிக விசேஷமானது. இதற்கு நாட்டிய சாஸ்த்ரத்தில் சின்முத்திரை என்று பெயர்.
தனித்தன்மைப் பெற்றிருப்பதாலும் , அதில்லாமல் மற்ற விரல்களின் இயக்கங்கள் ஸ்தம்பித்து விடும் என்பதாலும் கட்டை விரல் - பரமனைக் குறிக்கிறது.
சுட்டிக் காண்பிப்பதின் மூலம் மனித தாத்பர்யத்தை உணர்த்துவதால் , சுட்டு விரல் - ஜீவனைக் குறிக்கிறது.
மோதிரம் அணிவதற்காக பிரத்தியேகமாக உள்ள மோதிர விரல் - பொன்னைக் குறிக்கிறது.
பாம்பைக் குறித்து , பாம்பு உறையும் இடத்தை உணர்த்தும் பாம்பு விரல் - மண்ணைக் குறிக்கிறது.
நளினமானதாலும் , மென்மையானதாலும் கடைசியான சிறு விரல் - பெண்ணைக் குறிக்கிறது.
‘அதாவது , சுட்டுவிரல் கட்டைவிரலைத் தவிர மற்ற மூன்று விரல்களுடன் இயைந்து அமைந்திருப்பது போல் ஜீவாத்மா எப்போதும் மண், பொன், பெண் ஆகியவற்றில் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட ஜீவாத்மா , பரமாத்மாவை அடைய வேண்டுமானால் அம்மூன்றிலிருந்தும் விலகி வர வேண்டும். பிறகுதான் பரமனை அடைவது சாத்தியம்’ என்கிற அரிய தத்துவத்தை உணர்த்துகிறது இந்த சின்முத்திரை.
*******************