Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, December 31, 2010

"புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"

               ந்த வார துவக்கத்தில் திருச்சிக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.அங்கு அடியேன் சென்று இறங்கிய நாள் தொட்டு ,மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறும் வரையில் மூன்று நாட்களும் நசநசவென்று தூறலும், மழையும் ! நல்லவனாகவே இருக்கப்படாதப்பா...என்று என்னை நானே சபித்தேன்.. ஏனெனில், போன காரியத்தை கவனிக்க முடியாமல் இப்படி மழையால்  தொந்தரவு வரும் என்றால் எதற்காக இத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்? ( ஹி..ஹி கொஞ்சம் ஓவராயிடிச்சோ?)

               மழைக்காக ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது சின்னையா  பிள்ளை சத்திரத்தில் தற்போது அமைத்திருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தென்பட்டது. அங்கிருந்த ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் வலையை மேய்ந்துவிட்டு வலைப்பூவை முகர்ந்து கொண்டிருந்தபோது என் பக்கத்து சிஸ்டத்தில் ஏதோ டைப் அடித்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தன் வேலையை விட்டு விட்டு என் வலைப்பூவை நோட்டமிடத் தொடங்கினார்.
"என்ன ப்ளாகா?" என்றார்.
"அமாம்" என்றேன், கித்தாப்பாக.
"என்ன பேர்ல எழுதறீங்க?"
"எல்லென் என்ற பெயரில்"- இது நான்.
விஷயம் தெரிந்த ஆசாமி போல இருக்கிறதே என்று நான் யோசிக்கும் முன்பே , அவர் எழுந்து என் கையைக் குலுக்கினார். " சமீபத்தில்தான் ப்ளாக்கில் உங்கள் படைப்புகளை பதிவு பண்ணத்தொடங்கி இருக்கிறீர்கள் அல்லவா? வெரி குட்... நன்றாக இருக்கிறது... கதைகளும் சரி... உங்கள் ஓவியங்களும் ரசனைக்குரியதாய் உள்ளன...தொடர்ந்து எழுதுங்கள் ", என்று என்னை உற்சாகப்படுத்தினார் .
எனக்குள் ஒரு நடுக்கம் பரவியது... " ஐயா ...தாங்கள்......?" என்று இழுத்தேன்.
"ஹாஹ்ஹா.... நானா ? " என்று சிரித்தவர், தனது ஜோல்னாப் பைக்குள்  கைவிட்டு  தன் விசிட்டிங் கார்டை நீட்ட , எனக்கு வியப்பும் சந்தோஷமும்... அந்த மனிதர்  வேறு யாருமில்லை... உயர்திரு ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள்தான் !! அடியேன்  ஒரு ப்ளாக்கைத் தொடங்குவதற்கு இவருடைய ப்ளாக்கே காரணம். எமது ஒவ்வொரு படைப்பையும் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்த்து விமரிசனம் செய்து உற்சாகம் ஊட்டிய பெருமகனார்... என் கண் முன்னே... ஆஹா ,என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் ... அவர் கைகளை கால்களாய் எண்ணி ஒற்றிக் கொண்டேன்... பொது இடமானதால் அவ்வளவு மரியாதைதான் செய்ய முடிந்தது...
அவருடைய சிறிய வேலை அந்த சென்டரில்  முடிந்ததும் வெளியில் வந்து வெகு நேரம் பேசினோம். மிகுந்த எதார்த்த சிந்தனைகளுடனும் அதீத நகைச்சுவை உணர்வுகளுடனும் அவர் பேசியவை அனைத்தும் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 
மூன்று ப்ளாக்குகள் எழுதுகிறார்.... .எனினும் சற்றும் கர்வமே இன்றி முதல் அறிமுகத்திலேயே  என்னுடன் அத்தனை நட்பு பாராட்டினார்... அவருடைய  பாசாங்கற்ற 
எழுத்துகளைப் போலவே அவரும் இருந்தார்... அவருடைய கீர்த்தனைகளைப் பற்றி சிலாகித்து நான் பேசிய போது அடக்கத்துடன் "எல்லாம் அவன் அருள்..." என்றார்.
"வீடு, தி.கோயிலில்தான் ... வாருங்களேன்.." என்றார்...
முகவரி வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டேன்... "அடுத்த முறை வரும்போது அவசியம் வருகிறேன்" என்றேன்."வரும்போது மறக்காமல் ஒரு கோணிப்பை எடுத்து வருகிறேன்... உங்கள் இல்லத்தில் விளைந்திருக்கும் மா, கொய்யா, மாதுளை,சப்போட்டா பழங்களை அள்ளிச் செல்வேன்" என்று அடியேன்  சொன்னேன். 
"மிகவும் சந்தோஷம்.... நான் எழுதியதை இன்னமும் நினைவு வைத்துள்ளீர்களே' என்றவர் "புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"என்று கூறி விடை பெற்றார்.
             அன்று பெய்த மழையை மிகவும் வாழ்த்தினேன் !
 

Saturday, December 25, 2010

ஆடும் அணங்கு

               ந்த டிசம்பர் சீசனுக்கு நம் பங்காக இந்த ஓவியத்தை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். இந்த ஓவியம் 1994 =இல் திருவனந்தபுரத்தில் இருந்தபோது வரைந்தது...'இதே போல் நிறைய ஓவியங்கள் வரைந்து கொடுத்தால் நானே என் செலவில் உனக்காக ஒரு ஓவிய கண்காட்சி நடத்துவேன்' என்று உற்சாகப்படுத்திய கேரள சேச்சிக்கு நன்னி!!










முற்பகல் செய்யின்....


"நறுக்கின வெங்காயம் போதும் ...அது அப்படியே  இருக்கட்டும்      மூணு  மொளகா வத்தலையும் பூண்டையும் மிக்சியில போட்டு நல்ல மையா அரைச்சு வை. நான் அதுக்குள்ளே சிக்கன கிளீன் பண்ணிடறேன்"

"சிக்கன டிரஸ் பண்ணித்தானே வாங்கி வந்தீங்க?"

"என்னாதான் அவங்க பண்ணிக் கொடுத்தாலும் நாம ஒரு தரம் கிளீன் பண்ணினாத்தான் எனக்கு திருப்தி"

"அமெரிக்கா பிள்ளை வர்ரான்னா நாலு தடவை கூட கிளீன் பண்ணுவீங்க சாமி.."

"ஏய்..இந்த கிண்டல்தானே வேணாங்கிறது ...அருண் வந்தாலும் சரி... இல்லேன்னாலும் சரி... நான் ரெண்டுவாட்டியாவது   கிளீன் பண்ணிட்டுத்தான் சில்லி ப்ரை பண்ணுவேன்"

"எங்கப்பாவுக்கும் சில்லி ப்ரைன்னா ரொம்பப் பிடிக்கும்....தாத்தா மாதிரியே பேரனும் எப்பப் பாத்தாலும் 'சில்லி ப்ரை,சில்லி ப்ரை'ன்னு கேக்கறான்"

"மிக்சியில அரைக்க சொன்னேனே .... அரைச்சிட்டியா? அப்பாவுக்குப் பிடிக்கும் ...ஆத்தாவுக்குப் பிடிக்கும்னுட்டு"

"எங்கப்பா பத்தி சொன்னதும் ஏன் இப்படி 'சுர்ர்ர்ர்'ன்னு வருது?"

"உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லியோ... என்னால மறக்க முடியுமா, காமாட்சி?"

"அடாடா ... ஆரம்பிச்சிட்டீங்களா ஒங்க புராணத்தே...எங்கப்பாவ எதுனாச்சும் சொல்லாட்டா உங்களுக்கு பொழுதே போகாது சாமி"

"சரி..சரி ... அரைச்சிட்டியா...அதை இப்படி வெச்சிட்டு நாலு தக்காளியே அரிஞ்சு வை"

பேசிக் கொண்டே சுந்தரம் , சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டார். "உங்கப்பாவ நான் ரொம்ப மதிக்கிறேன்.. இல்லேன்னு சொல்லலே...ஆனாலும் அன்னைக்கு எக்மோர் ரயிலடியில சொன்னாரு பாரு... என்னதான் எங்கம்மா உன்னைய கொடும படுத்தினதாகவே இருக்கட்டும் ...உன்ன ஊருக்குக் கூட்டிட்டுப் போகும் போது ,'மாப்பிள்ளே ,எம் பொண்ண கண்ணுக்கு கண்ணா வளத்தேன்...அது  கலங்கி நிக்குது...  உங்கம்மா தன்னோட மருமகனு நினைக்க வேண்டாம்... தாயில்லாப் பிள்ளைன்னாவது நினைக்க வேண்டாமா?  இப்படி வாய்க்கு வந்தபடி பேசலாமா? உங்கம்மாதான் சொல்றாங்கன்னா நீங்களாவது கொஞ்சம் அனுசரணையா இருக்கக் கூடாதா ?  ம்..ம்ம்.....உங்களுக்கு ஒரு பொட்டப் பிள்ள பிறந்து அதக் கட்டிக் கொடுக்கும்போதுதான்  என்னோட வலி உங்களுக்குப் புரியும்'ங்கிறார்"

"அப்பா அப்ப சொன்னதுதான் நடக்காம  போயிடிச்சே...அப்புறம் அவருப் பேச்சு என்னத்துக்குங்க?"

சுந்தரம், வெட்டிய சிக்கன் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்துப் பிசைந்து       பாத்திரத்தின் மேல், தட்டைப் போட்டு மூடினார்."அதான் சிங்கக் குட்டி போல நமக்கு அருண் பிறந்தவுடனே , அந்த சம்பவத்த மறக்க நினைக்கேன்.முடியல"

"சிங்கக் குட்டி..சிங்கக் குட்டின்னு செல்லமாத்தான் வளத்தோம் ...என்னாச்சு. நாலெழுத்துப்  படிச்சுப் பெரிய ஆளா ஆனதும் ,அமெரிக்காப் போறேன்'ன்னு போனான்... கை நிறையா சம்பளம் வந்ததும் , சிங்கக் குட்டிக்கு தல கால் புரியல...கூட வேலைப் பாக்கிறப் பொண்ண கட்டிக்கிறேன்'னான்"

"சேர்ந்து  வாழப் போறவன் அவன்... அவன் சந்தோஷம்தான் நம்ம சந்தோசம். இந்த மட்டும் நம்ம நாட்டுப் பொண்ணா பாத்து வெச்சானே..அதை நினைச்சு சந்தோஷப்படுவியா"

"என்னதான் நம்ம நாட்டுப் பொண்ணுன்னு நீங்க  சமாதானம் சொன்னாலும் கன்னடப் பொண்ணு கன்னடப் பொண்ணுதான்... நம்ம தமிழ்ப் பொண்ணு தமிழ்ப் பொண்ணுதான்"

"சரி.. நடந்தது நடந்து போச்சு... அருண் வர்ற நேரம் ஆச்சு... அவன்கிட்ட இது மாதிரிப் பேசி அவன் மூட அப்செட் பண்ணிடாதே ,காமாட்சி.... புள்ள நாளைக்கு ப்ளைட்டப்  பிடிச்சு அமெரிக்கப் போறான்... நல்லபடியா போய்ச் சேரணும்"

அருணை நினைத்து பெருமைதான் சுந்தரத்துக்கும், காமாட்சிக்கும். ஆனாலும் ,அவன் 'வர்ஷாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்' என்று பிடிவாதம் பிடித்ததில் லேசாய் வருத்தம். ஆனால் , வர்ஷாவின் அழகும், படிப்பும், சம்பளமும்,சமர்த்துதனமும் பெற்றவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் , பெரிதாய் அங்கலாய்த்துக்  கொள்ளாமல்  அனுசரித்துப் போயினர்.

என்னதான் பர்கர்,பீட்சா என்று அமெரிக்காவில் சாப்பிட்டு பழகினாலும் அருணுக்கு அப்பா செய்த சிக்கன் சில்லி ப்ரை என்றால்அத்தனை இஷ்டம். சுந்தரமும் சளைக்காமல் அவன் வரும்போதெல்லாம் செய்து கொடுத்து சாப்பிட வைத்து சந்தோஷப்படுவார்.

அரை மணி நேரம் தாண்டி அருண் காலிங் பெல்லை அழுத்தியவுடன் ,காமாட்சி ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்.

"வாப்பா அருண்....என்ன வர்ஷா வரலியா?"

"இல்லம்மா"  என்றபடி வீட்டிற்குள் வந்த அருணை, சுந்தரம் கட்டிக் கொண்டார். "நீ இந்தியாவுக்கு வந்து 5 நாளாயிடிச்சு...இப்பத்தான் அப்பாவைப் பாக்கணும்,அம்மாவைப் பாக்கணும்னு தோணிச்சா, அருண்?" என்றார் ,வாஞ்சையுடன்.

"அதில்லப்பா... பெங்களூர்ல ஒரு ஆபிஸ் வேலையை வச்சிக்கிட்டுத்தான் வந்தேன்... வர்ஷாவுக்கும் நல்ல வேளையா லீவு  கிடைக்கவும் அவ பேரண்ட்சோட  இருக்கிறேன்னு சொன்னா. என்னோட ஆபிஸ்  வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நாளைக்கு யு.எஸ்.  கிளம்பணும். அதுக்கு முன்னாடி உங்களைப் பாத்துட்டு ,உங்க ஆசிகளோட புறப்படலாம்னு வந்தேன்ப்பா"
அருண் கல்யாணமாகிப் போய் , 6 மாதம் கழித்து  இப்போதுதான்  வருவதால்   அவர்களுக்கிடையே   பேச நிறைய விஷயங்கள் இருந்தன. பேசினார்கள்.

பேசிக்கொண்டே , சுந்தரம்  மசாலா தடவிய சிக்கனை நன்றாக வேக வைத்து இறக்கி, வடிகட்டி, சுத்தமான நெய்யில் பொரித்தேடுத்தார். மற்றொரு சட்டியில் அரிந்த வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கி எடுத்து , பொறித்த சிக்கனுடன் கலக்க அருணுக்குப் பிடித்தமான சிக்கன் சில்லி ப்ரை தயாரானது.

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் மூன்று பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டதில் பெற்றோருக்கும், மகனுக்கும் மிகுந்த திருப்தி.

அன்று மாலை சுந்தரத்தையும், காமாட்சியையும் தன் காரிலேற்றிக் கொண்டு மயிலை, திருவல்லிக்கேணி கோவிலுக்கு கூட்டிப் போனான். இரவு டின்னருக்காக சரவணபவன்      a c ரூமில் உட்கார்ந்திருந்தபோது வர்ஷாவிடமிருந்து போன் வந்தது.

"உம்....உம் ....ம்.. வர்றேன்...வர்றேன்...சென்னைக்கு வந்து முழுசா எட்டு மணி நேரம் கூட ஆகல... அப்பா.. அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கேன்... நாளைக்கு நைட்டுதானே ப்ளைட்டு? வர்றேன்...வர்றேன்" என்றான்.

"என்னப்பா?" என்றார் சுந்தரம்.

"இல்லப்பா... நாளைக்கு பெங்களுர்ல ஏதோ 'பந்தா'ம் ... இன்னைக்கு நைட்டே கிளம்பி வந்துடுன்னு வர்ஷா சொல்றா..."

காமாட்சிக்கு மளுக்கென்று கண்களில் நீர் ததும்பியது.... "உடனே கிளம்பணுமா அருண்?" என்றாள்.

"ஒண்ணும் ஆகிடாதும்மா .... நாளைக்கு மதியத்திற்கு மேல கிளம்பினா போதும்...அஞ்சு மணி நேரத்தில பெங்களூர் போயிடலாம்... வர்ஷாவோட அம்மா எதனாச்சும் பயமுறுத்தியிருப்பாங்க.... உடனே இவளும் 'சீக்கிரமா கிளம்பி வா'ங்கிறா"

சாப்பிட்டு வீடு திரும்புவதற்குள் மூன்று போன் வந்து விட்டது...சுந்தரமே வர்ஷாவின் அம்மாவிடம் பேசினார்..."அருண் ஒண்ணும் சின்ன பாப்பா இல்ல... அவன் ஜாக்கிரதையா வந்து சேர்வான்" என்று சொல்லிப் பார்த்தார்."நாளே பேடா ...ஈவத்து  நைட்டே  பந்துபிட ஹேளி" என்றாள் வர்ஷாவின் அம்மா கொஞ்சம் கர்ண கடூரமாய் ,கன்னடாவில்... 

'என்ன சொல்றாங்கன்னே புரியலப்பா... நீ கிளம்பறதுன்னா கிளம்பு அருண்" என்ற சுந்தரத்தின் குரல் கம்மியது.

"ஒண்ணும் ஆகிடாதுப்பா.... நான் நாளைக்கே போறேன்..."

"வேண்டாம் அருண்...ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா ..என்னா பண்றது...வர்ஷா சொல்ற மாதிரி இப்பவே கிளம்பு...நாளைக்கு பகல் முழுசும் போன்லையே எங்களோட பேசிக்கிட்டிரு " என்றாள் காமாட்சி அரை மனதுடன்.

அவன், பாழாய்ப்போன 'பந்த்'தை சபித்துக் கொண்டே கிளம்பினான்..வர்ஷாவும் அவள் அம்மாவும் அனாவசியமாக கவலைப்பட்டு , தன்னைப் பெற்றவர்களுடன் இருக்க  விடாமல்  அவசரப்படுத்துவதின் மூர்க்கத்தையும் சபித்தான். சாயந்திரம்  6 மணிக்கு 'பந்த்' முடியப்போகிறது. இவன் சென்னையை விட்டு நாளை மதியம் கிளம்பினாலும் மாலை 'பந்த்' முடிந்ததும் பெங்களுர் அடைந்து விடலாம்.. இரவுதான் பிளைட் .... ஏன்தான் மாமியாரும் வர்ஷாவும் சேர்ந்துகொண்டு இப்படி ஓர் இக்கட்டான நெருக்கடியைத் தருகிறார்களோ என்று அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது, அருணுக்கு.

"அடுத்த தரம் வரும்போது ஆபிஸ் வேலையோட வராதேப்பா....எங்களுக்காக லீவு போட்டுட்டு வா" என்றார் சுந்தரம்.


வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த சுந்தரத்திற்கும் காமாட்சிக்கும் மனசு இற்றுப் போனது.... பிள்ளை வருவான்..பிள்ளை வருவான்..  என்று ஆசை ஆசையாக காத்திருந்தது இந்த எட்டு மணி நேரத்தை கொண்டாடத்தானா? இனி எப்போது வரப் போகிறான்... எப்போது மீண்டும் அவனை மடியில் படுக்க வைத்துக்  கொண்டு தலை கோதி அவனோடு பேசப் போகிறோம்?' என்ற அங்கலாய்ப்பே  அவர்களுள் மிஞ்சியது.

ஆனால், சுந்தரத்திற்கு மட்டும் 'ஆண் பிள்ளை ஆனாலும் , பெண் பிள்ளை ஆனாலும் கட்டிக் கொடுத்துவிட்டோம்' என்றால் இப்படிப் பட்ட வலிகளை எல்லாம்   அனுபவித்துதான் தீர வேண்டும் போலிருக்கிறது என்று உறைக்க ஆரம்பித்தது. சுந்தரத்தின்  நினவு  விஸ்தீரணத்திற்குள் அவருடைய மாமனார் வந்துவிட்டுப் போனார். தன்னைப் பார்த்து அவர் ஏளனமாக சிரிப்பது போலவும் இருந்தது சுந்தரத்திற்கு.

                              ****************
 

Saturday, December 11, 2010

'இரட்டை' அர்த்தம்

            றுபத்து நான்கு வயதில் 'பென்ஷன் வாங்கினோமா ...வேளாவேளைக்கு சாப்பிட்டோமா .... கச்சேரி கேட்டோமா ....உன்  போல் தலை நரைத்த தாத்தாக்களுடன் பேசி பொழுதை போக்கினோமா' என்றில்லாமல் கதை கதையாய் எழுதி என்னத்தை சாதிக்கப்போகிறாய் ? என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது...
               சாதிக்கப் போவது எதுவும்  இல்லைதான்...ஆனாலும் , சொல்லியே ஆக வேண்டிய விஷயங்கள் நிறைய்ய்ய்ய இருக்கின்றனவே. பெண்டாட்டி என்று ஒருத்தி இருந்தவரை அவளிடம் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்தேன். மகராஜி, போன மார்ச் மாதம் மூச்சை நிறுத்திக்கொண்ட பிறகு யாரிடம் சொல்வேன் ? பேரன், பேத்தி எல்லோரும்  அவரவர் பாடங்களிலும் , இன்னபிற லோகாயத பயிற்சிகளிலும் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு என் பக்கத்தில் உட்காரவே நேரம் போதவில்லை. அதனால்தான் என் புலம்பல்களை கதைகளாக எழுதுகிறேன். அவற்றை வாசித்து , நீங்கள் கூறும் கருத்துரைகளே இந்த பட்ட மரத்திற்கு ஊற்றப்படும் உயிர் நீர்.
இதற்கும்  மேல் 'என்ன சாதிக்கப் போகிறாய் ?' என்று கேட்க மாட்டீர்கள்தானே....
               என்னமோ தெரியவில்லை சார் / மேடம் , இந்த 'இரட்டை ' சமாச்சாரங்கள் என்னை எப்போதும் உலுக்கிப் பார்த்திருக்கின்றன...சின்ன வயதில் 'சயாமீஸ் இரட்டையர்களை' பற்றிப் படித்து, அழுதிருக்கிறேன்... இறைவனின் படைப்பில் ஏன் இப்படி ஓர் அவலம் என்று ...
                அதே மாதிரி  இரட்டை வாழைப் பழத்தை யாரும் சாப்பிட முன் வரமாட்டார்கள். பிறக்கும் குழந்தை இரட்டையாய்ப் பிறக்கும் என்று பயப்படுவார்கள்...ஆனால் எனக்கோ இரட்டைக் குழந்தை வேண்டுமென்று இரட்டை வாழைப் பழத்தை தேடி வாங்கி சாப்பிடுவேன்.... அதிலும், கடவுள்  என்னிடம் பாராமுகமாய் நடந்து கொண்டார்  ...நினைத்தது நடக்காமல் போனது...
                அவ்வளவு ஏன் ? என் கல்யாணத்தின் போதும், க்ரஹப்ரவேசத்தின்போதும் சீராக வந்த ஜோடி பருப்பு தேங்காய் கூடுகளை இன்னமும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

                அமெரிக்காவில் அந்த இரட்டை கோபுரங்கள் தீவிரவாத விமானங்களால் தகர்க்கப்பட்ட நாளன்றும், அடுத்த நாளைக்கும் நான் கொலைப் பட்டினி கிடந்தேன், ஸ்வாமி!! மனசு இற்றுப் போனது !!
                தெருவில் பாவாடை சட்டை அணிந்து குஞ்சலம் , குஞ்சலமாக குழந்தைகள் நடக்கும்போது அவர்களின் ரெட்டை ஜடை அத்தனை அழகாய் என்னைக் கொல்லும். இதை எல்லாம் விடுங்கள்.... கோவிலுக்குப்  போனால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ? நேராகப் போய் மூலவரை தரிசிப்பதில்தானே உங்களின் மொத்த கவனமும் இருக்கும்... எனக்கு அப்படி இல்லை...மூலவர் சந்நிதிக்கு முன்னால் நிற்கும் அந்த த்வாரபாலகர்களுக்கு என் வந்தனத்தை செலுத்துவதிலேயே என் ஆர்வம் ததும்பும். சந்நிதானத்தில் இருக்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றால், அந்த கடவுளையே காத்து நிற்கும் இந்த ஜோடி த்வாரபாலகர்கள், என்னைக் காப்பாற்றியவர்கள் ஆயிற்றே !!! ஆகையால் , அவர்களுக்கு எனது ஆன்மார்த்த வந்தனத்தை சமர்ப்பித்து விட்டு நிறைய சமயங்களில் மூலவரை தரிசிக்காமலே வந்திருக்கிறேன்.
                     என் ஒரே பையன் ரமேஷுக்கும், மகள்கள் சாருவுக்கும் , கோமளிக்கும் சொத்துபத்தைஎல்லாம் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டேன்.எல்லோர்க்கும் (மாப்பிள்ளைகள்,மாட்டுப்பெண் உட்பட) சந்தோஷம். சுப்புலஷ்மி கடைசிவரை போட்டுக் கொண்டிருந்த ஒரே ஒரு ரெட்டை வட சங்கிலியை மட்டும் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் சேர்த்து எரிக்க சொல்லி ரமேஷிடம் சொல்லியிருக்கிறேன்... என்ன செய்யப் போகிறானோ.....
                    சரி ..சரி... லூசு போல இருக்கிறது என்று முடிவு கட்டி, வேறு கதையை தேடி போய்விடாதீர்கள்...எல்லா கார்யங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்? என்னுடைய  இந்த   இரட்டைப் பித்திற்க்கான காரணம் என்ன தெரியுமா?
                     என் கல்யாணத்திற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம். இப்பொழுது நினைத்தாலும் மெல்லிசாய் ஒரு நடுக்கம் தோன்றுகிறது. எனக்கும் சுப்புலஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒரு பிப்ரவரி மாதம்...தேதியும் நினைவிருக்கிறது...சேலத்திற்கு ஒரு காரியமாகப் போய் விட்டு திருச்சிக்கு திரும்புகிறேன். சேலம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போதே இரவு மணி 11 ஆகிவிட்டது. சுலபத்தில் பஸ் கிடைக்கவில்லை.ரொம்ப நேரம் காத்திருந்துதான் பெங்களூரிலிருந்து  வந்த ஒரு பஸ்ஸைப் பிடிக்க முடிந்தது. டிரைவர் சீட்டிற்கு பின்னால் நான் அமர இடம் கிடைத்தது.
                  சேலத்தை விட்டு  கிளம்புகையில் நள்ளிரவு தாண்டி விட்டது. நாமக்கல் வந்ததும் , அந்த மூன்று பேர் அமரும் சீட்டில் நான் மட்டும். மற்றவர்கள் இறங்கி விட்டனர். நாமக்கல்லில் ஒரு குடும்பம் ஏறியது. இளம் வயது கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகள்.அவர்களுக்கு சீட்டு ஏற்பாடு செய்வதற்காக நடத்துனர் என்னை எழுந்திருக்க சொன்னதும்  எனக்கு கோபம் வந்தது.
                   "நான் சேலத்திலிர்ந்து வர்றேன்...இப்ப ஏறினவங்களுக்காக நான் இடம் மாறணுமா...முடியாது.." என்று சொல்ல வந்த நான் என் பாழாய்ப் போன இரட்டை செண்டிமெண்ட் தாக்கத்தால் உடனடியாக எழுந்து இடம் கொடுத்தேன். காரணம் , மொட்டு,மொட்டென்று பார்த்துக்கொண்டிருந்த  அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்கள் !!
                    "அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க" என்று அப்பா சொன்னதும் இரண்டில் ஒரு குழந்தை கை கூப்பியது... மற்றது எனக்கு கை கொடுத்தது...மஹா ம்ருதுவான பிஞ்சு ஸ்பரிசம்...
                    எனக்கு முன் பக்க ஏறு வழியின் ஜன்னலை ஒட்டின சீட் கிடைத்தது.இரவுப் பயணங்களில் பெரும்பாலும் நான் உறங்குவதில்லை. போதும் போதாததற்கு, அப்பாவிற்கும் ,அம்மாவிற்கும் நடுவில் படுத்துறங்கிக்  கொண்டிருந்த அந்த தளிர்களை பார்த்தபடியே என் பயணம் தொடர்ந்தது.
                     முசிறி வந்ததும் பஸ் நின்றது . டீ குடிக்க ஓட்டுனரும் , நடத்துனரும் இறங்கினர். தொடர்ந்து , பஸ்சிலிருந்த பெரும்பாலோர் இறங்கவே நானும் இறங்கி நின்றேன். சத்தமாக எஸ்.பி.பியின் குரல் , பிராந்தியத்தை கலக்கியது.அந்த குழந்தைகளை தோளுக்கு ஒன்றாய்  தூக்கிக் கொண்டு அந்த அப்பாவும் இறங்கி, தூங்கி வழிந்து கொண்டிருந்த , குழந்தைகளின் டிராயர் இறக்கி 'உச்சா'போக வைத்தார். இரண்டும் நடுங்கிக் கொண்டே போயின.இடுப்பை வளைத்து டிராயரை மேலே இழுத்துக் கொண்டன.
                    நான் அந்த குழந்தைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டும் நல்ல ரோஸ் நிறம். அழகென்றால் அப்படி ஓர் அழகு! செராக்ஸ் காப்பி மாதிரி இருந்தன . ஒரு குழந்தையை நான் வாங்கிக் கொண்டேன். பேர் கேட்டேன் ... ஸ்வெட்டரும்  தொப்பியும் அணிந்திருந்த அந்த குட்டி ,''நான் மகேஷ்... அவன் ரமேஷ் ..." என்றது.
                   அதற்குள் ரமேஷ் என்ற அந்த குழந்தை அப்பாவிடம் 'கடையில் விற்கும் பிஸ்கட் வேணும்' என்று கேட்க,'இங்கெல்லாம் நல்ல பிஸ்கெட்டா இருக்காது... திருச்சி போனதும் வாங்கித் தருவதாக' சொன்னார். அழுது   அடம் பிடிப்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.. மற்றும் ஆச்சர்யம்... "ஓக்கே..டாடி" என்ற குழந்தையை நான் வாங்கி உச்சி முகரணும் போலிருந்தது.
                    பஸ் முசிறியை விட்டு கிளம்பியது. பஸ்ஸில் டிரைவரையும் என்னையும் தவிர ,அனைவரும் சாமியாடிக் கொண்டிருந்தனர். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. டிரைவர் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்.  குறுகலான அந்த சாலையின் இடது புறம் நன்கு ஒதுக்கி ஓட்டியவர் வலது பக்கம் வந்த ஒரு வளைவை சமாளிக்கும் பொருட்டு வண்டியை ஒரேடியாக வலதுப் பக்கம் திருப்ப, எதிரே பார்க்காமல் எதிரே வந்த ஒரு லாரியுடன் நாங்கள்  பயணித்திருந்த  பஸ், 'டமால்' என்று மோதியது.
                      இத்தனை நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு 'சர்ட்டென்று' தலையை சுற்றியது. எங்கள் பஸ்சிற்குள் 'ஓ'வென்று அலறல்.முன் பக்கத்து கண்ணாடி நொறுங்கி என் நெற்றியிலும் முகத்திலும் முள் முள்ளாக கண்ணாடி சிதறல்கள்.. அலறி அடித்துக் கொண்டு கீழிறங்கினேன். படபடப்பில் இருந்து , சுதாரித்துக் கொள்ள எனக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.பின் பக்க வாயில் வழியாக சிலர் கத்தியபடி இறங்கினர். எல்லோருமாக நிதானபடுத்திக்கொண்டு  நிலைமையை ஆராய்ந்தோம். பஸ்சும் லாரியும் 'head on collission  ... லாரி டிரைவரின் உடம்பு எங்கள் பஸ்சிற்குள் செருகிக் கிடந்தது. எங்கள் பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே  காலி. பஸ்சிற்குள் ஏறினேன்... மனம் பதைபதைத்தது... என்ன கொடூரம்.... டிரைவர் சீட்டிற்குப் பின்னால் இருந்த மூன்று சீட்டு பயணிகளும் ஸ்தல மரணம். ஐயோ... அந்த பிஞ்சு குழந்தைகளும் ,அப்பாவும், அம்மாவும் அடையாளம் தெரியாமல் கூழாகப்  பார்த்தேனே ஸ்வாமி  ....அந்தக்ஷணம் என் வசமில்லாமல் நான் பெரிதாய் அழத் தொடங்கினேன்.
                      அந்த ரோஜாப்பூ குழந்தைகள் என்ன பாவம் செய்தன... ஏன் இப்படி ஒரு கோர மரணம் அவற்றிற்கு...என்ன பாவம் செய்தார்கள் அந்த பெற்றோரும், கூட இறந்த அத்தனை ஜனங்களும்...
                     'கொஞ்ச நேரத்திற்கு  முன்னால் பிஸ்கட் கேட்ட ரமேஷ் குழந்தை இப்போது இல்லையே.... திருச்சிக்கு போய் வாங்கி தருவதாக சொன்ன அப்பா வாங்கி தராமலேயே போய் விட்டாரே.. தெய்வமே .... ஏன் இப்படி என் கண் முன்னால் இப்படி ஒரு பலி வாங்கினாய் ?' பஸ்ஸை சுற்றி சுற்றி வந்து என் முகத்து கண்ணாடி சிதறல்களை பிடுங்கியபடி அரற்றினேன்... இது கனவாக இருக்கக் கூடாதா ?   
                   கனவில்லை.... நிஜம்.  இறந்து போனவரும், காயமடைந்தவரும் ஏராளம். கூக்குரல்களும்,ஓலங்களும் வயிற்றை ஓங்கி அறைந்தன.
                    நிதானமாக யோசித்தேன்... நாமக்கல்லில் இந்த குடும்பம் ஏறாதிருந்தால் அந்த பிப்ரவரி இருபத்தாறாம் தேதியின் புலர் காலை பொழுதில் நான் இறந்திருப்பேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் இரட்டை குழந்தைகளால் இப்போது நான் பிழைத்து நிற்கிறேன்...ஒரு குழந்தையாய் இருந்திருந்தால் கூட அதே சீட்டில் 'அட்ஜஸ்ட்' பண்ணி உட்காரும்படி நடத்துனர் கூறியிருக்கக் கூடும் ...என்னைப் பிழைக்க வைத்து விட்டு தாம் மறைந்து போன அந்த இரட்டைக் குழந்தைகளின் நினைவாக இன்றும் நான் ஜோடி பருப்பு தேங்காய் கூட்டைப் பாதுகாத்து வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமா, சார் ?
                   அமெரிக்க இரட்டைகோபுரம்  தகர்ந்ததற்க்கு நான் பட்டினி கிடந்தது  தப்பா ,சார்?
                   கோயில் சாமியை விட்டு விட்டு த்வார பாலகர்களை மெய்ம்மறந்து வணங்குவது, சரியில்லையா மேடம்..?
                    சுப்புலஷ்மியின் ரெட்டை வட பவுன் சங்கிலியை எவர்க்கும் தராமல் என்னுடனே வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமா..... நீங்களே சொல்லுங்கள் !! 

                                  ***********

Sunday, December 5, 2010

வாழ்க நீ எம்மான்!

ஹே ராம் !
        இந்த படம் 1983-இன் ஜூலை மாத முற்பகுதியில் தொடங்கப்பட்டு , 22-ம் தேதி நிறைவு பெற்றது. தேசப் பிதாவின் உருவம் புள்ளிப் புள்ளியாய் உருப்பெற்றபோது அளவிட முடியாத சந்தோஷம் பெருகியது. எம் பெற்றோரும், நெருங்கியவர்களும் ஸ்லாகித்துப் பாராட்டிய ஓவியம். ஆனால், இந்த ஓவியத்தை இப்போது பார்க்கையில் , மதுவிலக்கு ரத்து, கோடி,கோடியாக லஞ்சம், ஊழல், சாத்வீகத்தை விழுங்கும் வன்முறைகள், விவசாயத்தையும், கிராமங்களையும் புறக்கணித்த நடைமுறை வாழ்க்கை - என்ற எத்தனையோ புள்ளிகளால் 'மஹாத்மாவை ரணப்படுத்துகிறோமோ' என்கிற நடுக்கம் தோன்றுகிறது.
                                             'எல்லாம் மாறுதலுக்குட்பட்டதே'   

Sunday, November 28, 2010

வறுமையின் நிறம் சிவப்பு

பத்மஸ்ரீ கமல்ஹாசன்

Tuesday, November 23, 2010

ப(ரமா)த்மா !

                        வாழ்ந்து  கொண்டிருக்கும் வரை  நம்மால் இயன்ற உதவியை நெருங்கியவருக்கு செய்ய வேண்டும் என்கிற துடிப்புடன் இயங்கியபடி  , அதே சமயத்தில்  வாய்த்திருக்கும் அரசுப் பணியை ஒரு அறப் பணியாகவும்  செய்து கொடிருக்கும் நான் , பிரகாஷ்.  'ரத்த வங்கியில் ரத்தம் கொடுக்கணுமா.... பிரகாஷக் கேளுங்க விவரம் சொல்லுவார்.... ' என்றோ... "இன்டேன் கேஸ் சிலிண்டர் கனக்ஷன என் பேருக்கு கொஞ்சம் மாத்தணும்.... பிரகாஷ்.." என்றோ..."பையனோட பாஸ்போர்ட்ட கிளியர் பண்ணிக் குடுப்பா.." என்றோ..."கொடேஷன் ஒர்டர்ல ஒரு சின்ன தப்பு சம்பவிச்சு... நம்முடே சிடுமூஞ்சி ஒபிசர் என்னை விளிச்சு... என்னோடோப்பம் சாரக் காணான் வரான் பற்றோ பிரகாஷ் " என்று பைங்கிளிக் குரலிலோ .... இப்படி யாராவது ஒருத்தர் என் டேபிள் முன்னால் நிற்பது வாடிக்கையான ஒரு விஷயம்.  பார்த்துக் கொண்டு இருக்கிற  லெட்ஜெர் பக்கத்திற்கு அடையாளம் வைத்து விட்டு அவர்களுடன் கிளம்பி விடுவேன்.
                  கனக்கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுப்பதால் என் மீது ஆபிசிலும் சரி, வெளி வட்டாரத்திலும் சரி எல்லோரும் மிகவும் அன்பு காட்டுவார்கள். அடிக்கடி என் எஸ்.ஓ வே "யோவ் , நீர் ஜெகஜ்ஜாலக் கில்லாடிய்யா" என்பார். எனக்கோ உள்ளுக்குள் கூசும்.  அவர் பெண்ணுக்கு கூட ஒரு காலேஜ் அட்மிஷன் வாங்கித் தந்திருக்கிறேன்.
                   இப்படி ஊருக்கே உழைத்து தேயும் என்னைப் புரிந்து கொள்ளாமல் "வீட்டில் இங்க இருக்கறத,அங்க நகத்தி வைக்காத ஜன்மம்" என்று தலையில் அடித்துக் கொள்வாள் என் சகதர்மினி, நளினி. "நாலு பேருக்கு நல்லது பண்ணினா புண்ணியம்" என்று நான் சமாதானம் சொல்கையில் அவள் தன் முகவாய்க்கட்டையை  தோளில் நொடித்துக் கொள்வதைப் பார்க்க வேண்டுமே... அட..அட..அடா..!
                    அதையும் மீறி , அவளுக்கு உதவும் எண்ணத்தில் காய் நறுக்க உட்கார்ந்தால் சிவராமன் மாதிரி யாராவது செல்போனில் தடதடக்கிறார்கள்.
                     "சொல்லு.. ஷிவா" என்றேன். ஷிவா என் முன்னாள் காலேஜ் நண்பன். இந்நாள் சகலை எனப்படுகிற ஷட்டகன்.
                     "பிரகாஷ்...சாயங்காலம் ஆபிஸ் முடிச்சிட்டு போற வழியிலே ஹோட்டல் மோனாவுக்கு வந்திடு... முக்கியமான ஒரு விஷயம் பேசணும்... ஒன்னோட ஹெல்ப் வேணும்...." என்றான் ஷிவா படபடப்பாக, "நளினிக்குத் தெரிய வேண்டாம்"
                     " என்னடா ட்ரிங்க்ஸ் பார்ட்டியா?" என்றேன் ரகசியமாய்.
                     "நேர்ல வா , சொல்றேன்" என்று கட் செய்தான்.

                       நேரில் பார்த்த போது பேயடித்தவன் போல் இருந்தான்.மொட்டை மாடி roof garden -இல் பியருடன் சங்கமிக்கும் சந்தர்ப்பத்தில் ,"நம்ப ரமா  அவளோட கிளாஸ் மேட் 'பத்மநாபன்'ன்னு ஒருத்தனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் கட்டிக்குவாளாம்." என்றவன் க்ளாஸ் அநியாயத்திற்கு நடுங்கியது.
                     "உனக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றேன்.
                     "மொபைல்ல எப்பப் பார்த்தாலும் 'டீ பத்மா... டீ பத்மா..'ன்னு மணிக்கணக்கா பேசிகிட்டிருப்பா...அதுவுமில்லாம இ-மெயிலிலே பத்மா..பத்மான்னு வழிஞ்சு வழிஞ்சு லெட்டர். ரமாவோட பாஸ்வர்ட் தெரிஞ்சதாநால கண்டுபிடிச்சேன். யாருடி இதுன்னா பத்மநாபன் என்கிறாள்."
                    "கட்டி வெச்சிட வேண்டியதுதானே " என்றேன் சிப்சைக் கொறித்தபடி.
                    "அவன் வேற ஜாதி...வேற 'ஸ்டேட்'டா.....நமக்கு ஒத்து வராது"
                    "டேய்.... பாரதியாரே 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு சொல்லியிருக்கார்டா"
                    "அது பாப்பாவுக்கு சொல்லியிருக்கார்.... எனக்கில்லே"
                    "சரி.... இப்ப என்ன பண்ணனும்னு சொல்றே?"என்றேன்.
                    "வெட்டணும்" என்றவன் என் திடுக்கிடலை உணர்ந்து, "அவங்க காதலை" என்றான்.
                    வேறொன்றுமில்லை ...அவனின் ஒரே மகள் ரமாதேவி  - நான் தூக்கி வளர்த்த என் ரமாக்  குட்டி - இன்று பெரிய பெண்ணாக வளர்ந்து படித்து, பட்டம் பெற்று, MNC -யில் வேலையாகி தன்னுடன் படித்த பத்மனாபனைக்  கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறாள்.  என் மைத்துனி கீதாவும் ஷிவாவும் அதற்கு பச்சைக் கொடி காண்பிக்க விரும்பவில்லை. ஜாதி, வேற மொழி ,குடும்ப கெளரவம்  ..அது..இது என்று பாவ்லா காட்டி எதிர்க்கிறார்கள்.
                    "ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவோம். 'இந்த கல்யாணத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியவே முடியாது'ன்னு சொல்லிப் பார்ப்போம்."என்றேன்.
                    "அப்படியெல்லாம் அம்மாஞ்சி மாதிரி பேசினா நடக்காது,பிரகாஷ். ஜெர்க் ஆகிற மாதிரி மிரட்டணும்"
                    "சரி...நான் பாத்துக்கிறேன்.. கவலைய விடு" என்று சமாதானப்படுத்தி லேசாக மலை ஏறிக் கொண்டிருந்தவனை கீழிறக்கி, வீட்டிற்கு கொணர்ந்து, படுக்கையில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.

                     வீடடைந்து நளினியிடம் விஷயத்தைக் கூறிக் கொண்டிருக்கும் போது , சிணுங்கியது செல்போன்."பெரியப்பா .... உங்ககிட்ட  கொஞ்சம் பேசணும்...இப்ப நீங்க  ப்ரீயா ?" என்றாள் ரமா.
                      ஷிவாவும் கீதாவும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு ரமாவைக்  கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ய, ஆனால் ரமாவோ  தான் நான்கு வருடங்களாக காதலிக்கும் பத்மா (எ)பத்மநாபனைத் தான்  கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாள்.
                       " நீங்கதான் எங்க ரெண்டு பேருக்காகவும் பேசி அப்பா,அம்மா சம்மதத்தை வாங்கித் தரணும் பெரியப்பா ", என்ற சுபாவின் குரல் கெஞ்சியது.
                         " நீ சொல்றதெல்லாம் சரிம்மா....ஆனா , உங்கப்பா அம்மாவை எதிர்த்து நீ கல்யாணம் பண்ணிக்கறதை நான் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ முடியாது." என்றேன்  குரலில் கடுமையை வரவழைத்து.
                         "அப்படியா....நான் பத்மனாபனைக்  கல்யாணம் பண்ணிக்கறதை யாராலையும் தடுக்க முடியாது "என்றாள் வீறாப்பாக.
                                            
                          "இவ்வளவு பேச்சு பேசுவியா நீ.... உன்னோட காதல் விஷயம் பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் உங்கப்பா சொன்னான். அவனுக்கு ஹெல்ப் பண்றதா வாக்கும் கொடுத்திட்டேன்... நான் கிருஷ்ணா பரமாத்மா மாதிரி....என் கிட்டே யார் முதல்ல உதவின்னு வர்றாங்களோ ,அவங்களுக்கு உதவர்றதுதான் என்னோட வழக்கம். இப்ப என் உதவி கேக்கிற நீ  நாலு வருஷமா என்ன பண்ணினே? முன்னாடியே கேட்டிருக்கலாமே...நிச்சயமா இந்த கல்யாணத்தே  நானே நடத்தி வச்சிருப்பேன்.ஆனா , நீ உன் பேரேன்ட்சையும் மதிக்கலே..என்கிட்டயும் சொல்லலே..நீ நினைக்கிறபடி இந்த கல்யாணம் நடக்காது, சுபா. சும்மா பெத்தவங்களைப் பகைச்சுக்காதே .....அவங்க சொல்றபடிக் கேளு...இல்லேன்னா அவங்கள கன்வின்ஸ் பண்ணப் பாரு" என்றேன்.

                      "போயும் போயும் உங்களை நம்பி பேசினேனே.... சாரி ...மிஸ்டர் பிரகாஷ்...உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க...we cannot convince anybody anymore "
                      கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் என்னை பெயர் சொல்லி அழைத்த அவளிடம் ஏகமாய் கோபம் வந்தது. "உன் காலை உடைக்கிறேன்  பாரு...கழுதை...என்ன திமிர்.....இப்ப சொல்றேன் கேட்டுக்க.... உன் காதல் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு  நான் பாத்துடறேன்.... " வயிற்றின் உள்ளே ஷிவா ஊற்றி கொடுத்த பீர் குலுங்க பீறிட்டு எழுந்தேன்.

                         றுநாள் காலை ஒன்பது மணிக்கு ,கீதா போனில் கூப்பிட்டு அழுதாள். ராத்திரி எட்டு மணிக்கு வரவேண்டிய ரமா  வீட்டிற்கு வரவில்லையாம்..ஷிவா செய்வதறியாமல் 'திரு திரு' வென்று  முழித்துக் கொண்டிருப்பதாகவும் அழுகையினூடே  கூறினாள். நானும் நளினியும் அவர்கள் வீட்டிற்கு பைக்கில் பறந்தோம்.
                          ஷிவா ஹேங்கோவரில் சொன்னதையே  திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்."எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா"
                           " ஒன்னும் கவலைப் படாதே ஷிவா ...எங்கயும் போயிருக்க மாட்டா ரமா ...ஆபிஸ்லயே தங்கியிருப்பா"
                           "எல்லா எடத்துக்கும் போன் போட்டுப் பாத்தாச்சு... ட்ரேஸ் பண்ண முடியல" என்றாள் கீதா. ஷிவாவோ,""எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா" என்றான், திரும்பவும்.
                           டக் டக்கென்று முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இது . அவளுடைய செல்போன் சர்விஸ் வழங்கு கம்பெனியை தொடர்பு கொண்டு விஷயத்தை நாசுக்காக விளக்கி , அவர்களின் உதவியை நாடினேன். நம்பரை ட்ரேஸ் செய்து விட்டு அழைப்பதாக உறுதி கூறினார்கள். இருப்பு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு மதியம் அந்த கம்பெனியிலிருந்து போன் வந்தது. அந்த நம்பர் நேற்று இரவே திருத்தணி  டவர் சிக்னல் எல்லையில் இருந்ததாகவும் இன்று காலை பதினோரு மணிக்கு மேல் பெங்களூர் ரூட் டவர்களின் சிக்னல் எல்லை நோக்கி நகர்வதாகவும் ,வானிலை அறிக்கை 'ரமணன்' பாணியில் கூறினார்கள்.
                       ஆஹ  ..ஹா... இன்று நல்ல முகூர்த்த நாள்.. கல்யாணம் முடிந்து விட்டது...ரமா  நடத்தி காட்டி விட்டாள்....அவளின் பெற்றோர், என்னை , எல்லோரையும் முட்டாளாக்கி விட்டாள் ....
                       மெதுவாக விஷயத்தை ஷிவாவிடம் கூறினேன். அதிர்ச்சியில் அவன் அப்படியே உறைந்து விட்டான். " பேசாமல் போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்" என்றேன். "வேண்டாம் பிரகாஷ்... மானமே போய்டும்... அந்த சனியன் எக்கேடும் கேட்டுப் போகட்டும்... இனிமே அவ எங்க பொண்ணும் இல்லே.. நாங்க அவளைப் பெத்தவங்களும் இல்லே" என்று ஷிவா மனமுடைந்து அரற்றினான்.
                        "அப்படியெல்லாம் விடக் கூடாது ஷிவா....நம்மளே எல்லாம் ஒரே நாளில ஏமாற்றி முட்டாளாக்கிட்ட அவள சும்மா விடக் கூடாது. கடத்தல் கேசுல அந்தப் பையன உள்ளே பிடிச்சுப் போட்டோம்ன்னா கதறிக்கிட்டு நம்மகிட்ட ஓடி வருவா"

                         ரை மனதுடன் கீதாவும் , ஷிவாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
எஸ்.ஐ இடம் பேசினேன். இன்ஸ்பெக்டர் வரும் வரை கொஞ்சம் காத்திருக்க சொன்னார்.காத்திருந்தோம். ஷிவா மட்டும் புலம்பிக் கொண்டே இருந்தான்.
                          இன்ஸ்பெக்டர் வந்ததும் ,"உங்கள்ல பிரகாஷ் யாரு"ன்னு கேட்டார்.
                          "நான்தான்" என்ற போது எனக்குள் லேசாக வியர்த்தது .
                          "ரமா  உங்க பேர்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. 'மேஜரான  பொண்ணு , தனக்குப் பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கறேன்' ன்னு சொன்னப்போ கால ஓடச்சிடுவேன்னு மிரட்டினியாமே..நீ.....அவ்வளவு பெரிய ஆளா நீ...உள்ள தள்ளி கம்பி என்ன வெச்சிடுவேன்  .. ஜாக்கிரதை" என்று என் மூக்கிற்கு அருகில் வந்து அடிப்பது போல் கையை ஓங்கினார்.
                          விஷயம் விபரீதமாகி விட்டது... ரமா  இப்போதும் முந்திக் கொண்டு எங்களை முட்டாளாக்கி விட்டாள் .சமாதான குரலில் எல்லா விஷயத்தையும் அவருக்கு விளக்கி , 'ரமாவை அப்படி மிரட்டியது என் தப்பு' என்று எழுதிக்  கொடுத்து விட்டு,'தப்பித்தோம்..பிழைத்தோம்'  என்று வீடடைந்தோம்.
                           ரமாவிடமிருந்து போன். "என்ன மிஸ்டர் பிரகாஷ்.... மூக்கு ஒடஞ்சுப் போச்சா....உலகத்தில நீங்க மட்டும்தான் பரமாத்மான்னு நினைக்காதீங்க.... உங்களை மாதிரித்தான் போலீசும். அவங்களும் யாரு முதல்ல கம்ப்ளைண்ட் பண்றாங்களோ அவங்கள நிரபராதியா வச்சுத்தான் விசாரிப்பாங்க....அங்க நடந்த விஷயத்தையும் எனக்கு சொல்லி ஹெல்ப் பண்ணுவாங்க" என்றாள். 
                             ஷிவாவுக்கும், கீதாவுக்கும் என்னைப் பார்ப்பதற்கே சங்கடமாகி விட்டது. "உன்னை அவமானப்படுத்தின அவ எங்க பொண்ணே இல்லேடா", என்று என்னைக் கட்டிக் கொண்டு அழுதான், ஷிவா.                          
                         ல்லாம் முடிந்து , ஷிவா தன் மகளுடன் ஒரு வருஷம் பேச்சு வார்த்தை இல்லாது இருந்தான். பேத்தி பிறந்ததும் "மகளே" என்று இவர்களும் " எனைப் பெற்றவர்களே" என்று ரமாவும் 'ஸ்லோ மோஷனில்'  பாசம் பொங்க கூடிக் கொண்டதும் என்னைப் பொறுத்த வரையில்  அனாவசிய செய்தி.      என்ன ..... ரமாவுக்கு நான்தான் வேண்டாதவன் ஆகி விட்டேன்...பேசுவதில்லை.
***********


Sunday, November 21, 2010

'ரஜினி' காந்தம் !

                              போன சித்திரத்திற்கு நாம் தந்திருந்த கருத்தைப் பார்த்த நம் நண்பர்கள் சிலர் ," என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு? ....எங்களுக்கு ஜாலியான 'எல்லென்' தான்  தெரியும்... இந்த டொய்ங்..டொய்ங்..எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு ஜாலியா உங்க ஒவியங்கள வெளியிடுங்க" என்று அன்பு கட்டளை இட்டதற்கு இணங்கி, இந்த வாரம் சூப்பர் ஸ்டார்- ன் படம். எமக்கு மிகவும் பிடித்த கிரிம்சன் பிங்க் கலரில்.........                                                                                                                     என்ஜாய்....!  மக்களே !!
இது  எப்டி இருக்கு ?




Tuesday, November 16, 2010

பேசும் பொற்சித்திரங்கள்

             துக்கமும் சோகமும் எமது வாழ்க்கைத் தளத்தில் ஆளுக்கொரு பக்கமாய் இருந்து கொண்டு 'சடுகுடு' ஆடின காலகட்டம் அது (ஏப்ரல் '81). ஆறுதலாய் கிடைத்த நிழல், வயலினில்  சாதகம். அந்த அனுபவத்தை அறிமுகப்படுத்திய அதியற்புத நண்பரின் அண்மையும் , அந்த தருணமும் மனதில் உறைந்து கிடக்கின்றன.
             அப்போது வெளிவந்த 'ராஜபார்வை' படத்தின் ஸ்டில்லை எடுத்து வைத்து வரைந்தபோது ஏற்பட்ட பரவசமும்,நிறைவும் கண்களை பனிக்க வைத்தன.அந்த  படம் கமலுக்கு ஒரு மைல்கல் என்றால் , எமக்கோ  இந்த வரைபடம் நினைவுக்கீறல். வாழ்க வயலின்!
சாஸ்வத சோகம் 

Sunday, November 14, 2010

பேசும் பொற்சித்திரங்கள்


           ந்த பென்சில் ஓவியம் செப்டம்பர் ,80 -ம் வருடம் வரையப்பட்டது . அப்போது நாம் ஹைதராபாதில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்றிருந்த போது கண்ணில் தென்பட்ட ஜாக்கி ஷெராப் புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது.  ஏறத்தாழ 30  வயதாகிற இச்சித்திரம்தான்  நம் நினைவுக்கு தெரிந்து பழமையானது!    
பழைய  கம்பீரம்

Friday, November 5, 2010

தீபாவளித் திருநாள்

                     

     தீபாவளித்  திருநாள் 



               ப்படி,இப்படியென்று   2010 -ம் வருடத்திய தீபாவளி , நவம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமையன்று  கங்கா ஸ்நானத்துடன் (!) தொடங்கி , ரஜினி பேட்டியுடன் இனிதே நிறைவடைந்தது. பெரியவர்களின் ஆசிர்வாதங்களும், நட்பு  இதயங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் கைபேசி மற்றும் தொலைபேசிகள் மூலம் சொஸ்தமாக வந்து சேர்ந்தன. குறும்(பு) செய்திகளுக்கும் குறைவில்லை. வழக்கம் போல் நாமும் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து வாழ்த்துகளை வாரி வழங்கினோம்!!

               நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களிடம் ஸ்வீட்டை நீட்டிவிட்டு , "எங்க தாத்தா காலத்திலே' என்று நாம் ஆரம்பித்ததும்  , எம் உத்தம புத்திரன் ,"அப்ப  நான் கிளம்பறேன்"என்று பைக்கை ஓங்கி உதைத்துக் கிளப்பி தன சகாக்களை  காணச் சென்றான். வாழ்த்த வந்த நண்பர்களோ , எஸ்கேப்  ஆக வேறு வழி  தெரியாமல் சரணாகதித் தொனியில் "உங்க தாத்தா காலத்திலே...?" என்று ரொம்ப ஆவலை முகத்தில்  தேக்கிக் கேட்டனர்.

                  இது போதாதா நமக்கு.  கண்களை மூடிக் கொண்டு பழைய நினைவுகள் ஓட்டை டேபிள் பானாக சுற்றத் தொடங்கியது .."தாத்தா காலத்திலே , அவர் வசிச்ச கிராமத்துக்கு போவோம். தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முந்தியே , எங்க பாமிலி, எங்க சித்தப்பாக்கள்  பாமிலிஎன்று 8 பெரியவர்களும் சுமார் 20 சிறிய உருப்படிகளுமாக போய் இறங்குவோம். லேடீஸ் எல்லோரும் பட்சண, பலகார தயாரிப்புகளில் இறங்க , அப்பா,சித்தப்புஸ் எல்லோரும் கடைசி நேர ஷாபிங் செல்வர். தாத்தாவும் பாட்டியும் அவர்கள் காலத்திய தீபாவளியைப் பற்றி சிலாகித்து எங்களுக்கு கதை சொல்லியவற்றை மறக்க முடியுமா? நாங்கள் 20 பேரும் 'ஹா'வென்று வாய் பிளந்துக் கேட்டுக் கொண்டிருப்போம்.

                  அந்த இரண்டு நாட்களும்  'தீபாவளி,தீபாவளி' என்ற பினாத்தல்தான்... 'அவரவர் டிரெஸ்தான் ஒசத்தி' என்று  பீற்றிக்கொள்ளும்போது  ஏற்படும் ஆனந்தத்தை  விட 'அடுத்தவன் டிரெஸ் கலர் நல்லாவே  இல்லே...என்கிட்டே இதே மாதிரி ஒரு சட்டை இருந்தது ... ஒரே மாசத்துல டர்ரர்ர்ர்ர் ..ர்ர்ர்னு கிழிஞ்சுப் போச்சுன்னு'  சொல்லி கடுப்பு ஏத்தறதுல உண்டாகற உற்சாகம் இருக்கிறதே...அட..அட..அடா...!!! பாதிக்கபட்டவனோ / வளோ  தம் அம்மாவிடம் போய்ச் சொல்லி, அங்கே ஒரு சின்ன பாலிடிக்ஸ் அரங்கேறும்.

                 எங்களுக்கு மொத்தம் மூன்று சித்தப்பாக்கள். எல்லோரும் ,'தாம்..தூம்' என்று செலவழிப்பார்கள். ஒருவர் பட்டாசே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வருவார்.(எழுபது...எண்பதுகளில் ஆயிரம் என்பது பெரிய தொகை) இன்னொரு சித்தப்பு  ஆம்பிளப் பசங்களுக்கு மோதிரம் , சிகப்பு பிரேம் கூலிங் கிளாஸ் , கலைடாஸ்கோப் என்றும், பொம்பளப் பசங்களுக்கு ரிப்பன், வளையல், நெயில்பாலிஷ் என்றும் அள்ளி வழங்குவார். மூன்றாவது சித்தப்பு, பரிவாரங்கள் புடை சூழ ஹோட்டல் சென்று முந்திரி போட்டு ரவா தோசை வாங்கிக் கொடுத்து வீட்டில் வந்து தாத்தாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வார். "வீட்டில இத்தனை செய்யும் போது எதுக்குக்  கூட்டிக்கிட்டுப் போனே" என்று தாத்தா சத்தம் போடுவார். பாவம் சித்தப்பா .

                  தீபாவளி நாளன்றைக்கு விடியல் மூன்று  மணிக்கெல்லாம் எழுந்து விடுவார் எம் அப்பா. இரண்டு பெரிய தவலைகளில் கிணற்று நீரை நிரப்பி , மண் அடுப்பில் ஏற்றி வைத்து வெந்நீர் வைத்து விட்டு எங்களை எழுப்புவார். " தீபாவளி வந்துடிச்சி... எழுந்திருங்க..எழுந்திருங்க " என்று எம் அப்பாவின் குரலைக் கேட்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து , புழக்கடைப்பக்கம் ஓடுவோம்.

                    ஆஜானுபாகுவாய் இருப்பார் தாத்தா. முதலில் முதல் பேரனுக்கு தலைக்கு சுடச் சுட எண்ணெய் வைத்து விட்டு, பிறகு மற்ற பேரன் , பேத்திகளுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். எண்ணெய் பட்டு கண்கள் ஒரு மாதிரி ஜிவு ஜிவுக்க போதா குறைக்கு , சரியாக காய்ந்திராத ஈர விறகு வேறு தன பங்கிற்கு புகையைக்  கிளப்பி பாடாய்ப் படுத்தும்.

                      எண்ணெய்  உடம்பில் சூடாய் வெந்நீர் ஊற்றப் படும்போது ஒரு சிலிர்ப்பு உண்டாகும். அதை அனுபவித்தபடி  இருக்கும்போதே சீயக்காய் தேய்க்கப்படும். அந்த காலத்தில் ஈகிள் பிராண்ட் சீயக்காய் பொடிதான். கண்ணில் பட்டதோ ....செம எரிச்சல் எரியும். இப்படி கண்ணில் சீயக்காய் விழுந்து ரெண்டு மூணு உருப்படிகள் 'வ்றாட்..வ்றாட்'டென்று கத்திக் கொண்டிருக்கும்.

                        குளித்து வந்தவுடன் தாத்தாதான் எல்லோருக்கும் அவரவருடைய துணிமணிகளை  சந்தன, குங்குமம் இட்டு ஆசிர்வாதம் செய்து கட்டிக் கொள்ள சொல்வார். அதற்கப்புறம் பெரியவர்கள் ஸ்நானம் பண்ணின  பிறகு, அவர்களின் பந்தோபஸ்துடன் வெடி,பட்டாசு, மத்தாப்பு வெடிக்க கிளம்புவோம்.

                         பொடிசுகள் நாங்கள் பொட்டு கேப், கம்பி மத்தாப்பு, கலசம், பாம்பு மாத்திரை, தரை சக்கரம் என்று ஜோலியைப் பார்க்க சித்தப்பாக்கள், அப்பா, தாததா எல்லோரும் பெரிய,பெரிய வெடிகளை வெடிப்பார்கள். தாத்தா ,ஒரு உபகரணம் வைத்திருப்பார். அதில் கந்தகத்  தூளை நிரப்பி,மூடி, ஓங்கி பாறாங்கல்லில் அடிக்க கிராமமே அதிரும். எங்கள் காதுகளுக்குள் 'ங்கொய்'என்கும்.

                        அதற்குப் பிறகு, தீபாவளி மருந்து சாப்பிட்டு , பட்சணங்களை ஒரு கை பார்ப்போம்.

                       இப்படி அழகாய் கொண்டாடிய தீபாவளி எங்கே? இப்போது ஏனோ, தானோவென்று  கொண்டாடும் தீபாவளி எங்கே? என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது.டெலிவிஷன் பாதியும், கணிப்பொறி பாதியுமாக நம் இளம் தலை முறையினரை  கட்டிப் போட்டு விட , செலேப்ரேஷன்  என்பது கூட ஒரு சம்பிரதாயமாக ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் தாய்மார்கள்தான் அடுத்த தலைமுறையினர்க்கு நம் பாரம்பர்ய விழாக்களைப் பற்றி எடுத்துச் சொல்லி  அவர்களுக்கு அவற்றின் சிறப்புகளை உணர்த்த வேண்டும். "எம் பொண்ணு கிச்சன் பக்கமே வர மாட்டா.....கடையில போய்  என்ன வேணுமோ வாங்கிட்டு வந்து தீபாவளியை கொண்டாடிட வேண்டியதுதான் ..."என்று நம் தாய்மார்கள் கூறினால் , லட்டு,  மைசூர் பா, அச்சு முறுக்கு போன்ற பட்சணங்களை நம் வீட்டில், நாமே மிக சுகாதாரமாக செய்யலாம் என்பது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

                   யோசிப்போம். அடுத்த தீபாவளியை நிறைய மக்களுடன், உற்சாகமாக , நிறைய பலகாரங்கள் நம் வீட்டிலேயே செய்து ,டெலிவிஷனற்ற தீபாவளியாகக் கொண்டாட உறதி ஏற்போம்.

                    நான்  கண் விழித்த போது ஸ்வீட் சாப்பிட்டு முடித்து விட்டு நண்பர்கள் எப்போதோ கிளம்பிப் போயிருந்தனர் !!!



         

Monday, November 1, 2010

'வ' மேல் 'வ'
(தலைப்பு குறித்த விளக்கம், இறுதியில்)
கஸ்மாத்தாக , யதேச்சையாக ,தெய்வாதீனமாக ,தெய்வ சங்கல்பமாக - இந்த நான்கு வார்த்தைகளில் எதை வேண்டுமானாலும்  இன்று காலை நடந்த ஒரு சந்திப்பிற்கு நீங்கள் உபயோகப் படுத்தி கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. 

சென்னை செல்லும் 'பல்லவனை'ப் பிடிக்க ஸ்ரீரங்கம் ஸ்டேஷனிற்கு ஐந்தே  முக்காலுக்கெல்லாம் வந்து விட்டேன். அதிகாலை நேரத்து சிலு சிலு காற்றை அனுபவித்தபடி , தொப்பையை தள்ளிக் கொண்டு 'உஸ்..புஸ்' என்று பிளாட்பாரத்தில் வாக்கிங் போகும் மனுஷாளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு என்று பல்லவன் லேட். ஆறு ஐம்பதுக்குத்தான் எதிர்பார்க்கப்படுவதாக வார்த்தைகளை வெட்டி வெட்டி அறிவித்தார்கள் .

'சரி, நிற்கும் நேரத்தில் டிபனை முடித்து விடலாமென்று' பிளாட்பார கடையை நோக்கி நடந்த போது தான், அந்த நடுத்தர வயது தம்பதிகளைப் பார்த்தேன். 'நமக்குத் தெரிந்த ஜனங்கள்...ஆனால் 'டக்'கென்று ஞாபகம் வரவில்லையே' என்ற மன நமைச்சலுடன் நான்கு இட்லிகளை சாப்பிட்டு முடித்தேன்.

'யார்? யாராயிருக்கும்?... கீழச் சித்திரை வீதி ரங்கன் சொந்தக் காரர்களோ ? இல்லையே...அடையவளைஞ்சான் ஆரவாமுதனின் வீட்டில் பார்த்திருக்கிறோமோ? இல்லை ...திருவானைக்கா......'என்று பலவித யோசனைகளில் நான் சிக்கித் திளைத்துக் கொண்டிருந்ததை சற்றும் உணராத அந்த ந.வ.தம்பதிகள் இருபதடித் தொலைவில் என்னமோப் பேசிக் கொண்டிருந்தனர். 

பல்லவன் வந்ததும் , ஏசி சேர் கார் சீட்டில் நான் சென்று அமர, வண்டி கிளம்பியது. கொஞ்சம் ஆசுவாசமானதும் மனது மீண்டும்,'யார்...யார்..' என்று பிறாண்ட ஆரம்பித்தது.
'என்ன ஆச்சர்யம்... அவர்களும் எனது கம்பார்ட்மெண்ட்டை  நோக்கி, அதுவும் நான் அமர்ந்து கொண்டிருக்கும் சீட்டருகில் வந்து நின்று நம்பர் சோதித்துக் கொண்டிருக்க, "சீட் நம்பர் என்ன?" என்றேன். எனக்கடுத்த இரண்டு சீட்டுகளும் அவர்களுடையது!! 
அமர்ந்தனர். தங்களுக்குள் சன்ன குரலில் என்னமோ பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் கழித்து நான்தான் ஆரம்பித்தேன்,"நீங்க ஸ்ரீரங்கத்தில" என்று சாங்கோபாங்கமாகத் தொடங்கி , அந்தப் பெண்மணி என் நண்பன் முகுந்தனின் அக்கா என்றும், முகுந்தனுக்கு மட்டும் அவர்கள் குடும்பத்திலேயே சரியான வேலை கிடைக்காமல் , ஏதோ பிசினெஸ்   செய்து  கொண்டிருப்பதுப் பற்றியும் அறிந்து  கொண்டேன். ( நாங்கள் பேசின மற்ற  விஷயங்கள் இந்த கதையின் எல்கைகளுக்கு அப்பாற்பட்டதால், அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில், பிறிதொரு கதையில் எழுதுகிறேன்.)

முகுந்தனும்  நானும் ஸ்ரீரங்கம் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படித்து, சேஷாய் பாலிடெக்னிகில் 'டிப்ளமா' முடித்தோம். படிப்பை முடித்த கையுடன் 'வாழ்வே மாயம்' படம் பார்த்தோம். நாங்கள் ஐந்து  பேர் ஜமா சேர்ந்து ஸ்ரீரங்கத்தையே சைக்கிளில் சுற்றி சுற்றி வந்தோம். நானும் முகுந்தனும் மட்டும் எலெக்ட்ரிகல்  டிப்ளமா ஆனதால் ,வீட்டு வயரிங் , எரியாமல் போன லைட்டை சரி பார்த்து, ஓடவே ஓடாத டேபிள் பேனை கிரீஸ் அடித்து ஓட்டி கிடைத்த காசில், ஐந்து உறுப்பினர்களுடன்  'கமல்' ரசிகர் மன்றம் தொடங்கினோம். நாங்கள் ஐந்து பேரும் கமல் மாதிரியே ஸ்டெப்கட் செய்து கொண்டு,பெல்பாட்டம் பேன்ட் அணிந்து கொண்டு  , செய்த அலம்பல்களை ஸ்ரீரங்கத்தின் முன்னாள் தேவதைகள் _ இந்நாள் மடிசார் மாமிகள் , அவ்வளவு லேசில் மறந்திருக்க மாட்டார்கள். தினசரி , சாயங்காலம் மொட்டை கோபுரத்து சலூனில் கூடி , ஓசி சீப்பில் தலை வாரியபடி மறு நாளுக்கான திட்டமிடலில் ஈடுபடுவோம்.

எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..... அக்கௌண்ட்ஸ் படித்திருந்த ரங்குவுக்கும், 'மொக்கு' சீனுவுக்கும் பேங்க்கில் வேலை கிடைக்க , ராமானுஜனை அவன் அப்பா எங்களோடு சேர்ந்து பார்த்தால் காலை ஒடித்து விடுவதாக மிரட்டியதால் அவனும் ஒதுங்க, நானும் முகுந்தனும் மட்டும் 'கமலைக்' கட்டிக் கொண்டு அழுதோம். எங்கள் பேட்சிலேயே  நாங்கள் இருவர் மட்டும்தான் உருப்படியாக எதுவும் வேலை கிடைக்காமல் ரொம்ப காலம் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் முகுந்தன் வீட்டிற்கு அவன் அப்பா இருக்காத சமயங்களில் அவ்வப்போது செல்வதுண்டு. இந்த அக்காவிற்கு ஏற்கெனவே கல்யாணமாகி விட்டதால், முகுந்தனுடைய வீட்டில் இவர்களை நான் எப்போதோ ஓரிரு முறை மட்டும் பார்த்திருக்கிறேன்.

ஒரு தரம் அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்த போது, வீடு கொள்ளாமல் கூட்டம்.வைகுண்ட ஏகாதசிக்காக ஒரு வாரம் முன்பே உறவினர்கள் வந்து ரொம்பி இருந்தனர் . "வாடா , ரகுபதி  ...நாம திண்ணைல உக்காந்துண்டு பேசலாம்" என்று முகுந்தன் என்னை இழுத்துக் கொண்டு வந்த நேரம் , அவனுடைய உறவினர் ஒருவர் அவன் அம்மாவிடம் "ஒண்ணும் கவலையே படாதே,எச்சுமி.... முகுந்தன் ஜாதகத்த அலசிப் பாத்துட்டேன் ... ஓஹோன்னு இருப்பான் பாரு.... அவனைப் பத்தி நீ கவலையே பட வேண்டாம்.. பிசினெஸ் பண்ணுவான்.... கால்மேல கால் போட்டு உக்காந்துண்டு சம்பாதிப்பான்..... நான் சொல்றது நடக்கறதா இல்லியான்னு வேணா பாரேன்" என்று ரொம்ப நம்பிக்கையா சொன்னார்.

முகுந்தனின் தாயார்," நீ சொன்னா சரிண்ணா" என்று ஒன்பது கஜப் புடவையின் முந்தானையில் மூக்கை சிந்திக் கொண்டே ,விரல்களால் கண்களைத் துடைத்துக்  கொண்டாள்.

"இதே ஊரிலயே பிசினெஸ் பண்ணினா , மன்றத்தையும் நடத்துவோம்டா" என்றான் முகுந்தன்.

"ன் பேர் என்னன்னு சொன்னே?" என்று முகுந்தன் அக்கா கேட்டதில் திடுக்கிட்டு நிஜ உலகத்திற்கு வந்தேன்.

"ரகுபதி" என்றேன்.

"முகுந்தனோட கால் ரெண்டையும் எடுத்தாச்சு, தெரியுமோல்யோ" என்று அடுத்த அதிர்ச்சி  அம்பு என் மேல் குத்தி நின்றது.

"என்னத்து? காலை ...எடுத்தாச்சா? என்ன சொல்றேள்?" என்று  அதிர்ந்து கத்தியே விட்டேன்..

"ஒனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் ...... போன வருஷம், ஒரு ஆக்சிடெண்ட்ல அடிபட்டு பொழச்சதே புனர்ஜென்மம்னு ஆயிடுத்து..கால எடுக்க வேண்டியதா ஆயிடுத்து"

"அடப் பாவமே... இப்ப என்ன பண்றான்?"

"முகுந்தன்,கூரியர் கம்பெனியில   வேலைப் பாத்திண்டு இருந்த போது விபத்து நடந்துது.கால் போனதுக்கு அப்புறம் இங்கே தாம்பரத்தில ஒரு செல்போன் சர்வீஸ் கடை ஆரம்பிச்சு நடத்திண்டு இருக்கான்."

மாம்பலத்தில் இறங்க வேண்டிய நான் தாம்பரம் வந்ததும் இறங்கிக் கொண்டேன். அக்கா கொடுத்த முகவரியை நோக்கி நடந்தேன். "முகுந்தா.. என் இனிய நண்பனே... உனக்கு என்ன ஒரு சோதனை!! 'கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பான்'ன்னு சொல்லப்பட்ட ஜோசியமும் உன்னளவில தோத்துப் போய்டுத்தே..முகுந்தா" என்று அரற்றியபடியே அவன் கடையைக் கண்டுபிடித்தேன்.கடையில் நாலைந்து கஸ்டமர்கள் இருந்ததால், கொஞ்சம் வெயிட் பண்ணி, கூட்டம் கலைந்ததும், அவனை நெருங்கினேன்.

 என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. 'என்ன சார் வேணும்?" என்றான்.
"முகுந்தா... நான் ரகுபதிடா " என்றேன்.
என்னை எனது பிரெஞ்சு தாடியிலிருந்து மைனஸ் பண்ணிப் பார்த்து விட்டு ,"டேய்..ரகு " என்று கத்தியவன் கண்களில் மின்னல் வெளிச்சம்..."எப்படீடா இங்கே?' என்றான்.
"பல்லவன்ல பெரியாக்காவைப் பாத்தேண்டா...உன்னப் பத்தி சொன்னா...உடனேப் பாக்கணும்னு தோணித்து...ஓடி வந்துட்டேன்டா.."

சேரை விட்டு எழுந்திருக்க பிரயத்தனித்தான்... "கால் ரெண்டும் போய்டுச்சுடா"என்றவன் குரலில் சுய கழிவிரக்கம் எட்டிப் பார்த்தாலும் ,"பொழச்சுட்டேண்டா ...எப்படியும் மேல வந்துடுவேன்.." என்று நம்பிக்கை வார்த்தைகளாய் வெளி வந்தன.

" கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பேன்னு ஒன்னோட சொந்தக்காரர் சொன்னது ஞாபகம் வர்றதுடா,முகுந்தா" என்ற என் குரல் உடைந்ததை என்னால் உணர முடிந்தது.

"சரியாத்தாண்டா  சொல்லியிருக்கார்... இப்ப பாரு ... இந்த கால் போய்ட்டா என்னா... வந்து நிக்கற அத்தனை  பேர் மொபைல் போனுக்கும்  டாப் அப், ரீ சார்ஜ்னு 'கால்' மேல 'கால்' போட்டு சொல்லித்தான் ஏற்பாடு பண்ணறேன்" என்று கட,கடவென சிரித்தான், முகுந்தன்.

எனக்கு ,ஏனோ  சிரிக்கத் தோன்றவில்லை. 


*************

(தலைப்பு குறித்த விளக்கம்:  தமிழில் 'கால் '  (1 /4 ) ,என்பதற்கு   'வ' என்ற எழுத்து எழுதப்பட்டது.)





























Friday, October 29, 2010

ரசமான ரசம் !
(இந்த கதையைப் போல்  எல்லோருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்திருக்கும்.... 'நமக்கு  முன் கூட்டியே இப்படி நடக்கும் என்று தெரியாமல் போனதே' என்று எத்தனையோ முறை புலம்பியிருப்போம்... அப்படித்தெரியாமல் போவதுதான்  வாழ்க்கையின் சுவாரஸ்யமே! )

"என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா ,ரசமில்லையா  ?"-என்றான் ரூபன், சலிப்புடன்.(அப்படி கேட்டிருக்க வேண்டாம்.)

"ஒங்க அருமை புள்ளையை   கடைக்கு அனுப்பி தக்காளி,கொத்துமல்லி,பூண்டு வாங்கிட்டு வரச் சொல்லுங்க ...வேணா ரசம் வைக்கிறேன்" -இது சுமதி.

"குயந்தை புஸ்தகத்தே எடுத்து வெச்சிண்டு  படிக்கறதே அபூர்வம்...படிக்கட்டும். நானே போயி வாங்கிட்டு வந்துடறேன்" என்றபடி  செய்தித்தாளை  கடாசி விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். (கிளம்பியிருக்கவேண்டாம்.)

செருப்பை மாட்டிக்கொண்டிருக்கையில் "இந்தாங்க ஸ்கூட்டர் சாவி" என்றாள் சுமதி.

"ஆமா இங்க இருக்கற மார்கெட்டுக்கு ஸ்கூட்டர்ல போகணுமா?..நடந்தே போயிட்டு வந்துடறேன்" என்று தெருவில் இறங்கினான்.  (ஸ்கூட்டர்லியே போயிருக்கலாம்)

நடந்து மெயின் ரோடை அடைந்ததும், ட்ராபிக் சிக்னலுக்காக அவனை ஒட்டி வந்து நின்றது ஒரு பேருந்து. 'அவ்வளவு தூரம் நடக்கணுமா? ரெண்டு ரூபா கொடுத்து மார்க்கெட்டுக்கு போயிடலாமே..' என்று (தோன்றாமலிருந்திருக்கலாம்) தோன்றியது.

பஸ்சிலும் கூட்டமில்லை. பின்பக்க நுழைவு வழியாக ஏறி சீட்டில் அமர்ந்தான், ரூபன். கண்டக்டர் , டிரைவருக்கருகில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.'இங்க வரட்டும்.. டிக்கட் வாங்கிக் கொள்ளலாம்' என்று இரண்டு ரூபாய் நாணயத்தை கையில் வைத்துகொண்டு வெளியில்  வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.(அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்திருக்கலாம்)

ஏதேச்சையாக  ரூபன் பஸ்சிற்குள் பார்க்க, அவனுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜிப்பாவை ஒரு ரௌடி 'ப்ளேடு' போடவும் ரூபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது! "ஐயோ..திருடன்" என்று கத்தியபடி 'ஆக்ஷன் கிங் அர்ஜுனாக' தன்னை பாவித்துக் கொண்டு ,ரூபன் அந்த ரௌடியின் முதுகுப் புற சட்டையைக் கோர்த்துப் பிடித்து ஓங்கி ஒரு குத்து விட்டான். 'சர்ட்'டென்று  திரும்பிய ரௌடி , பின்பக்க நுழைவு வழியாக இறங்கி ஓட முயல, ரூபனும் அவனைத் துரத்திக் கொண்டு ரன்னிங்கிலேயே இறங்கி துரத்த, அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ரௌடி, ரூபனுடைய  இடது  கையில்  'சரக்'கென்று கத்தியை செருகி வெளியே எடுத்ததில் 'குபுக்'கென்று ரத்தம் கொட்டியது. கொட்டிய 'ஏ' பாசிடிவைப்  பார்த்த  ரூபன், மயங்கி சரிய  ரௌடி'எஸ்'ஆனான்.

'சடன்'  ப்ரேக் போட்டு நின்ற பஸ்சில்லிருந்து கண்டக்டரும், பர்சைப் பறி கொடுத்த  பெரியவர் உட்பட அனைவரும் இறங்கி ஓடி வந்தனர்.

"பிக்பாக்கெட்டுங்க  நிறைய பேர் சுத்தறுதுனால நான் பைசாவே பர்சுல வைக்காமே பைக்குளையே வெச்சுக்குவேன்...இது  தெரியாம இப்படி  குத்துப்படணும்னு ஒன் தலையெழுத்து  " என்று பெரியவர் சொன்னதும்,  "யோவ்.. டிக்கெட் வாங்கிட்டியா இல்லியா" என்று கண்டக்டர் கேட்டதும் மயக்க நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த ரூபனுக்கு அமானுஷ்யமாகக் கேட்டது.

***** 
ஹாஸ்பிடல்.

கையில்  கட்டுப் போட்டபடிக் கட்டிலில் கிடக்கும் ரூபனுக்கருகில் மூக்கை முந்தானையில் சிந்தியபடியிருந்தாள், சுமதி."என்னங்க... பசிக்குதா... சாப்பிடறீங்களா?" என்றாள்.

"ம்ம்ம் ...ம்ம்"   என்று முனகியபடி உட்கார்ந்தான் , ரூபன்.

தட்டில் ,சோறிட்டு சாம்பாரை ஊற்றியவளிடம் "என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா,ரசமில்லையா  ?"என்று இத்தனைக்கும் காரணமான முதல் வரி கேள்வியைக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான், ரூபன்.





Wednesday, October 27, 2010

அனிதா

நான்தான் டெலிபோனில் அழைத்தேன்."ஹலோ அனிதா, நான் ஜெகன் சென்னையிலிர்ந்து பேசறேன்.எப்படி இருக்கீங்க?
"ஓ ! ஜெகன் , நான் நல்லா இருக்கேன் "-குரலில் சின்னதாய் ஒரு தயக்கம்.
"ஒங்க ட்ரான்ஸ்பர் ஆர்டர் பார்த்தேன்.வெல்கம்  டு அவர் நுங்கம்பாக்கம் பிராஞ்ச். எப்ப ஜாயின் பண்ணப் போறீங்க?"
"வர்ற புதன்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன் " 
என் உற்சாகத்தின்  பத்து சதவீதம் கூட அனிதாவின் குரலில் இல்லை.ஏன்... என்னாயிற்று? 
"புதன்கிழமை நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுங்க....டிபன் முடிச்சிட்டு ஆபிஸ் போகலாம் " என்றேன்.
"எதுக்கு ஜெகன்.. சிரமம்.. எங்க அண்ணன் வீடு நுங்கம்பாக்கம் பிராஞ்ச்க்கு பக்கத்திலேதான். அங்கிருந்து வந்துடுவேன்." என்றவள் அவசர அவசரமாக "பிராஞ்ச்ல மீட் பண்ணுவோம்" என்று சொல்லி போனை துண்டித்தாள்.
ம்ம்ம்.ம்ம்  கிட்டத்தட்ட 15 வருட பழக்கம். நான் திருச்சியில் கிளார்க்காக வேலை  பார்த்த போது, அனிதா  எனக்கு ஜூனியராக ஜாயின்  செய்தாள். நாகர்கோயில் பெண்.மிதமான அழகு. மிகவும் திருத்தமாக  உடை அணிந்திருந்தாள் .ஆனாலும்  பார்வையில் ஒரு மிரட்சி.கூடவே வந்த அவள் அப்பாதான் எங்கள் எல்லோரிடமும் "கொஞ்சம்  பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டுப் போனார்.
நான் உள்பட சில நண்பர்கள் அவளுக்கு நட்பாக இருந்து பேங்க்கின் அன்றாட அலுவல் விஷயங்களை சொல்லிக் கொடுத்தோம். கற்பூர புத்தி. ஒரே வாரத்தில் பிடித்துக் கொண்டாள் . அப்போது , திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏயில் தங்கியிருந்து ஆபீசுக்கு வந்தாள். அவள் ஊர் அளவுக்கு சாப்பாடு நன்றாக இல்லை என அடிக்கடி புலம்புவாள். நாங்கள் வீட்டிலிருந்து  எடுத்து வரும்போது அவளுக்கும் சேர்த்தே எடுத்து வருவோம்.ஒன்றாக லஞ்ச சாப்பிடுவோம்.
அந்த வருட  தீபாவளியின்போதுதான் அவள் எங்கள் எல்லோருக்கும் மிக நெருக்கமானாள். தீபாவளியை  ஒட்டி அவள் ஹாஸ்டல் ஒட்டுமொத்தமாக    
காலியாகிவிட அவள் நாகர் கோயிலுக்கு போகாததால் எங்கள்  வீடுகளுக்கு விசிட் அடிப்பதாக ப்ளான். ஒரு லேடி கிளார்க் தீபாவளிக்கு முதல் நாளிரவு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டார்கள். அங்கே தங்கி தீபாவளி கொண்டாடி விட்டு மறு நாள் என் வீட்டிற்கு வந்தாள். 
என் அம்மா அனிதாவிற்கு ஒரு சாரி வைத்துக் கொடுத்து அதை அணிந்து கொள்ளச் சொன்னாள். அம்மாவின் அந்த அன்பிலும், எங்களின் கூட்டுக் குடும்ப அட்டகாசங்களிலும் நனைந்து நெகிழ்ந்து போனாள். "ஜெகன்,ஒங்க அம்மாவுக்கு நான் க்ரிச்டியன்னு தெரியுமா?"ன்னு கேட்டாள். மதியான சாப்பாட்டுக்கு முன்பு எங்க சித்தப்பா "அனிதாவோட ஜீசசும் நம்பளோட கிருஷ்ணரும் ஒண்ணுதான்னு" ஒரு பெரிய உரை நிகழ்த்தினார். 
எங்கள் வீட்டு 18 உருப்படிகளுடனும் அனிதாவிற்கு நன்றாக டயம் பாஸ் ஆனது.
 
"ரொம்ப்ப்ப பிடிச்சிருந்தது" என்றாள், மறு நாள் ஆபீசில்.
அதற்க்கப்புறம் என் வீட்டு சாப்பாடு முதலில் அவள் கைக்குப் போய் விட்டுத் தான் எனக்கு வரும்.என் நண்பர்கள்தான் ,"ஏண்டா ஜக்கு, அம்மாகிட்ட சொல்லி மேலாக உப்பு போட்டு அனுப்ப சொல்லுடா" என்பார்கள். அவளுடைய பிரத்யேக ஷாப்பிங்களுக்கு நளினி,ஜெயந்தி  ஆகியோரும் , புத்தகம் மற்றும் இதர ஷாப்பிங்களுக்கு நான் , சுந்தர், பாலா மூவரும் கம்பெனி கொடுப்போம்.
இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான்.....
ஒரு முறை அனிதா நாகர்கோயிலுக்கு லீவில் போனாள். நானும், சுந்தரும்  பஸ்சில்லேற்றிவிடப் போனோம். நடு வழியில் பசித்தால் இருக்கட்டும்  என்று கொஞ்சம் பிஸ்கட்டும்,பழங்களும் வாங்கிக் கொடுத்தேன்."தேங்க்ஸ்"என்றாள்.

நான்கு நாள் லீவு முடிந்து வந்த அனிதா, எதையோ பறிகொடுத்தவள் போல இருக்கவும், நண்பர்கள் "என்னாயிற்று" என்று விசாரித்தோம்.ஒன்றும் பதில் இல்லை. கலகலப்பு இல்லாமல் அவள் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது.  நாங்கள் எங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டதுதான் மிச்சம்.அனிதாவிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்! 

லஞ்சின் போது கூட அனிதா  தனியாக சாப்பிடத் தொடங்கினாள். "என்னன்னும் சொல்ல மாட்டேங்கிறா...ஊரில் ஏதாவது ப்ராப்லமோ  என்னமோ...கொஞ்ச நாள் அவ போக்கிலேயே விட்டு விடுவோம்" என்றாள், ஜெயந்தி.

விட்டு விட்டோம்.

ஒரு நாள் நான் கேஷில் இருந்தேன். மாதக் கடைசியானதால் வங்கியில் கூட்டமும்  அதிகம் இல்லை. பணத்தை கட்டி வைத்துக் கொண்டிருந்தேன். அனிதா என் காபினுக்குள்  வந்தாள். "ஜெகன்,ஒரு வாரமாகவே என் மனசு சரியாகவே இல்லை. நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ...." என்றாள்.
"என்ன?" 
"ஐ லைக் யு" என்றாள்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது ! இன்ஸ்டண்டாக வியர்த்தது!! 
எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டேன். "என்ன சொல்றே,அனிதா?" என்றேன் 
"எஸ்... வாழ்ந்தா உன்னோடத் தான் வாழணும்னு நினைக்கிறேன். உன்னை,உன்னோட அன்பை, உன்னோட குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...அதிகப்பிரசங்கித்தனமா பேசறேன்னு நினைக்காதே...லைப் பூரா உன் கூட வாழணும்னு நினைக்கிறேன். மறுக்க மாட்டியே?" என்று கண்கள் கலங்கக் கேட்டாள்.
"சாயங்காலம் பேசலாம்"  என்று சமாதானமாய்க்  கூறினேன்.

அன்று மாலை அவளைச் சந்தித்து இந்த ஒரு தலைக் காதல் எப்படி திருமணமாய் பரிணமிக்க முடியாது என்பதை மிகுந்த கவனமான வார்த்தைகளைக் கொண்டு அவள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினேன். அனிதா  தன மனதை மிக மிக அந்தரங்கமாக என்னிடம் பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றியையும்  , அவள் காதலை நான் ஏற்றுக் கொள்ள இயலாத நிலைக்கான காரணத்தையும் மிகவும் பக்குவமாக சொன்னேன் .

அழுகையினூடே ,புரிந்து கொள்ள முயற்சிப்பதாக  சொன்னாள்."என்னை நிராகரித்து விட்டாலும் உன் மேல் எனக்கு கோபம் இல்லை .....உன்னிடம் எனக்கு இன்னும் காதல்தான் அதிகமாகிறது" என்றாள், கண்களைத் துடைத்தபடி.

                   ******************
இப்படியே 15 வருடங்கள் ஓடி விட்டன. இப்போது, மீண்டும் அனிதா....ஆனால், திருமணமாகி, தாயாகி விட்ட அனிதா ! 

புதன்கிழமை ஜாயின் செய்தாள் . மேனேஜர் , சக அதிகாரிகள் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். மதியம் , அவள் அண்ணி கட்டி கொடுத்த லஞ்ச்சை சாப்பிட்டாள். என் பாமிலியைப் பற்றி விசாரித்தாள். அவள் கணவரைப் பற்றியும், மகனைப் பற்றியும் பேசியபோது பெருமிதப்பட்டுக்கொண்டாள்.

ஒரு வாரம் சென்ற பின்பு, கொஞ்சமாய் பேசத் தொடங்கினாள் . வீட்டிற்கு வர அழைப்பு விடுத்தேன். மெல்லிய புன்னகையே அவளின் பதிலானது.

சனியன்று சீக்கிரமே வேலைகள் முடிந்து விட்டன. கிளம்பினோம். "அனிதா, ஹவ் அபௌட் எ காபி? " என்றேன்.
"ஷ்யூர் " என்றாள்.
'எல்லென் கார்டன் காபி'க்கு சென்றோம்.இரண்டு காபி ஆர்டர் செய்தேன்.
"இப்ப தெளிவாயிட்டீங்களா,மேடம்" என்றேன். புரிந்துகொண்டிருப்பாள்.
"எப்பவுமே தெளிவுதான்" என்றாள்.
"நாம எப்பவும் போல நல்ல நண்பர்களாகவே இருப்போம்" என்றேன்.
"ம்ம்ம்ம் ..ம்ம் .. ஜெகன், நீங்க என்னை எப்பவும் நல்ல பிரெண்டாகவே நினைக்கறீங்க.. அப்படியே இப்பவும் நினைச்சுக்குங்க ..அதுதான் உங்களோட உயரிய  குணம்."
ஒரு கெட்டிலில் பால், சிறிய கிண்ணத்தில் டிகாக்ஷன் , மற்றொரு கிண்ணத்தில் சர்க்கரையும் டேபிளுக்கு  மேல் வைத்தார் ,பேரர்.
லேசாக செருமிக் கொண்டாள், அனிதா."நட்பு எப்போதும் பரிசுத்தமானது,ஜெகன்.அது பௌதீக மாற்றம் மட்டுமே ஏற்படுத்தக்  கூடியது .நட்பை மீறி சுயநலமோ ,துளியேனும் காமமோ தலை தூக்கி அந்த நட்பினால் கிடைக்கும் உறவு தனக்கு எப்போதுமே வேண்டும், தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்குகையில், அது காதலாக உருமாறுகிறது. நட்பு எப்படி பரிசுத்தமானதோ அதைப்  போலவே, காதலும் தூய்மையானதே! ஆனால் வெவேறு என்டைடி. மேலும் நட்பு ,காதலாக மாறும் சாத்தியம் உள்ளது. ஆனால் காதலாக பரிணமித்தபின் அது சாகா வரம் பெற்ற காதலாகவே இயங்குகிறது. மீண்டும் எக்காலத்திலும் அது நட்பாக பரிமளிக்க முடியாது"
"ஓக்கே..ஓக்கே.... காபி எடுத்துக்குங்க, அனிதா" என்றேன்,சூழ்நிலையை கலகலப்பாக்கும்  வகையில்.
பாலை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டாள். "இந்த பாலில் டிகாக்ஷன் ஊற்றப் படுகிற வரையில் இது தூய்மையான பால். டிகாக்ஷன் ஊற்றப்பட்டு விட்டால் , அது காபியாகி விடும். அதன் பின்பு அது பால் இல்லை. மீண்டும் பாலாக மாறவே  முடியாது,
ஜெகன்" என்றாள். இதை விட நாசுக்காக எவராலும் பேச முடியாது என்று எனக்குத் தோன்றியது.
நானும் காபி கலந்து கொண்டேன். எனக்கு சர்க்கரை போட்டுக் கொண்டேன். அனிதாவின் கோப்பைக்கும் சர்க்கரையை இடும் வகையில், கப்பை நகர்த்தி "சர்க்கரை  " என்றேன்.
"எனக்கு வேண்டாம்" என்றாள்.
"ஏன்  ....டியாபெடிக் பயம் ?' என்றேன்.
"அப்படியெல்லாம் இல்லை... கசப்புக்கு பழகிகிட்டேன்" என்றாள், அனிதா.

வெளியில் வந்தோம்.....அதிகம் பேசவில்லை. நெருடல் இல்லாத வேறு வேறு பாதைகளில் பயணப்பட்டோம். 
*  *  *  *  *










Tuesday, October 19, 2010

என் அருமை கீதா!!!

ன்று காலை வாக்கிங் போனபோது ,ஹெட்போனை எடுத்துப் போகவில்லை. இது சமீப காலங்களில் என் வயதின் காரணமாக ஏற்படும் மறதியின் விளைவு.

வழக்கம் போல் வேடிக்கை பார்த்தபடி 'பிப்லி'யுடன் நடந்து  கொண்டிருந்தபோது,யார் வீட்டிலோ யாரையோ "ஏய்,சொரணை கெட்ட எருமை மாடே மணி ஏழாகப் போகுது.. எந்திரிச்சு தொலை" என்ற செம்மொழி தமிழோசை காதில் வந்து விழுந்தது.அது ஒரு பெண்மணியின் கனமான குரல்.விடியும்போதே திட்டு வாங்கிக் கொண்டு எழுந்திருக்கும் அந்த பெருமகனார் யாரோ? அடியேன் அறியேன்!

ஒரு வேளை அந்த அம்மணியின் மகனாக இருக்கலாம்... மகளாக இருக்கலாம்.... அல்லது கணவனாகக் கூட இருக்கலாம். யாராக இருந்தால் நமக்கென்ன? நம் சிந்தனை அதை பற்றியது அல்ல.  அந்த அம்மாளின் விளிப் பொருளாக இருந்த எருமையைப் பற்றியது

எருமையென்ன இப்படியெல்லாம் திட்டப்படலாமா  ? அது என்ன சொரணையில்லாத மிருகமா? என் கால்கள் முன்னோக்கி நடந்தாலும் மனம் பின்னோக்கி எனது இளமைக் கால கிராமத்து வாழ்க்கையை நோக்கி  நகர்ந்தது.

அப்பாவின் சொற்ப சம்பளத்தில் காலம் ஓட்டுவது கடினம் என்பதைப் புரிந்து கொண்ட அம்மா ,ஒரு எருமை மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்ய ஆசைப் பட்டார்கள். அந்த காலத்தில் அம்மாவின் பிறந்த வீட்டில் இஷ்டம் போல மாடு இருந்ததாம். பால் பண்ணையே நடந்ததாக அம்மா சொல்வார்கள். அதே போல் 'ஒரு எருமை மாட்டுடன் நாமும் ஆரம்பிக்கலாமே' என்பது அம்மாவின் ஆசை. அப்பாவும் சரி சொல்ல அம்மாவின் ரெட்டை வட சங்கிலி 'உள்ளே' போக வீட்டிற்குள்  வந்தது,எருமை மாடு.

அன்று மாலை, பள்ளிக் கூடம் விட்டவுடன் விளையாடக் கூடப் போகாமல், நானும் என் அண்ணனும் ஒரே ஓட்டமாக ஓடி வீடு அடைந்தோம். புறக்கடையில் சமர்த்தாக எருமை மாடு நின்று கொண்டிருந்தது. அதைச் சுற்றி சாணம். 'ஞொய்' என்று ஒரு வாசம் வீசியதையும் பொருட்படுத்தாமல் அண்ணனுடன் களமிறங்கினேன். மாட்டைச சுற்றி சுற்றி வந்தோம். பெருமை பிடிபடவில்லை எங்கள் இருவருக்கும். 'நம்ம வீட்டு மாடு...நம்ம மாடு' என்றெல்லாம் பாடிபாடி சுற்றி வந்தோம். எங்களின் சப்தத்தையோ , பாட்டையோ மாடு , ரசிக்க வேண்டாம்... அட்லீஸ்ட்.. சட்டை செய்ய வேண்டாமோ...? ம்ஹும்..ஒரு உணர்வையும் வெளிக் காட்டாமல் வாலை 'சொர்ட்..சொர்ட்'டென்று தன வயிறறுப் பகுதியில் அடித்துக் கொண்டிருந்தது. அம்மா வந்து எங்களிருவரையும் வீட்டிற்குள் இழுத்துச் சென்றார்கள்.

அந்த மாட்டுக்கு 'கீதா' என்று பெயர் வைத்தோம். 'ஏன் அப்படி ஒரு பெயர் தேர்ந்தெடுத்தோம்' என்றெல்லாம் நினைவில்லை. நாங்கள் 'கீதா' என்று அழைத்த போதெல்லாம் அது திரும்பிப் பார்க்கும்.. மூக்கின் த்வாரங்களுக்கு இடைப்பட்ட பகுதியை  சிணுங்கிக் கொள்ளும். அதன் வளைந்த கொம்புகளை ஆட்டும்.  தன பங்கிற்கு 'ங்கொய்..'யென்று ரீங்காரமாய் குரலெழுப்பும்.

அதற்கு சாப்பிட வைக்கோல், கட்டு கட்டாக வந்திறங்கியது. வீடு, அது வரை பார்த்தேயிராத பருத்திக் கொட்டையும், கடலைப் புண்ணாக்கும், மாட்டுத் தவிடும் மாட்டுக் கொட்டடிக்கு வந்தன. தினசரி இரவில் ஊற வைத்த பருத்திக் கொட்டையை விடியற்காலையில் அம்மாதான் அரைப்பார்கள்.  அதனுடன் தவிட்டைக்  கலந்து கொடுக்கும் போது கீதா உறிஞ்சிக் குடிக்கும் அழகே அழகு. அப்படிக் குடித்து குடித்து மாடு நன்றாகவே பால் கறந்தது. சிவன் கோயிலில் மணியடிக்கும் மூக்கையன் அண்ட்ராயர்  தெரிய வேஷ்டி கட்டியபடி வந்து பால் கறந்து கொடுத்துப் போவான்.

கிட்டத்தட்ட 2 வருஷங்கள் கீதா, எங்கள் வீட்டின்  செல்லப் பிராணியாக இருந்து ஒழுங்காக பால் கொடுத்து எங்களின் பொருளாதார நிலையை  கணிசமாக உயர்த்தியது.
அப்பாவிற்கு ஒரு ப்ரோமோஷன் வந்த காரணத்தினாலும் அதை விட அம்மாவின் இயலாமையினாலும் கீதாவை விற்று விட முடிவு செய்தார்கள்.

இரண்டு மூன்று ஆட்கள் வந்து பார்த்தார்கள்.அவர்களில் ஒருவர் மட்டும் நல்ல விலைக்கு  பேசியதால் அவரிடமே கொடுத்துவிடலாம் என்று பேசப்பட்டது. 15 கி.மீ
தள்ளியிருந்த அந்த  கிராமத்து மனிதர் ஓட்டிக்கொண்டு போவதற்காக வந்தார்.  அன்று இரவு எங்கள் வீட்டில் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுக்கப்போவதற்கு முன் பைசா பட்டுவாடாவை சரி செய்தார்.

அதிகாலை மூன்று மணிக்கு அப்பா,அம்மா,அந்த மனிதர் மூவரும் எழுந்து கொண்டனர். எனக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. எழுந்து கொண்டு அவர்களுடன் கொட்டடிக்குப் போனேன். கீதாவை புது மூக்கனாங்கயறு கொண்டு கட்டினார். அவர் அதை இழுத்தபோது பயங்கரமாக முரண்டு பிடித்தது. 'வர மாட்டேன்' என்பதாகப்  பட்டது எனக்கு. "சாமி.. ஊரெல்லை வரைக்கும் நீங்க வாங்க ... அப்பத்தான் இதை ஓட்டிகிட்டுப் போக முடியும்...
இல்லைனா சண்டித் தனம் பண்ணும்" என்றார், அந்த மனிதர். அப்பா, அம்மா இரண்டு பேருமே மாட்டை ஓட்டிக் கொண்டு போனார்கள். கீதா, திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே போனது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

அது 'ங்கொய்..'யென்று அடி வயிற்றிலிருந்து கத்திகொண்டே போனதாம். அதன் கண்களிலிருந்து 'பொல..பொல'வென்று கண்ணீர். அம்மாவிற்கு மனசே கேட்கவில்லையாம். என்ன செய்வது? ஊர் எல்லை வரை அப்பாவும் அம்மாவும் பொய் விட்டு வந்தார்கள்.

இந்த நிகழ்விற்குப் பிறகு  'எருமை மாடு' என்று யார், யாரைத் திட்டினாலும் எனக்கு 'சுறு சுறு..' என கோபம் வரும். 'எருமைக்கும் உணர்வுகள் உண்டு' என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என நினைப்பேன்.

மீண்டும் என்னை ஒரு முறை 'கீதா'வைப் பற்றி நினைக்க வைத்த என் ஞாபக மறதிக்கு நன்றி !! நாளை முதல் மறக்காமல் ஹெட் போனை மாட்டிக்கொண்டு 'வாக்கிங்கிற்கு இறங்க வேணும் !!! யார் யாரை வேண்டுமானாலும் எப்படியேனும் திட்டிக் கொள்ளட்டும்.

Friday, October 15, 2010

எதற்காக 'ப்ளாக்' என்று நினைத்தபோது, மனதுக்குள் ஓர் உதைப்பு. என்ன எழுதப்போகிறாய் என்று கேட்டது? நிகழ்வுகளை,ஒரு காலத்தில் எழுதப்பட்டு பிரசுரமான என் கதைகளை,எழுதப்பட்டும் பிரசுரிக்கபடாத பல படைப்புகளை - இதில் ஏற்றலாமே என்ற எண்ணம் என்றேன். 'சரி' என்றது.
அது மட்டுமில்லை... என் இனிய நண்பர்களும்,புலம் பெயர்ந்த தமிழ் நல்லோர் பலரும் தொடர்ந்து என் படைப்புகளை காண வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த முயற்சியை தொடங்குகிறேன். இது காலத்தின் கட்டாயமாகி விட்டது.... நேரத்தின் நிர்ப்பந்தமாகி விட்டது.
இந்த மாதிரியான 'ப்ளாக்' விஷயத்தில் எனது முன்னோடியாக திகழும் ஆ.நிவாஸ் ராமமூர்த்தியின் அன்பு கட்டளையை நிறைவேற்றும் எண்ணமே இந்த முயற்சி.
நிகழ்வுகளை பதிவு செய்கையில் மிகுந்த கவனம் தேவை ...எவர் மனதும் புண்படலாகாது என்று எனக்கு கோரிக்கை விடுத்த நார்வே நண்பர் இளங்கோவிற்கு எனது பதில் நேர்மறையானதே! கவலைப்பட வேண்டாம் நண்பரே...
சரி  விஷயத்திற்கு வருவோம்..உங்களையெல்லாம் அதிகம் காக்க வைக்காமல் எனது படைப்பு மிக விரைவில் பதியப்பட இருக்கிறது... உங்களின் அன்பான ஆலோசனைகளையும்  , விமரிசனங்களையும் வேண்டி எழுத தொடங்குகிறேன்.

அன்பன்,
எல்லென்

Monday, October 11, 2010

pirindhom! sandhippom!!

அன்புள்ள தமிழ் இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் ,
இன்று புதியதாய் பிறந்திருக்கும் என்னை வாழ்த்தி வரவேற்கும் உங்களுக்கு தலை வணங்குகிறேன் .
பிறக்கும்போதே  பெயர் தாங்கும் பெருமையை என்னென்பது...அதுவும், என் விருப்ப பெயருடன் ஜனனம் தந்த கணினி தொழில் நுட்பத்திற்கு நன்றிகள் ஆயிரமாயிரம் !!
இனி தொடரும் எமது படைப்புகள் .உங்கள் ஆசிகளுடன்.

அன்பன்
எல்லென்