Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, July 1, 2012

திருப்திதானே....





அழுவது தெரியப்படாமல் தண்ணீரில் இருந்தேன்...

என்னை தரையில் தூக்கிப் போட்டு

துடிப்பதை ரசித்தாய்...

உயிர் பறக்கும் தருணம் பார்த்து மீண்டும் நீரில் விட்டாய்.....

பிழைத்தபின்,

 மறுபடியும் தரையில் போட்டாய்.....

 துடித்தேன் .....
.
.
.
.
.
.
எனக்கோ உயிர்த்துடிப்பு...

உனக்கோ அதுவும் ஒரு விளையாட்டு....

ஓவிய மரியாதை

              ல்லா காலத்திலும் ஓவியத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது. இதை உணர்த்தும் வண்ணம் எனக்கு 1995-இல் நேர்ந்த அனுபவம் இது.

              அலுவல் நிமித்தமாக 1995, மே மாதம் 5-ஆம்தேதி  திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி செல்கிறேன்...அந்த இரண்டடுக்கு குளிர்பதன ’கோச்’சில் என்னுடன் பயணித்தவர்களில் இருவர் மிக நெருக்கமாயினர். அந்த இருவரும் சகோதரர்கள்..டெல்லியில் கணிணி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ’ஹிந்தி’யர்கள். தி.புரம் வரை அவர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கிடந்தது. எனவே அடிக்கடி பயணிப்பர். அண்ணன் தம்பிக்குள் அப்படியோர் அன்னியோன்னியம்...

                ஆரம்பத்தில் நானும் கொண்டுபோயிருந்த புத்தகங்களை மேய்ந்தேன்...டைரி எழுதினேன்....வேளாவேளைக்கு சாப்பிட்டு,ஜன்னல் வழி வேடிக்கைப் பார்த்து ஓய்ந்தேன்...அந்த சந்தர்ப்பத்தில் சகோதரர்களில் சின்னவரை வரையத்தோன்றவே பென்சில், பேப்பர் சகிதம் அமர்ந்து வரைந்தேன். எனக்கே ஆச்சர்யம்...அந்த இளைஞனின் முகம் அசத்தலாய் பேப்பரில் வந்து விட்டது.

                அவனிடம் காண்பித்தால் அவனோ,”ஆஹ்ஹா....ஓஹ்ஹோ”என்று ஹிந்தியில் பாராட்டி என்னைக் கட்டிக்கொண்டு முதுகில் தட்டுகிறான்.. அவன் அண்ணனோ ஒரு படி மேலே போய் “இந்த முறை நீ எங்கள் வீட்டிற்கு வந்தேயாக வேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டான்.

                  சென்றேன்.
                  
                   ராஜோபசாரம்...அவர்களுடைய அப்பாவும் அம்மாவும் தங்கள் மகனின் படத்தைப் பார்த்து விட்டு என்னை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். ‘என்ன பிரமாதமாக செய்து விட்டேன் ? ’ என்று எனக்கோ உயிர் கூசுகிறது...’விட்டால் போதுமடா சாமி’ என்று குலதெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

                  எல்லாம் ஆயிற்று...அன்று மாலை என்னை என் அலுவலகத்திற்கு தங்கள் காரிலேயே கொண்டு வந்து விட்டார்கள்...இல்லையெனில், கிடைக்கும் சர்தார்ஜி ஆட்டோக்காரரிடம்”மே கிங்ஸ்வே கேம்ப் ஜானா சாஹியே” என்று ஓட்டை ஹிந்தியில் உளறிக்கொட்டி கிளறியிருப்பேன்.

                  ஆங்...இந்தப் படம்..  டெல்லி சென்ற வேலை முடிந்து தி.புரம் திரும்பும்போது அந்த டெல்லி சகோதரர்களின் தந்தையை மனதுள் வாங்கி
வரைந்து அவர்களுக்கு அனுப்பினேன்...


முகங்கள்...

             வேலையில்லாமல் வெட்டி ஆஃபீசராக ஊரை கிரிவலம் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் வரைந்த படம்... இன்றைக்கும் என் அப்பா ”அதெப்படி ஒவ்வோரு முகத்துலயும் உயிர் இருக்கிறா மாதிரி வரஞ்சே..” என்று சிலாகித்துப் பாராட்டும் படம்...  


Sunday, June 10, 2012

காற்று வெளியிடை...

Tuesday, April 24, 2012

நல்லாசிரியருக்கு ஒரு பாராட்டு கவிதை !

       மிக நீண்ண்...ட இடைவெளிக்குப் பின் கவிதை ஒன்றுடன் களமிறங்குகிறேன். இந்த கவிதை என் நண்பரும் , ஆத்மார்த்த ஆலோசகருமான திரு. சிவசுப்ரமணியன் அவர்கள் தமிழக அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றபோது அவரைப் பாராட்டி வரையப் பெற்றது.
(2010 - ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று வள்ளுவர் கோட்டத்தில் விழா நடைபெற்றது)




கடந்து சென்ற
ஐம்பத்தொரு ஆசிரியர் தினங்களில்
இரண்டு ஆசிரியர் தினங்கள்
மனப்பாறையில் உறைகின்றன.

எட்டாம் வகுப்பை 
எட்டிப் பிடித்தபோது வந்த ஆசிரியர் தினம் 
முதன்மையானது....
”இவரா....? சிறியர்” என ஏளனமாய் 
எம்மை எட்டித் தள்ளாமல்
“இவரே...இன்று நம் ஆசிரியர்”
என்று ஐவரை மேடையேற்றி
பயிற்றுவிக்க அன்பாய் ஆணையிட்டார் எம் தமிழய்யா...
அவ்வைவரில் அடியேனும் (அடக்கத்துடன்) அடக்கம்.
நண்பன் அப்துல் கஃபூர் ,செய்யுள் ஒன்றை 
எம் மூளைக்குள் செலுத்த முயற்சிக்க
‘தட..தட’வென அவனுக்கு கைதட்டல்கள்!!
‘கிடு..கிடு’வென கால்கள் நடுங்க 
மேடையேறினேன் அடுத்ததாக...
பகுபத உறுப்பிலக்கணத்தை அஸ்திரமாகக் கையிலெடுத்தேன்...
தேமாவையும், புளிமாவையும் 
அடித்துத் துவைத்து அம்பலத்தில் உலர்த்தினேன்
திருவரங்கக் கலம்பகத்திலிருந்து
‘கொற்றவன் தன் திருமுகத்தை’
உணர்ச்சி பொங்க ஒப்புவித்தேன்...
தமிழய்யா என்னைக் கட்டிப் பிடித்து ‘உன்னதம்’
என்று உச்சி மோந்தார்...

அடுத்த ஆசிரியர் தினம்....
இரண்டாயிரத்துப் பத்தின் இனிய தினம்....
எமதருமை நண்பர் திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு
’நல்லாசிரியர்’ அங்கீகாரம் கிடைத்த அற்புத தினம்...

ஆசிரியப் பணி அறப்பணி....
அதை அற்புதப் பணியாக சிறப்பு செய்யும்
சிங்கார நண்பரே....சிவசுப்ரமணியனாரே....


எண்பத்தைந்தாம் வருடம்
 நாம்
சந்தித்த நாள் முதலாய் 
சற்றும் குறையாது இருப்பது அதே உற்சாகம்...
முன்நெற்றியில் வீழும் முடியை
லாவகமாய் புறம் தள்ளியதைப் போலவே
எந்தன் 
கலவையான கவலைகளையும்
புறம் தள்ள கற்றுத் தந்தீர்கள் !  
என் இதயம் துவண்ட போதெல்லாம்
உங்களின் வெண்கலக் குரலால் 
வேதனையை வெட்டி விட்டீர்கள்....

ஒரு முறை,
பள்ளிக் கட்டிடம் சரியாகவில்லை
என்பதற்காக
போராடிப் போராடி,
மாணவர்க்காக
வாதாடி வாதாடி,
புதுக் கட்டிட அனுமதி பெற்ற
கதையை ஆயாசமாய்க் கூறினீர்கள்...
கட்டிடத்திற்கான செங்கல்லை மட்டும் நீங்கள்
அடுக்கவில்லை...
அடுத்த தலைமுறைக்கான
உங்கள் அக்கறையையும் சேர்த்து அடுக்கினீர்கள்...!!

கனிவையும், கண்டிப்பையும்
மாணவர்க்கு சரிவிகிதமாகக் கலந்து
இனிப்பாய் கசப்பு மாத்திரைகளை
உவகையுடன் ஊட்டினீர்கள்...
உங்கள் மாணவர்கள் 
உயரும் உயரம் கண்டு
உண்மையாய்ப் பூரித்தீர்கள்...

பொதுத்தேர்வை  
எதிர்கொள்வோரை 
புது விதமாய் பயிற்றினீர்கள்...
ஆம்.... வயிற்றிற்கு ஈய வைத்து
செவிக்குண(ர்)வும் தந்தீர்கள்...

ஒவ்வொரு மாணவனையும்
தன் மகன் போல் பாவித்தீர்கள்.....
அதே போல்,
தன் மகனையும் ஒரு மாணவனாகவே
எண்ணி வளர்த்தீர்கள்...

’வருத்தமில்லா வயோதிகர்’
சங்கத்தலைவனான எனக்கும் கூட
இரு வருத்தங்கள் உண்டு...
ஒன்று...
உங்களின் மாணவனாக முடியவில்லையே என்பது ,
மற்றது,
இந்’நல்லாசிரியர்’ விருது
சற்றே தாமத அங்கீகாரம் என்பது...

கரும்பலகை
என்றைக்கும் உங்களிடத்தில் 
வெறும்பலகையாய் இருந்ததில்லை...
தினம் ஒரு திருக்குறள் 
அலங்கரிக்கும் பெரும்பலகை அது...

நன்றி மறப்பது நன்றன்று
என்றுரைத்த வள்ளுவப் பெருந்தகை
தம்மை மறவாதிருந்த
உம்மை சிறப்பு செய்து
விருது கொடுத்து
அழகுப் பார்க்க அழைத்துள்ளான்
தம் வள்ளுவக் கோட்டத்திற்கு!!

வாழிய உங்கள் கல்வித்தொண்டு!!!